சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மை ஆடிய கண்டன், மலை
பண் - நட்டபாடை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jcWixEfewp0
4.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலனை வீழச் செற்ற கழல்
பண் - திருநேரிசை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=6AoKNFcSvk4
4.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   பார் இடம் சாடிய பல்
பண் - திருவிருத்தம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xOSrrpCR2YY
5.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
பண் - திருக்குறுந்தொகை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ENhJ98FOXU0
6.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   வகை எலாம் உடையாயும் நீயே
பண் - திருத்தாண்டகம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AFH4Ba5tTRo
6.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
பண் - திருத்தாண்டகம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=eDHS5pl3gwA

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.015   மை ஆடிய கண்டன், மலை  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருநெய்த்தானம் ; (திருத்தலம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி )
மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்
நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!

[1]
பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்;
பிறையும், புனல், அரவும், படு சடை எம்பெருமான் ஊர்
அறையும், புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல்,
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே!

[2]
பேய் ஆயின பாட, பெரு நடம் ஆடிய பெருமான்,
வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான்,
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்,
நே ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!

[3]
சுடு நீறு அணி அண்ணல், சுடர் சூலம் அனல் ஏந்தி,
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன், உறைவு இடம் ஆம்
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான்,
நெடுவாளைகள் குதிகொள் உயர் நெய்த்தானம் எனீரே!

[4]
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி,
பகரா வருபுனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும்,
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய, நெய்த்தான-
நகரான் அடி ஏத்த, நமை நடலை அடையாவே.

[5]
விடை ஆர் கொடி உடைய அணல், வீந்தார் வெளை எலும்பும்
உடையார், நறுமாலை சடை உடையார் அவர், மேய,
புடையே புனல் பாயும், வயல் பொழில் சூழ்ந்த, நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே.

[6]
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழல் ஆனவன், அனல் அங்கையில் ஏந்தி, அழகு ஆய
கழலான் அடி நாளும் கழலாதே, விடல் இன்றித்
தொழலார் அவர் நாளும் துயர் இன்றித் தொழுவாரே.

[7]
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான், இருபது தோள் இற ஊன்றி,
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ,
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே.

[8]
கோலம் முடி நெடு மாலொடு, கொய் தாமரை யானும்,
சீலம் அறிவு அரிது ஆய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்,
காலம் பெற, மலர் நீர் அவை தூவித் தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.

[9]
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்,
புத்தர் அவர், சொன்ன மொழி பொருளா நினையேன் மின்!
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும்
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.

[10]
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்,
சில மல்கிய செல்வன் அடி சேர்வர், சிவ கதியே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.037   காலனை வீழச் செற்ற கழல்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருநெய்த்தானம் ; (திருத்தலம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி )
காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே.

[1]
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி,
தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து,
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வு உற நினைந்த ஆறே!

[2]
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன்; ஊழிஆய
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று
குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடல் ஆமே.

[3]
வடி தரு மழு ஒன்று ஏந்தி, வார்சடை மதியம் வைத்து
பொடி தரு மேனிமேலே புரிதரு நூலர் போலும்-
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி,
அடி தரு கழல்கள் ஆர்ப்ப, ஆடும் எம் அண்ணலாரே.

[4]
காடு இடம் ஆக நின்று, கனல்- எரி கையில் ஏந்தி,
பாடிய பூதம் சூழ, பண் உடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர், சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும்
கூடிய குழகனாரைக் கூடும் ஆறு அறிகிலேனே!

[5]
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ,
தான் அவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன்; செங்கண் ஏற்றன்;
தேன் அமர் பொழில்கள் சூழத் திகழும் நெய்த்தானம் மேய
கூன் இளமதியினானைக் கூடும் ஆறு அறிகிலேனே!

[6]
கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில் வீசி,
ஞாலமும் குழிய நின்று, நட்டம் அது ஆடுகின்ற
மேலவர்-முகடு தோய விரிசடை திசைகள் பாய
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே.

[7]
பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து
அந்திப்போது அனலும் ஆடி, அடிகள், ஐயாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்
சிந்திப்பார் சிந்தை உள்ளார்-திருந்து நெய்த்தானனாரே.

