சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மைம் மரு பூங்குழல் கற்றை
பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=tsfcWzFqME8
1.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடை ஆர் புனல் உடையான்,
பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=t3iNhTrTln0
1.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தட நிலவிய மலை நிறுவி,
பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=ylMOVBOCKLY
1.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரை ஆர் விரி கோவண
பண் - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இரும் பொன்மலை வில்லா, எரி
பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=9vmj1OVCS1E
1.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=jNtQljtdzhE
Audio: https://sivaya.org/audio/1.092 Vaasi Theerave.mp3
1.124   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=fUl7MIiDDQg
Audio: https://sivaya.org/audio/1.124_alarmakaL_malithara.mp3
1.132   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=knCU4ih-2bI
3.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=JulmHgDE63Q
3.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீர் மருவு தேசினொடு தேசம்
பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=NYSlduaFQTs
3.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மட்டு ஒளி விரிதரு மலர்
பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=dtfTdVY96p4
3.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெண்மதி தவழ் மதில் மிழலை
பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=ESvC5R47XnA
3.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
பண் - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=h9ILwNZkrCo
3.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துன்று கொன்றை நம் சடையதே;
பண் - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=bwWNYuI0REA
3.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
பண் - புறநீர்மை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=SHdSlTNbgx0
4.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
பண் - திருநேரிசை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=KrX5P0IKkUw
4.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
பண் - திருவிருத்தம்   (திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=wPzaZrWsx_E
5.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
பண் - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=fhSWH2OG79Q
5.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   என் பொனே! இமையோர் தொழு
பண் - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=vJuk3-cpnGs
6.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   போர் ஆனை ஈர் உரிவைப்
பண் - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=ZTYW9CUiCFc
6.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
பண் - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=H8CIDonOWZw
6.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் அவன் காண்; கண்
பண் - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=CkYRX-JSV7w
6.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   மான் ஏறு கரம் உடைய
பண் - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=eCv3gJgFeu0
7.088   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
பண் - சீகாமரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qVl9t2D6-o4
9.005   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவீழிமிழலை
பண் -   (திருவீழிமிழலை )

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.004   மைம் மரு பூங்குழல் கற்றை  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் வீழியழகர் திருவடிகள் போற்றி )
கோயிலின் வடபால் உள்ள திருமடத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தார். அங்கிருக்கும் நாள்களில் திலதைப்பதி, பேணு பெருந்துறை என்ற தலங்களை ஞானசம்பந்தர் வழிபட்டுப் போற்றி னார். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது எங்களோடு சீகாழிக்கு வந்தருள வேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி அன்றிரவு துயில் கொண்டார். பெருமான் அவர் தம் கனவில் தோன்றி யாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை நீ வீழிமிழலையிலேயே காணலாம் எனக் கூறக் கேட்டு விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது இறைவன் காழிக் காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக் கண்டு மைம் மருபூங் குழல் எனத் திருப்பதிகம் பாடிப் பரவினார், காழிமக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.
மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும்,
பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!
எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய்
மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[1]
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர், சிற்றிடைக் கன்னிமார்கள்,
பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே!
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது என் கொல் சொல்லாய்
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த, விண் இழி கோயில் விரும்பியதே?

[2]
கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக வாடை கலந்து, துங்கப்
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே!
இன் இசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே! இது என் கொல் சொல்லாய்
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[3]
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான்விழி மங்கையோடும்
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
ஏக பெருந்தகை ஆய பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[4]
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத் தையலொடும், தளராத வாய்மைப்
புந்தியின் நால் மறையோர்கள் ஏத்தும், புகலி நிலாவிய புண்ணியனே!
எம் தமை ஆள் உடை ஈச! எம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[5]
சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல்
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே!
எங்கள் பிரான்! இமையோர்கள் பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[6]
காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கி, காம்பு அன தோளியொடும் கலந்து,
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான்! இது என்கொல் சொல்லாய்
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[7]
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி, ஐந்து
புலம் களை கட்டவர் போற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[8]
செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந் தானும், மற்றைப்
பொறி அரவத்து அணையானும், காணாப் புகலி நிலாவிய புண்ணியனே!
எறி மழுவோடு இளமான் கை இன்றி இருந்த பிரான்! இது என்கொல் சொல்லாய்
வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[9]
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும், பல் சமணும்
புத்தரும் நின்று அலர் தூற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
எத்தவத் தோர்க்கும் இலக்கு ஆய் நின்ற எம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[10]
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது! என்று சொல்லி,
புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி,
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.011   சடை ஆர் புனல் உடையான்,  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,
படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,
மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,
விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.

