சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அடையார் புரம் மூன்றும் அனல்வாய்
பண் - குறிஞ்சி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vgzGfOazfPA
2.103   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புல்கு பொன் நிறம் புரி
பண் - நட்டராகம்   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=v_lDttoXUC4
3.093   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   படியுள் ஆர் விடையினர், பாய்
பண் - சாதாரி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dsEr-9XjUeE

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.083   அடையார் புரம் மூன்றும் அனல்வாய்  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருஅம்பர்மாகாளம் ; (திருத்தலம் அருள்தரு பட்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு காளகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து,
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும்
சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே.

[1]
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி,
வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய,
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே.

[2]
திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி,
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய,
நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும்
உரையாதவர்கள்மேல் ஒழியா, ஊனமே.

[3]
கொந்து அண் பொழில்-சோலைக் கோல வரிவண்டு,
மந்தம், மலி அம்பர்மாகாளம் மேய,
கந்தம் கமழ்கொன்றை கமழ் புன்சடை வைத்த,
எந்தை கழல் ஏத்த, இடர் வந்து அடையாவே.

[4]
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகம் ஆய்,
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
துணி ஆர் உடையினான் துதை பொன்கழல் நாளும்
பணியாதவர் தம்மேல் பறையா, பாவமே.

[5]
பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி மாந்தி,
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
விண்டார் புரம் வேவ மேருச் சிலை ஆகக்
கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்றமே.

[6]
மிளிரும் அரவோடு வெள்ளைப்பிறை சூடி,
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த,
தளரும், உறு நோய்கள்; சாரும், தவம்தானே.

[7]
கொலை ஆர் மழுவோடு கோலச்சிலை ஏந்தி,
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
இலை ஆர் திரிசூலப்படையான் கழல் நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா, வினைதானே.

[8]
சிறை ஆர் வரிவண்டு தேன் உண்டு இசை பாட,
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா,
இறையான் கழல் ஏத்த, எய்தும், இன்பமே.

[9]
மாசு ஊர் வடிவினார், மண்டை உணல் கொள்வார்,
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல;
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஈசா! என்பார்கட்கு இல்லை, இடர்தானே.

[10]
வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்-
திருமாமறை ஞானசம்பந்தன சேண் ஆர்
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி
உருகா, உரை செய்வார் உயர்வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.103   புல்கு பொன் நிறம் புரி  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருஅம்பர்மாகாளம் ; (திருத்தலம் அருள்தரு பட்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு காளகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடிப் போழ் இளமதி
சூடி,
பில்கு தேன் உடை நறு மலர்க் கொன்றையும் பிணையல்
செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம்,
அல்லும் நண் பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை
அடையாவே.

[1]
அரவம் ஆட்டுவர்; அம் துகில் புலி அதள்; அங்கையில்
அனல் ஏந்தி,
இரவும் ஆடுவர்; இவை இவர் சரிதைகள்! இசைவன,
பலபூதம்;
மரவம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்,
மாகாளம்
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன்
தலைப்படுவாரே.

[2]
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரைகழல் அடி
சேரக்
கணங்கள் பாடவும், கண்டவர் பரவவும், கருத்து அறிந்தவர்
மேய
மணம் கொள் பூம்பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை
அடையாவே.

[3]
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர், கேடு இலர், இழை வளர்
நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர்,
மேய
மங்குல் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்,
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை
உடையாரே.

[4]
நெதியம் என் உள? போகம் மற்று என் உள? நிலம்மிசை
நலம் ஆய
கதியம் என் உள? வானவர் என் உளர்? கருதிய பொருள்
கூடில்
மதியம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்,
புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல்
புரிந்தோர்க்கே.

[5]
கண் உலாவிய கதிர் ஒளி முடிமிசைக் கனல் விடு சுடர்
நாகம்,
தெண் நிலாவொடு, திலகமும், நகுதலை, திகழ வைத்தவர்
மேய
மண் உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர், இவ் உலகினில்
உயர்வாரே.

[6]
தூசு தான் அரைத் தோல் உடை, கண்ணி அம் சுடர்விடு
நறுங்கொன்றை,
பூசு வெண்பொடிப் பூசுவது, அன்றியும், புகழ் புரிந்தவர்
மேய
மாசு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
பேசு நீர்மையர் யாவர், இவ் உலகினில் பெருமையைப்
பெறுவாரே.