[8]
சோதி ஆய்ச் சுடரும் ஆனார்; சுண்ணவெண்சாந்து பூசி
ஓதி வாய் உலகம் ஏத்த, உகந்து தாம் அருள்கள் செய்வார்
ஆதி ஆய் அந்தம் ஆனார்-யாவரும் இறைஞ்சி ஏத்த,
நீதி ஆய் நியமம் ஆகி, நின்ற நெய்த்தானனாரே.

[9]
இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத்
தலைஉடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து,
சிலை உடன் கணையைச் சேர்த்து, திரிபுரம் எரியச் செற்ற
நிலை உடை அடிகள் போலும்-நின்ற நெய்த்தானனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.089   பார் இடம் சாடிய பல்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருநெய்த்தானம் ; (திருத்தலம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி )
பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருள
கார் அடைந்த(க்) கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இவ் உலகில் பலி கொள்வது நாம் அறியோம்-
நீர் அடைந்த(க்) கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

[1]
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்! நின் திருச்சடை மேல்
பாய்ந்த கங்கைப் புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப,
ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!-அடியேற்கு உரை நீ,
ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே!

[2]
கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம், ஒன்னார் மதில் மேல்
சென்று அடைந்து ஆடி, பொருததும், -தேசம் எல்லாம் அறியும்;-
குன்று அடைந்து ஆடும் குளிர்ப்பொழில் காவிரியின் கரை மேல்,
சென்று அடைந்தார் வினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே!

[3]
கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து
நட்டம் பல பயின்று ஆடுவர்; நாகம் அரைக்கு அசைத்துச்
சிட்டர் திரிபுரம் தீ எழச் செற்ற சிலை உடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

[4]
கொய்ம் மலர்க் கொன்றை, துழாய், வன்னி, மத்தமும், கூவிளமும்,
மொய்ம்மலர், வேய்ந்த விரிசடைக்கற்றை விண்ணோர் பெருமான்;
மைம்மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர் பால் மகிழ்ந்தான்;
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே.

[5]
பூந்தார் நறுங் கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து
கூர்ந்து ஆர் விடையினை ஏறி, பல் பூதப்படை நடுவே
போந்தார்-புற இசை பாடவும் ஆடவும் கேட்டு அருளிச்
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே.

[6]
பற்றின பாம்பன்; படுத்த புலி உரித்-தோல் உடையன்;
முற்றின மூன்றும் மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்;
சுற்றிய பூதப்படையினன்சூலம் மழு ஒருமான்,
செற்று நம் தீவினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே.

[7]
விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம் உண்ட கண்டன்;
உரித்த கரிஉரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே-
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டு கொண்ட,
தரித்த உமையவளோடு, நெய்த்தானத்து இருந்தவனே.

[8]
தூங்கான்; துளங்கான்; துழாய், கொன்றை, துன்னிய செஞ்சடை மேல்
வாங்கா மதியமும், வாள் அரவும், கங்கை, தான் புனைந்தான்;
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து
நீங்கான், உமையவளோடு; நெய்த்தானத்து இருந்தவனே.

[9]
ஊட்டி நின்றான், பொரு வானில் அம் மும்மதில் தீ; அம்பினால்
மாட்டி நின்றான்; அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டி நின்றான்; கதமாக் கங்கை பாய ஓர் வார்சடையை
நீட்டி நின்றான்திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.034   கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருநெய்த்தானம் ; (திருத்தலம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி )
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன்,
நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச்
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.

[1]
இரவனை, இடு வெண்தலை ஏந்தியை,
பரவனை, படையார் மதில் மூன்றையும்
நிரவனை, நிலைஆன நெய்த்தானனை,
குரவனை, தொழுவார் கொடிவாணரே.

[2]
ஆன் இடைஐந்தும் ஆடுவர்; ஆர் இருள்
கான் இடை நடம் ஆடுவர்; காண்மினோ!
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை
வான் இடைத் தொழுவார் வலிவாணரே.

[3]
விண்டவர் புரம்மூன்றும் வெண் நீறு எழக்
கண்டவன், கடிது ஆகிய நஞ்சினை
உண்டவன்(ன்), ஒளி ஆன நெய்த்தானனைத்
தொண்டராய்த் தொழுவார் சுடர்வாணரே.