[1]
ஈறு ஆய், முதல் ஒன்று ஆய், இரு பெண் ஆண், குணம் மூன்று ஆய்,
மாறா மறை நான்கு ஆய், வரு பூதம் அவை ஐந்து ஆய்,
ஆறு ஆர் சுவை, ஏழ் ஓசையொடு எட்டுத்திசை தான் ஆய்,
வேறு ஆய், உடன் ஆனான், இடம் வீழிமிழலையே.

[2]
வம்மின், அடியீர், நாள்மலர் இட்டுத் தொழுது உய்ய!
உம் அன்பினொடு எம் அன்பு செய்து, ஈசன் உறை கோயில்
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டித் திசை எங்கும்
விம்மும் பொழில் சூழ் தண்வயல் வீழிமிழலையே.

[3]
பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்,
உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,
விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.

[4]
ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின்
தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத்
தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர்
மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.

[5]
கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்! என வானோர்
எல்லாம் ஒரு தேர் ஆய், அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப,
வல்லாய் எரி காற்று ஈர்க்கு, அரி கோல், வாசுகி நாண், கல்
வில்லால், எயில் எய்தான் இடம் வீழிமிழலையே.

[6]
கரத்தால் மலி சிரத்தான்; கரி உரித்து ஆயது ஒரு படத்தான்;
புரத்தார் பொடிபட, தன் அடி பணி மூவர்கட்கு ஓவா
வரத்தான் மிக அளித்தான்; இடம் வளர் புன்னை முத்து அரும்பி,
விரைத் தாது பொன் மணி ஈன்று, அணி வீழிமிழலையே.

[7]
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை
தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி,
பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த
மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.

[8]
பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில,
வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.

[9]
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணம் இலிகள்,
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து,
பசும் பொன்கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே.

[10]
வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர்
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும்
யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம்
ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.020   தட நிலவிய மலை நிறுவி,  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.

[1]
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்;
உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே.

[2]
மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,
சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர், திரு மிழலையே.

[3]
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது உறை பதி
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.

[4]
அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி,
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல், திரு மிழலையே.

[5]
வசை அறு வலி வனசர உரு அது கொடு, நினைவு அருதவம் முயல்
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு செய்து,
அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே.

[6]
நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல்,
மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு
சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி
திலகம் இது! என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி, திரு மிழலையே.

[7]
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;
வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன் வழி வழுவிய
சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.

[8]
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல் ஒழிய, ஒரு
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர, வரல்முறை,
சய சய! என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.

[9]
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண்விரகினர்,
திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி
திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே.

[10]
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு
தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும்
மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள்,
இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.035   அரை ஆர் விரி கோவண  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.

[1]
புனைதல் புரி புன்சடை தன் மேல்
கனைதல் ஒரு கங்கை கரந்தான்,
வினை இல்லவர், வீழி மிழலை
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே?

[2]
அழ வல்லவர், ஆடியும் பாடி
எழ வல்லவர், எந்தை அடிமேல்
விழ வல்லவர், வீழி மிழலை
தொழ வல்லவர், நல்லவர்; தொண்டே!

[3]
உரவம் புரி புன் சடை தன்மேல்
அரவம் அரை ஆர்த்த அழகன்,
விரவும் பொழில், வீழி மிழலை
பரவும்(ம்) அடியார் அடியாரே!

[4]
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன்,
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை
விரி தார் பொழில், வீழி மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.

[5]
சடை ஆர் பிறையான், சரி பூதப்
படையான், கொடி மேலது ஒரு பைங்கண்
விடையான், உறை வீழி மிழலை
அடைவார் அடியார் அவர் தாமே.

[6]
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறி ஆர் குழலாளொடு நின்றான்,
வெறி ஆர் பொழில், வீழி மிழலை
அறிவார் அவலம் அறியாரே.

