sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மறம் பயம் மலிந்தவர் மதில்
இந்தளம்   (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=TrbvYsHCGkA
6.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடி மாட நீள் தெருவு
குறிஞ்சி   (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vaiY_Vc890g
7.035   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி
கொல்லி   (திருப்புறம்பயம் சாட்சிவரதேசுவரர் கரும்படுசொல்லம்மை)

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.030   மறம் பயம் மலிந்தவர் மதில்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருப்புறம்பயம் ; (திருத்தலம் அருள்தரு கரும்பன்னசொல்லம்மை உடனுறை அருள்மிகு சாட்சிவரதநாதர் திருவடிகள் போற்றி )
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை;
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து, உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்!

[1]
விரித்தனை, திருச்சடை; அரிஉத்து ஒழுகு வெள்ளம்
தரித்தனை; அது அன்றியும், மிகப் பெரிய காலன்
எருத்து இற உதைத்தனை; இலங்கிழை ஒர்பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!

[2]
விரிந்தனை; குவிந்தனை; விழுங்கு உயிர் உமிழ்ந்தனை;
திரிந்தனை; குருந்து ஒசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை; புணர்ந்தனை; பிணம் புகு மயானம்
புரிந்தனை; மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்!

[3]
வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க,
துளங்கு அமர் இளம்பிறை சுமந்தது விளங்க,
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!

[4]
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை; ஒர் பாகம்,
கரும்பொடுபடும்சொலின்மடந்தையை மகிழ்ந்தோய்;
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே!

[5]
அனல் படு தடக்கையவர், எத் தொழிலரேனும்,
நினைப்பு உடை மனத்தவர் வினைப்பகையும் நீயே;
தனல் படு சுடர்ச் சடை தனிப் பிறையொடு ஒன்றப்
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்!

[6]
மறத்துறை மறுத்தவர், தவத்து அடியர், உள்ளம்
அறத்துறை ஒறுத்து உனது அருள்கிழமை பெற்றோர்,
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும்,
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!

[7]
இலங்கையர் இறைஞ்சு இறை, விலங்கலில் முழங்க
உலம் கெழு தடக்கைகள் அடர்த்திடலும், அஞ்சி,
வலம்கொள எழுந்தவன் நலம் கவின, அஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!

[8]
வடம் கெட நுடங்குண இடந்த இடை அல்லிக்
கிடந்தவன், இருந்தவன், அளந்து உணரல் ஆகார்
தொடர்ந்தவர், உடம்பொடு நிமிர்ந்து, உடன்வணங்க,
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம்
அமர்ந்தோய்!

[9]
விடக்கு ஒருவர் நன்று என, விடக்கு ஒருவர் தீது என,
உடற்கு உடை களைந்தவர், உடம்பினை மறைக்கும்
படக்கர்கள், பிடக்குஉரை படுத்து, உமை ஒர்பாகம்
அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே!

[10]
கருங்கழி பொரும் திரை கரைக் குலவு முத்தம்
தரும் கழுமலத்து இறை தமிழ்க் கிழமை ஞானன்
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்,
பெரும் பிணி மருங்கு அற, ஒருங்குவர், பிறப்பே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.013   கொடி மாட நீள் தெருவு  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருப்புறம்பயம் ; (திருத்தலம் அருள்தரு கரும்பன்னசொல்லம்மை உடனுறை அருள்மிகு சாட்சிவரதநாதர் திருவடிகள் போற்றி )
கொடி மாட நீள் தெருவு கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், தண் வளவி கண்டியூரும்,
நடம் ஆடும் நல் மருகல், வைகி; நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக;
படு மாலை வண்டு அறையும் பழனம், பாசூர், பழையாறும், பாற்குளமும், கைவிட்டு, இந் நாள்
பொடி ஏறும் மேனியராய்ப் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

[1]
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி, முளைத்திங்கள் சூடி, முந்நூலும் பூண்டு,
ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்று ஒன்றா எண்ணுகின்றார்;
மற்று ஒருவர் இல்லை, துணை எனக்கு; மால் கொண்டால் போல மயங்குவேற்கு,
புற்று அரவக் கச்சு ஆர்த்துப் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

[2]
ஆகாத நஞ்சு உண்ட அந்தி வண்ணர், ஐந்தலைய மாசுணம் கொண்டு, அம் பொன் தோள்மேல்
ஏகாசமா இட்டு, ஓடு ஒன்று ஏந்தி வந்து(வ்),
இடு, திருவே, பலி! என்றார்க்கு, இல்லே புக்கேன்;
பாகு ஏதும் கொள்ளார்; பலியும் கொள்ளார்; பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி,
போகாத வேடத்தர் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

[3]
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி,-பனி முகில் போல் மேனிப் பவந்த நாதர்-
நெல் மலிந்த நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தியும், நீடூர், பாச்சில்,
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம், கடல் நாகைக்காரோணம், கைவிட்டு, இந் நாள்
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

[4]
செத்தவர் தம் தலைமாலை கையில் ஏந்தி,   சிரமாலை சூடி, சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி, மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி,
அத் தவத்த தேவர் அறுபதின்மர்   ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி,
புத்தகம் கைக் கொண்டு, புலித்தோல் வீக்கி, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