[7]
பவ்வம் ஆர் கடல் இலங்கையர் கோன் தனைப் பருவரைக்
கீழ் ஊன்றி,
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள் செய்த
இறையவன் உறை கோயில்
மவ்வம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனல் இடைச்
செதிள் அன்றே!

[8]
உய்யும் காரணம் உண்டு என்று கருதுமின்! ஒளி கிளர்
மலரோனும்,
பை கொள் பாம்பு அணைப்பள்ளி கொள் அண்ணலும்,
பரவ நின்றவர் மேய
மை உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
கையினால் தொழுது, அவலமும் பிணியும் தம் கவலையும்
களைவாரே.

[9]
பிண்டிபாலரும், மண்டை கொள் தேரரும், பீலி கொண்டு
உழல்வாரும்,
கண்ட நூலரும், கடுந் தொழிலாளரும், கழற நின்றவர் மேய
வண்டு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்,
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அறப் பரவுதல்
செய்வோமே.

[10]
மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை, ஏறு அமர் பெருமானை,
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.093   படியுள் ஆர் விடையினர், பாய்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருஅம்பர்மாகாளம் ; (திருத்தலம் அருள்தரு பட்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு காளகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
படியுள் ஆர் விடையினர், பாய் புலித்தோலினர், பாவநாசர்
பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர், பூணநூலர்,
கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை
மங்கையோடும்
அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.

[1]
கையில் மான் மழுவினர், கடுவிடம் உண்ட எம் காளகண்டர்
செய்ய மா மேனியர், ஊன் அமர் உடைதலைப் பலி திரிவார்
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ, நடம் அது ஆடும்
ஐயன், மா தேவியோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

[2]
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர், பரிவு இலார் பால்
கரவினர், கனல் அன உருவினர், படுதலைப் பலிகொடு ஏகும்
இரவினர், பகல் எரிகான் இடை ஆடிய வேடர், பூணும்
அரவினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

[3]
நீற்றினர், நீண்ட வார்சடையினர், படையினர், நிமலர், வெள்
ஏற்றினர், எரி புரி கரத்தினர், புரத்து உளார் உயிரை வவ்வும்
கூற்றினர், கொடியிடை முனிவு உற நனி வரும் குலவு கங்கை-
ஆற்றினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

[4]
புறத்தினர், அகத்து உளர், போற்றி நின்று அழுது எழும்
அன்பர் சிந்தைத்
திறத்தினர், அறிவு இலாச் செதுமதித் தக்கன் தன் வேள்வி செற்ற
மறத்தினர், மாதவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள் புரிந்த
அறத்தினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

[5]
பழக மா மலர் பறித்து, இண்டை கொண்டு, இறைஞ்சுவார் பால் செறிந்த
குழகனார், குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற
கழகனார், கரி உரித்து ஆடு கங்காளர், நம் காளி ஏத்தும்
அழகனார், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

[6]
சங்க வார் குழையினர், தழல் அன உருவினர், தமது அருகே
எங்கும் ஆய் இருந்தவர், அருந்தவ முனிவருக்கு அளித்து உகந்தார்
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி
அங்கம் ஆறு ஓதுவார், இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

[7]
பொரு சிலை மதனனைப் பொடிபட விழித்தவர், பொழில் இலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழ் உற அடர்த்தவர், கோயில் கூறில்
பெரு சிலை, நல மணி, பீலியோடு, ஏலமும், பெருக நுந்தும்
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம் தானே.

[8]
வரி அரா அதனிசைத் துயின்றவன் தானும், மா மலர் உளானும்,
எரியரா, அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து, பின்னும்
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய், பணிவு இலாதவருக்கு என்றும்
அரியராய், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

[9]
சாக்கியக்கயவர், வன் தலை பறிக்கையரும், பொய்யினால் நூல்
ஆக்கிய மொழி அவை பிழையவை; ஆதலில், வழிபடுவீர்
வீக்கிய அரவு உடைக் கச்சையான், இச்சை ஆனவர்கட்கு எல்லாம்
ஆக்கிய அரன், உறை அம்பர்மாகாளமே அடைமின், நீரே!

[10]
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வருபுனல்
அரிசில் சூழ்ந்த
அம்பர் மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை,
கம்பின் ஆர் நெடுமதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன
நம்பி, நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம், வினை; நலம்
பெறுவர், தாமே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list