[7]
உளையா வலி ஒல்க, அரக்கன்,
வளையா விரல் ஊன்றிய மைந்தன்,
விளை ஆர் வயல், வீழி மிழலை
அளையா வருவார் அடியாரே.

[8]
மருள் செய்து இருவர் மயல் ஆக
அருள் செய்தவன், ஆர் அழல் ஆகி
வெருள் செய்தவன், வீழி மிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே.

[9]
துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை!
விளங்கும் பொழில் வீழி மிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.

[10]
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர் சடையான் அடி கூற,
மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.082   இரும் பொன்மலை வில்லா, எரி  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.

[1]
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர,
ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில்
கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும்
வேதத்து ஒலி ஓவா வீழி மிழலையே.

[2]
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு,
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில்
மயிலும் மடமானும் மதியும் இள வேயும்
வெயிலும் பொலி மாதர் வீழி மிழலையே.

[3]
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில்
குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை,
விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே.

[4]
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக,
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில்
மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும்
விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.

[5]
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்
சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள்
மேலால் எரி காட்டும் வீழி மிழலையே.

[6]
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்,
கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில்
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.

[7]
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி;
கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில்
படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை
விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே.

[8]
கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது,
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில்
படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.

[9]
சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும்
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்
தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.

[10]
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள்
ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன்
வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.092   வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வறுமை நீங்கும்
வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.

[1]
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்!
கறை கொள் காசினை முறைமை நல்குமே!

[2]
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்!
பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!

[3]
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்!
கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!

[4]
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்!
நாம மிழலையீர்! சேமம் நல்குமே!

[5]
பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்!
அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே!

[6]
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்!
கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே!

[7]
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்!
பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!

[8]
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்!
இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!

[9]
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்;
வெறி கொள் மிழலையீர்! பிறிவு அது அரியதே.

[10]
காழி மா நகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.124   அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர்,
நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ்
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.

[1]
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர்
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில்
இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு
நிருபமன், மிழலையை நினைய வல்லவரே.

[2]
கலைமகள் தலைமகன், இவன் என வருபவர்
அலை மலிதரு புனல், அரவொடு, நகுதலை,
இலை மலி இதழியும், இசைதரு சடையினர்
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே.

[3]
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர்
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே.

[4]
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர்
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு
நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே.

[5]
அன்றினர் அரி என வருபவர்-அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி
சென்று கொள் வகை சிறு முறுவல்கொடு ஒளி பெற
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே.

[6]
கரம் பயில் கொடையினர் கடிமலர் அயனது ஒர்
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர்,
வரம் பயில் கலைபல மறை முறை அறநெறி
நிரம்பினர், மிழலையை நினைய வல்லவரே.

[7]
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது-
கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.

[8]
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்-
வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே.

[9]
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர்
வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர்
துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ்
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே.

[10]
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள்
வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு
கற்று வல்லவர் உலகினில் அடியவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.132   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு
ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர்
நெறி அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும்
பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள்
பொருள் சொல்லும் மிழலை ஆமே.

[1]
பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே மத்து
ஆக, புத்தேளிர் கூடி,
மறி கடலைக் கடைந்திட்ட விடம் உண்ட
கண்டத்தோன் மன்னும் கோயில்
செறி இதழ்த் தாமரைத்தவிசில்-திகழ்ந்து ஓங்கும்
இலைக் குடைக் கீழ், செய் ஆர்செந்நெல்
வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம்
வீற்றிருக்கும் மிழலை ஆமே.

[2]
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம்
புரம் மூன்றும், எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்
சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம்
முகம் காட்ட, குதித்து    நீர்மேல்
விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம்
வாய் காட்டும் மிழலை ஆமே.

[3]
உரை சேரும் எண்பத்து நான்கு
நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய்,
அங்கு அங்கே நின்றான்கோயில்
வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல
நடம் ஆட, வண்டு பாட,
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள்
கை ஏற்கும் மிழலை ஆமே.

[4]
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி,
காலம் ஆய், குணங்கள் மூன்று ஆய்,
பேணு மூன்று உருஆகி, பேர் உலகம்
படைத்து அளிக்கும் பெருமான் கோயில்
தாணு ஆய் நின்ற பரதத்துவனை,
உத்தமனை, இறைஞ்சீர்! என்று
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப
போல் ஓங்கு மிழலை ஆமே.