[4]
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்,
நங்கையோடு நவின்ற நெய்த்தானனைத்
தம் கையால்-தொழுவார் தலைவாணரே.

[5]
சுட்ட நீறு மெய் பூசி, சுடலையுள்
நட்டம் ஆடுவர், நள் இருள் பேயொடே;
சிட்டர், வானவர், தேரும் நெய்த்தானனை
இட்டம் ஆய்த் தொழுவார் இன்பவாணரே.

[6]
கொள்ளித் தீ-எரி வீசிக் கொடியது ஓர்
கள்ளிக் காட்டு இடை ஆடுவர்; காண்மினோ!
தெள்ளித் தேறித் தெளிந்து நெய்த்தானனை
உள்ளத்தால்-தொழுவார் உம்பர்வாணரே.

[7]
உச்சிமேல் விளங்கும்(ம்) இளவெண்பிறை
பற்றி ஆடு அரவோடும் சடைப் பெய்தான்,
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனைச்
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே.

[8]
மாலொடும், மறை ஓதிய நான்முகன்,
காலொடும் முடி காண்பு அரிது ஆயினான்;
சேலொடும் செருச் செய்யும் நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே.

[9]
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார்
புரிந்து கைந்நரம்போடு இசை பாடலும்
பரிந்தனை, பணிவார் வினை பாறுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.041   வகை எலாம் உடையாயும் நீயே  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருநெய்த்தானம் ; (திருத்தலம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி )
வகை எலாம் உடையாயும் நீயே என்றும், வான் கயிலை மேவினாய் நீயே என்றும்,
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும், வெண்காடு மேவினாய் நீயே என்றும்,
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும், பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்,
திகை எலாம் தொழச் செல்வாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[1]
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும்,   ஆதிக்கயிலாயன் நீயே என்றும்,
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும், கோடிகா மேய குழகா! என்றும்,
பார்த்தற்கு அருள் செய்தாய் நீயே என்றும்,   பழையனூர் மேவிய பண்பா! என்றும்,
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[2]
அல் ஆய்ப் பகல் ஆனாய் நீயே என்றும், ஆதிக் கயிலாயன் நீயே என்றும்,
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும், காளத்திக் கற்பகமும் நீயே என்றும்,
சொல் ஆய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும், சோற்றுத்துறை உறைவாய் நீயே என்றும்,
செல் வாய்த் திரு ஆனாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[3]
மின் நேர் இடைபங்கன் நீயே என்றும், வெண் கயிலை மேவினாய் நீயே என்றும்,
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும், பூதகண நாதன் நீயே என்றும்,
என் நா இரதத்தாய் நீயே என்றும், ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்,
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[4]
முந்தி இருந்தாயும் நீயே என்றும், முன் கயிலை மேவினாய் நீயே என்றும்,
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும், நடம்   ஆடி நள்ளாறன் நீயே என்றும்,
பந்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும்,
சித்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[5]
தக்கார் அடியார்க்கு நீயே என்றும், தலை ஆர் கயிலாயன் நீயே என்றும்,
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும், ஆக்கூரில்- தான் தோன்றி நீயே என்றும்,
புக்கு ஆய ஏழ் உலகும் நீயே என்றும், புள்ளிருக்கு வேளுராய் நீயே என்றும்,
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[6]
புகழும் பெருமையாய் நீயே என்றும், பூங் கயிலை மேவினாய் நீயே என்றும்,
இகழும் தலை ஏந்தி நீயே என்றும், இராமேச்சுரத்து   இன்பன் நீயே என்றும்,
அகழும் மதில் உடையாய் நீயே என்றும், ஆலவாய் மேவினாய் நீயே என்றும்,
திகழும் மதிசூடி நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[7]
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும்,   வானக் கயிலாயன் நீயே என்றும்,
கானம் நடம் ஆடி நீயே என்றும், கடவூரில் வீரட்டன் நீயே என்றும்,
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும், ஒற்றியூர்   ஆரூராய் நீயே என்றும்,
தேன் ஆய் அமுது ஆனாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[8]
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும், தலை
ஆர் கயிலாயன் நீயே என்றும்,
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும்,
ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்,
முந்திய முக்கணாய் நீயே என்றும், மூவலூர்
  மேவினாய் நீயே என்றும்,
சிந்தையாய், தேனூராய் நீயே என்றும், நின்ற
நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[9]
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும்; வான் கயிலை மேவினாய் நீயே என்றும்;