[5]
நஞ்சு அடைந்த கண்டத்தர், வெண் நீறு ஆடி, நல்ல புலி அதள்மேல் நாகம் கட்டி,
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக,
பராய்த்துறையேன் என்று ஓர் பவள வண்ணர்
துஞ்சு இடையே வந்து, துடியும் கொட்ட,
துண்ணென்று எழுந்திருந்தேன்; சொல்லமாட்டேன்;
புன்சடையின்மேல் ஓர் புனலும் சூடி, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

[6]
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி, மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி,
செறி இலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு, திருமுண்டமா இட்ட திலக நெற்றி
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று, நெடுங்கண் பனி சோர, நின்று நோக்கி,
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து, பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

[7]
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி, நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு,
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டி(ய்)யும்
குடமூக்கில் அங்கு ஒழிய, குளிர் தண் பொய்கை
நல்லாடை, நல்லூரே, தவிரேன் என்று நறையூரில்- தாமும் தவிர்வார் போல,
பொல்லாத வேடத்தர், பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.

[8]
விரை ஏறு நீறு அணிந்து, ஓர் ஆமை பூண்டு, வெண்தோடு பெய்து, இடங்கை வீணை ஏந்தி,
திரை ஏறு சென்னிமேல்-திங்கள் தன்னைத் திசை விளங்க வைத்து, உகந்த செந்தீ வண்ணர்,
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன்
புரை ஏறு தாம் ஏறி, பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.

[9]
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆகக் குமரனும், விக்கின விநாயக(ன்)னும்,
பூ ஆய பீடத்து மேல் அய(ன்)னும், பூமி அளந்தானும், போற்று இசைப்ப;
பா ஆய இன் இசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றி,
பூ ஆர்ந்த கொன்றை பொறிவண்டு ஆர்க்க, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.035   அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி  
பண் - கொல்லி   (திருத்தலம் திருப்புறம்பயம் ; (திருத்தலம் அருள்தரு கரும்படுசொல்லம்மை உடனுறை அருள்மிகு சாட்சிவரதேசுவரர் திருவடிகள் போற்றி )
அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த்
தங்கினோமையும், இன்னது என்றிலர், ஈசனார்; எழு, நெஞ்சமே!
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி, வானவர்தாம் தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே.

[1]
பதியும், சுற்றமும், பெற்ற மக்களும், பண்டையார் அலர்; பெண்டிரும்,
நெதியில் இம் மனை வாழும் வாழ்க்கையும், நினைப்பு ஒழி(ம்), மட நெஞ்சமே!
மதியம் சேர் சடைக் கங்கையான் இடம் மகிழும், மல்லிகை, சண்பகம்,
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழப் போதுமே.

[2]
புறம் திரைந்து, நரம்பு எழுந்து, நரைத்து, நீ உரையால்-தளர்ந்து,
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிதுகாண்; இஃது அறிதியேல்,
திறம்பியாது எழு, நெஞ்சமே! சிறுகாலை நாம் உறு வாணியம்,
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழப் போதுமே.

[3]
குற்று ஒரு(வ்)வரைக் கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம்
செற்று ஒரு(வ்)வரைச் செய்த தீமைகள், இம்மையே வரும், திண்ணமே;
மற்று ஒரு(வ்)வரைப் பற்று இலேன்; மறவாது எழு(ம்), மட நெஞ்சமே!
புற்று அர(வ்)வு உடைப் பெற்றம் ஏறி புறம்பயம் தொழப் போதுமே.

[4]
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி
தெள்ளிதா எழு, நெஞ்சமே! செங்கண் சே உடைச் சிவலோகன் ஊர்
துள்ளி வெள் இள வாளை பாய் வயல்-தோன்று தாமரைப் பூக்கள் மேல்,
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் தொழப் போதுமே.

[5]
படை எலாம் பகடு ஆர ஆளிலும், பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும்,
கடை எலாம் பினைத் தேரைவால்; கவலாது எழு(ம்), மட நெஞ்சமே!
மடை எலாம் கழுநீர் மலர்ந்து, மருங்குஎலாம் கரும்பு ஆட, தேன்
புடை எலாம் மணம் நாறு சோலைப் புறம்பயம் தொழப் போதுமே.

[6]
முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும் ஆதலின் முன்னமே,
என்னை நீ தியக்காது எழு(ம்), மட நெஞ்சமே! எந்தை தந்தை ஊர்
அன்னச்சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணி பொழில்,
புன்னைக் கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழப் போதுமே.

[7]
மலம் எலாம் அறும், இம்மையே; மறுமைக்கும் வல்வினை சார்கிலா;
சலம் எலாம் ஒழி, நெஞ்சமே! எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர்
கலம் எலாம் கடல் மண்டு, காவிரி நங்கை ஆடிய, கங்கை நீர்
புலம் எலாம் மண்டிப் பொன் விளைக்கும் புறம்பயம் தொழப் போதுமே.

[8]
பண்டு அரீயன செய்த தீமையும் பாவமும் பறையும்படி
கண்டு அரீயன கேட்டியேல், கவலாது எழு(ம்), மட நெஞ்சமே!
தொண்டு அரீயன பாடித் துள்ளி நின்று, ஆடி வானவர்தாம் தொழும்
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழப் போதுமே.

[9]
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை
அஞ்சி, ஊரன் திருப் புறம்பயத்து அப்பனைத் தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே, புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர், வல்லர், வான் உலகு ஆளவே.

[10]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php