[5]
அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று,
ஐம்புலனும் அடக்கி, ஞானப்
புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள்
இருக்கும் புராணர் கோயில்
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம்
அந்தி திகழ, சலசத்தீயுள்,
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட,
மணம் செய்யும் மிழலை ஆமே.

[6]
ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு
மலர்க்கையன், இமயப்பாவை
கூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும்
குணம் உடையோன், குளிரும் கோயில்
சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி,
மது உண்டு, சிவந்த வண்டு
வேறு ஆய உருஆகி, செவ்வழி நல்
பண் பாடும் மிழலை ஆமே.

[7]
கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி,
கை மறித்து, கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள்
நெரித்த விரல் புனிதர்கோயில்
தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த
சக்கரத்தை வேண்டி, ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி
விமானம் சேர் மிழலை ஆமே.

[8]
செந்தளிர் மா மலரோனும் திருமாலும்,
ஏனமொடு அன்னம் ஆகி,
அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த,
வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி,
நெய் சமிதை கையில் கொண்டு,
வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர்
சேரும் ஊர் மிழலை ஆமே.

[9]
எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர்
சாக்கியரும், என்றும் தன்னை
நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு
அருள்புரியும்  நாதன் கோயில்
பண் அமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசை கேட்டு,
விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்து
ஓடும் இழியும் மிழலை ஆமே.

[10]
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர்
பாதம்
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள்
  பயிலும் நாவன்,
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி,
இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும்
இயல்பினோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.009   கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர் கேடு இலா
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்,
வாழியர்; தோற்றமும் கேடும் வைப்பார், உயிர்கட்கு எலாம்;
ஆழியர்; தம் அடி போற்றி! என்பார்கட்கு அணியரே.

[1]
கல்லின் நன்பாவை ஓர் பாகத்தார், காதலித்து ஏத்திய
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்;
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து, எழு ஞாயிற்றின்
பல் அனைத்தும் தகர்த்தார், அடியார் பாவநாசரே.

[2]
நஞ்சினை உண்டு இருள் கண்டர், பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூஇலைச்சூலத்தர் வீழிமிழலையார்;
அஞ்சனக் கண் உமை பங்கினர், கங்கை அங்கு ஆடிய
மஞ்சனச் செஞ்சடையார் என, வல்வினை மாயுமே.

[3]
கலை, இலங்கும் மழு, கட்டங்கம், கண்டிகை, குண்டலம்,
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலை இலங்கும் பிறை; தாழ்வடம், சூலம், தமருகம்,
அலை இலங்கும் புனல், ஏற்றவர்க்கும்(ம்) அடியார்க்குமே.

[4]
பிறை உறு செஞ்சடையார், விடையார் பிச்சை நச்சியே
வெறி உறு நாள்பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார்;
முறைமுறையால் இசை பாடுவார், ஆடி, முன்; தொண்டர்கள்-
இறை; உறை வாஞ்சியம் அல்லது, எப்போதும் என் உள்ளமே.

[5]
வசை அறு மா தவம் கண்டு, வரிசிலை வேடனாய்,
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்;
இசை வரவிட்டு, இயல் கேட்பித்து, கல்லவடம் இட்டு,
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.

[6]
சேடர் விண்ணோர்கட்கு, தேவர், நல் மூஇருதொல்-நூலர்,
வீடர், முத்தீயர், நால்வேதத்தர் வீழிமிழலையார்;
காடு அரங்கா, உமை காண, அண்டத்து இமையோர் தொழ,
நாடகம் ஆடியை ஏத்த வல்லார் வினை நாசமே.

[7]
எடுத்த வல் மாமலைக்கீழ் இராவணன் வீழ்தர,
விடுத்து அருள்செய்து, இசை கேட்டவர் வீழிமிழலையார்;
படுத்து வெங்காலனை, பால் வழிபாடு செய் பாலற்குக்
கொடுத்தனர், இன்பம், கொடுப்பர், தொழ; குறைவு இல்லையே.