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும்; வீழிமிழலையாய் நீயே என்றும்;
அறத்தாய், அமுது ஈந்தாய் நீயே என்றும்; யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு,
பொறுத்தாய், புலன் ஐந்தும், நீயே என்றும்; நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.042   மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருநெய்த்தானம் ; (திருத்தலம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி )
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறை முடித்து, வினைக்குக் கூடு ஆம்
இத் தானத்து இருந்து, இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி! இயம்பக் கேள்: ஏழை நெஞ்சே!
மைத்து ஆன நீள் நயனி பங்கன், வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன், மேய
நெய்த்தான நன்நகர் என்று ஏத்தி நின்று, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[1]
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை-இது நீங்கல் ஆம்; விதி உண்டு என்று சொல்ல
வேண்டாவே; நெஞ்சமே! விளம்பக் கேள், நீ; விண்ணவர் தம் பெருமானார், மண்ணில் என்னை
ஆண்டான், அன்று அரு வரையால் புரம்மூன்று எய்த அம்மானை, அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான், உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[2]
பரவிப் பலபலவும் தேடி, ஓடி, பாழ் ஆம் குரம்பை   இடைக் கிடந்து, வாளா
குரவி, குடிவாழ்க்கை வாழ எண்ணி, குலைகை தவிர், நெஞ்சே! கூறக் கேள், நீ;
இரவிக்குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம்
நிரவிக்க(அ)அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[3]
அலை ஆர் வினைத் திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு, உள் ஆசை எனும் பாசம் தன்னுள்
தலை ஆய், கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து   தளர்ந்து, மிக, நெஞ்சமே, அஞ்ச வேண்டா!
இலை ஆர் புனக் கொன்றை, எறிநீர், திங்கள், இருஞ்சடைமேல் வைத்து உகந்தான்; இமையோர் ஏத்தும்
நிலையான; உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[4]
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டைப் பொருள் என்று மிக உன்னி, மதியால் இந்த
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர், நெஞ்சே! அமரர்க்கு ஆக
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற, அன்று, முடுகிய வெஞ்சிலை வளைத்து, செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன் நெய்த்தானம் என்று   நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[5]
மிறை படும் இவ் உடல் வாழ்வை மெய் என்று எண்ணி, வினையிலே கிடந்து அழுந்தி, வியவேல், நெஞ்சே!
குறைவு உடையார் மனத்து உளான்; குமரன் தாதை; கூத்து ஆடும் குணம் உடையான்; கொலை வேல் கையான்;
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப,   அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவு உடையான்; இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[6]
பேசப் பொருள் அலாப் பிறவி தன்னைப் பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி, ஈண்டு
வாசக்குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு, வீழாதே வருக, நெஞ்சே!
தூசக் கரி உரித்தான்; தூநீறு ஆடித் துதைந்து இலங்கு நூல் மார்பன்; தொடரகில்லா
நீசர்க்கு அரியவன்; நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[7]
அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு, அருநோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை
தஞ்சம் எனக் கருதி, தாழேல், நெஞ்சே! தாழக் கருதுதியே? தன்னைச் சேரா
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணிகண்டன், வானவர் தம் பிரான்! என்று ஏத்தும்
நெஞ்சர்க்கு இனியவன், நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[8]
பொருந்தாத உடல் அகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே, புலை வாழ்வு உன்னி,
இருந்து, ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா; நெஞ்சே! இமையவர் தம் பெருமான்; அன்று உமையாள் அஞ்ச,
கருந்தாள மதகரியை வெருவக் கீறும் கண்ணுதல்; கண்டு அமர் ஆடி, கருதார் வேள்வி;
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[9]
உரித்து அன்று, உனக்கு இவ் உடலின் தன்மை; உண்மை உரைத்தேன்; விரதம் எல்லாம்
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே! தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன்;
எரி(த்)த்தான்; அனல் உடையான்; எண்தோளானே! எம்பெருமான்! என்று ஏத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை, நெய்த்தானம் மேவினானை, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list