[8]
திக்கு அமர் நான்முகன், மால், அண்டம் மண்தலம் தேடிட,
மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார்;
சொக்கம் அது ஆடியும், பாடியும், பாரிடம் சூழ்தரும்
நக்கர்தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே.

[9]
துற்று அரை ஆர் துவர் ஆடையர், துப்புரவு ஒன்று இலா
வெற்று அரையார், அறியா நெறி வீழிமிழலையார்-
சொல்-தெரியாப் பொருள், சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான்-
மற்று அறியா அடியார்கள் தம் சிந்தையுள் மன்னுமே.

[10]
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
ஆதியை, வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து,
ஓதிய ஒண்தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர்,
மாது இயல் பங்கன் மலர் அடி சேரவும் வல்லரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.080   சீர் மருவு தேசினொடு தேசம்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம் கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே.

[1]
பட்ட முழவு, இட்ட பணிலத்தினொடு, பல்மறைகள் ஓது பணி நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள் செய் தழல் கொள் மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர், மன்னு பொழில்வாய்
விட்டு உலவு தென்றல் விரை நாறு, பதி வேதியர்கள் வீழிநகரே.

[2]
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்
உயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த, எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட, மடமஞ்ஞை நடம் ஆட, அழகு ஆர்
விண் இழி விமானம் உடை விண்ணவர் பிரான் மருவு வீழிநகரே.

[3]
செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு நன்கலை தெரிந்த அவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர்-தண்புனல் வளம் பெருகவே,
வெந் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே.

[4]
பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்,
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே.

[5]
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா தவமும், மற்றும் உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள்
பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை
வீழிநகரே.

[6]
மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகை போய்,
அந்தர-விசும்பு அணவி, அற்புதம் எனப் படரும் ஆழி இருள்வாய்,
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்,
வெந்தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே.

[7]
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க, அணி ஆழிவிரலால்,
ஊன் அமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்
தேன் அமர் திருந்து பொழில், செங்கனக மாளிகை, திகழ்ந்த மதிலோடு
ஆன திரு உற்று வளர், அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே.

[8]
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும், எழில் அன்ன உருவம்
ஆனவனும், ஆதியினொடு அந்தம் அறியாத அழல்மேனியவன் ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்வாய்
வேனல் அமர்வு எய்திட, விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே.

[9]
குண்டு அமணர் ஆகி, ஒரு கோலம் மிகு பீலியொடு
குண்டிகை பிடித்து
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர்; அது
என்ன பொருள் ஆம்?
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீா
வெண்தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே.

[10]
மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன், வீழிநகர் சேர்
வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி,
அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோகமொடு யோகு அவரதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.085   மட்டு ஒளி விரிதரு மலர்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா,
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசை
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே.

[1]
எண் நிற வரி வளை, நெறிகுழல், எழில் மொழி, இளமுலைப்
பெண் உறும் உடலினர்; பெருகிய கடல்விடம் மிடறினர்;
கண் உறு நுதலினர்; கடியது ஒர் விடையினர்; கனலினர்
விண் உறு பிறை அணி சடையினர்; பதி விழிமிழலையே.

[2]
மைத் தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா
வைத்தவர், மதகரி உரிவை செய்தவர், தமை மருவினார்
தெத்தென இசை முரல் சரிதையர், திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை உடையவர், இடம் விழிமிழலையே.

[3]
செவ் அழல் என நனி பெருகிய உருவினர், செறிதரு
கவ்வு அழல் அரவினர்; கதிர் முதிர் மழுவினர்; தொழு இலா
முவ் அழல் நிசிசரர் விறல் அவை அழிதர, முது மதில்
வெவ் அழல் கொள, நனி முனிபவர்; பதி விழிமிழலையே.

[4]
பைங்கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர்; பலி எனா
எங்கணும் உழிதர்வர்; இமையவர் தொழுது எழும் இயல்பினர்;
அங்கணர்; அமரர்கள் அடி இணை தொழுது எழ, ஆரமா
வெங் கண அரவினர்; உறைதரு பதி விழிமிழலையே.

[5]
பொன் அன புரிதரு சடையினர், பொடி அணி வடிவினர்
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசை முரல் சரிதையர், திகழ்தரும் மார்பினில்
மின் என மிளிர்வது ஒர் அரவினர், பதி விழிமிழலையே.

[6]
அக்கினொடு, அரவு, அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை, பூண்டு
இக்கு உக, மலி தலை கலன் என இடு பலி ஏகுவர்;
கொக்கரை, குழல், முழ, விழவொடும் இசைவது ஒர் சரிதையர்
மிக்கவர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.

[7]
பாதம் ஒர்விரல் உற, மலை அடர் பலதலை நெரிதர,
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்;
ஓதமொடு ஒலிதிரை படு கடல் விடம் உடை மிடறினர்
வேதமொடு உறு தொழில் மதியவர்; பதி விழிமிழலையே.

[8]
நீர் அணி மலர் மிசை உறைபவன், நிறை கடல் உறு துயில்
நாரணன், என இவர் இருவரும் நறுமலர் அடி முடி
ஓர் உணர்வினர் செலல் உறல் அரும் உருவினொடு ஒளி திகழ்
வீர(அ)ணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே.

[9]
இச்சையர், இனிது என இடு பலி; படுதலை மகிழ்வது ஒர்
பிச்சையர்; பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர்
மொச்சைய அமணரும், முடை படு துகிலரும், அழிவது ஒர்
விச்சையர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.

[10]
உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை,
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.098   வெண்மதி தவழ் மதில் மிழலை  
பண் - சாதாரி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர், சடை
ஒண்மதி அணி உடையீரே;
ஒண்மதி அணி உடையீர்! உமை உணர்பவர்
கண் மதி மிகுவது கடனே.

[1]
விதி வழி மறையவர் மிழலை உளீர், நடம்
சதி வழி வருவது ஒர் சதிரே;
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர்! உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.

[2]
விரை மலி பொழில் அணி மிழலை உளீர், ஒரு
வரைமிசை உறைவதும் வலதே;
வரைமிசை உறைவது ஒர் வலது உடையீர்! உமை
உரை செயுமவை மறை ஒலியே.

[3]
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர், கையில்
இட்டு எழில் பெறுகிறது எரியே;
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர்! புரம்
அட்டது வரை சிலையாலே.

[4]
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர், நல
பால் நிகர் உரு உடையீரே;
பால் நிகர் உரு உடையீர்! உமது உடன் உமை
தான் மிக உறைவது தவமே.

[5]
விரை மலி பொழில் அணி மிழலை உளீர், செனி
நிரை உற அணிவது நெறியே;
நிரை உற அணிவது ஒர் நெறி உடையீர்! உமது
அரை உற அணிவன, அரவே.

[6]
விசை உறு புனல் வயல் மிழலை உளீர், அரவு
அசைவு உற அணிவு உடையீரே;
அசைவு உற அணிவு உடையீர்! உமை அறிபவர்
நசை உறும் நாவினர் தாமே.

[7]
விலங்கல் ஒண்மதில் அணி மிழலை உளீர், அன்று
இலங்கை மன் இடர் கெடுத்தீரே;
இலங்கை மன் இடர் கெடுத்தீர்! உமை ஏத்துவார்
புலன்களை முனிவது பொரு

[8]
வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர், உமை
அற்புதன் அயன் அறியானே;
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன்
நல் பதம் அறிவது நயமே.

[9]
வித்தக மறையவர் மிழலை உளீர், அன்று
புத்தரொடு அமண் அழித்தீரே;
புத்தரொடு அமண் அழித்தீர்! உமைப் போற்றுவார்
பத்தி செய் மனம் உடையவரே.

[10]
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை,
சண்பையுள் ஞானசம்பந்தன்
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை,
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.111   வேலின் நேர்தரு கண்ணினாள் உமை  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன்,
மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான்-அடிக்கு அன்பர் துன்பு இலரே.

[1]
விளங்கும் நால்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர்
மிழலையான் அடி
உளம் கொள்வார் தமை உளம்கொள் வார் வினை ஒல்லை
ஆசு அறுமே.

[2]
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன், மிழலை மா நகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால், மிசை செயா,
வினையே.

[3]
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்தொறும்,
நின்ற ஆதிதன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே.


[4]
போதகம் தனை உரி செய்தோன், புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள், பாதம் அலால் ஒர் பற்று இலமே.

[5]
தக்கன் வேள்வியைச் சாடினார், மணி தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்கனார், அடி தொழுவர் மேல் வினை நாள்தொறும்
கெடுமே.

[6]
போர் அணாவு முப்புரம் எரித்தவன், பொழில்கள் சூழ்தரு
மிழலை மா நகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர் தீவினை கெடுமே.

[7]
இரக்கம் இல்-தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான்,
மிகு மிழலையான், அடி
சிரக் கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும், நீள்
புவியே.

[8]
துன்று பூமகன், பன்றி ஆனவன், ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி
சென்று பூம்புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே.

[9]
புத்தர், கைச் சமண்பித்தர், பொய்க் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர்
சித்தம் வைத்தவர் இத் தலத்தினுள் மெய்த் தவத்தவரே.

[10]
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச் சண்பை
ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ்பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.116   துன்று கொன்றை நம் சடையதே;  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
துன்று கொன்றை நம் சடையதே; தூய கண்டம் நஞ்சு அடையதே;
கன்றின்மான் இடக் கையதே; கல்லின்மான் இடக்கை அதே;
என்றும் ஏறுவது இடவமே; என் இடைப் பலி இட வ(ம்)மே!
நின்றதும் மிழலையுள்ளுமே; நீர் எனைச் சிறிதும் உள்ளுமே!

[1]
ஓதி வாயதும் மறைகளே; உரைப்பதும் பலமறைகளே
பாதி கொண்டதும் மாதையே; பணிகின்றேன், மிகும் மாதையே;
காது சேர் கனம் குழையரே; காதலார் கனம் குழையரே;
வீதிவாய் மிகும் வேதியா; மிழலை மேவிய வேதியா!

[2]
பாடுகின்ற பண் தாரமே; பத்தர் அன்ன பண்டாரமே;
சூடுகின்றது மத்தமே; தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே? நின் அரைத் திகழ்ந்தது அக்கு அதே;
நாடு சேர் மிழலை, ஊருமே; நாகம் நஞ்சு அழலை ஊருமே.

[3]
கட்டுகின்ற கழல் நாகமே; காய்ந்ததும் மதனன் ஆகமே;
இட்டம் ஆவது இசை பாடலே; இசைந்த நூலின் அமர்பு ஆடலே;
கொட்டுவான் முழவம், வாணனே; குலாய சீர் மிழலை வாணனே!
நட்டம் ஆடுவது சந்தியே; நான் உய்தற்கு இரவு சந்தியே!

[4]
ஓவு இலாது இடும் கரணமே, உன்னும் என்னுடைக் கரணமே;
ஏவு சேர்வும் நின் ஆணையே; அருளில் நின்ன பொற்று ஆணையே;
பாவியாது உரை மெய் இலே; பயின்ற நின் அடி மெய்யிலே
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே!

[5]
வாய்ந்த மேனி எரிவண்ணமே; மகிழ்ந்து பாடுவது வண்ணமே;
காய்ந்து வீழ்ந்தவன் காலனே; கடு நடம் செயும் காலனே;
போந்தது எம் இடை இரவிலே; உம் இடைக் கள்வம் இரவிலே;
ஏய்ந்ததும் மிழலை என்பதே; விரும்பியே அணிவது என்பு அதே.

[6]
அப்பு இயன்ற கண் அயனுமே, அமரர்கோமகனும், அயனுமே,
ஒப்பு இல் இன்று, அமரர், தருவதே, ஒண் கையால் அமரர் தரு அதே;
மெய்ப் பயின்றவர், இருக்கையே, மிழலை ஊர் உமது இருக்கையே;
செப்புமின்(ன்), எருது மேயுமே! சேர்வு உமக்கு எருதும் ஏயுமே.

[7]
தானவக் குலம் விளக்கியே, தாரகைச் செலவு இளக்கியே,
வான் அடர்த்த கயில் ஆயமே, வந்து மேவு கயிலாயமே
தான் எடுத்த வல் அரக்கனே, தட முடித்திரள் அரக்கனே,
மேல் நடைச் செல இருப்பனே; மிழலை நன் பதி
விருப்பனே.

[8]
காயம் மிக்கது ஒரு பன்றியே, கலந்த நின்ன உருபு
அன்றியே,
ஏய இப் புவி மயங்கவே, இருவர்தாம் மனம் அயங்கவே,
தூய மெய்த்திரள் அகண்டனே! தோன்றி நின்ற
மணிகண்டனே!
மேய இத் துயில் விலக்கு, அ(ண்)ணா! மிழலை மேவிய
இலக்கணா!

[9]
கஞ்சியைக் குலவு கையரே, கலக்கம் ஆர் அமணர்கையரே,
அஞ்ச, வாதில் அருள் செய்யநீ, அணைந்திடும் பரிசு செய்ய, நீ
வஞ்சனே! வரவும் வல்லையே, மதித்து, எனைச் சிறிதும் வல்லையே?
வெஞ்சல் இன்றி வரு இவ் தகா மிழலை சேரும் விறல்
வித்தகா!

[10]
மேய செஞ்சடையின் அப்பனே! மிழலை மேவிய என் அப்பனே!
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே!
காய வர்க்க(அ) சம்பந்தனே! காழி ஞானசம்பந்தனே
வாய் உரைத்த தமிழ்பத்துமே வல்லவர்க்கும் இவை
பத்துமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.119   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு சாந்தம் பொடி-நீறு;
கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம்
செய் கூத்து உடையோன்-
அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க,
முள்-தாழைகள் ஆனை
வெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[1]
இசைந்த ஆறு அடியார் இடு துவல், வானோர் இழுகு
சந்தனத்து இளங் கமலப்
பசும்பொன் வாசிகைமேல் பரப்புவாய்; கரப்பாய், பத்தி
செய்யாதவர் பக்கல்;
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து
அரிந்து எடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான்! என, வினை கெடுமே.

[2]
நிருத்தன், ஆறு அங்கன், நீற்றன், நால்மறையன், நீலம்
ஆர் மிடற்றன், நெற்றிக்கண்
ஒருத்தன், மற்று எல்லா உயிர்கட்கும் உயிர் ஆய் உளன்,
இலன், கேடு இலி, உமைகோன்-
திருத்தம் ஆய் நாளும் ஆடு நீர்ப் பொய்கை, சிறியவர்
அறிவினின் மிக்க
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[3]
தாங்க(அ)ருங் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும்
கூடினார் அங்கம்
பாங்கினால்-தரித்துப் பண்டு போல் எல்லாம் பண்ணிய
கண்நுதல் பரமர்
தேம் கொள் பூங் கமுகு, தெங்கு, இளங் கொடி, மா,
செண்பகம், வண் பலா, இலுப்பை,
வேங்கை, பூ மகிழால், வெயில் புகா வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[4]
கூசு மா மயானம் கோயில் வாயில்கண் குடவயிற்றன சிலபூதம்,
பூசு மா சாந்தம் பூதி, மெல்லோதி பாதி, நன் பொங்கு
அரவு அரையோன்-
வாசம் ஆம் புன்னை, மௌவல், செங்கழுநீர், மலர்
அணைந்து எழுந்த வான் தென்றல்
வீசு மாம்பொழில் தேன் துவலை சேர்-வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[5]
பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன் அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

[6]
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம்
எனக்கு அருள்! என்று
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன்,
பிறை அணி சடையன்-
நின்ற நாள் காலை, இருந்த நாள் மாலை, கிடந்த
மண்மேல் வரு கலியை
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

[7]
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம்
சிரம் நெரிந்து அலற,
அடர்த்தது ஓர்விரலால், அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன், தட மிகு நெடுவாள்
படித்த நால்மறை கேட்டு இருந்த பைங்கிளிகள் பதங்களை
ஓத, பாடு இருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

[8]
அளவு இடல் உற்ற அயனொடு மாலும் அண்டம் மண்
கிண்டியும் காணா
முளை எரி ஆய மூர்த்தியை, தீர்த்தம் முக்கண் எம்
முதல்வனை, முத்தை,
தளை அவிழ் கமலத்தவிசின் மேல் அனனம் தன்
இளம்பெடையோடும் புல்கி,
விளை கதிர்க்கவரி வீச, வீற்றிருக்கும் மிழலையான் என,
வினை கெடுமே.

[9]
கஞ்சிப் போது உடையார், கையில் கோசாரக் கலதிகள்,
கட்டுரை விட்டு
அஞ்சித் தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு
அமரர்க்கு அமுது அருளி
இஞ்சிக்கே கதலிக்கனி விழ, கமுகின் குலையொடும் பழம் விழ, தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

[10]
வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழிமிழலையுள், விண் இழிவிமானத்து
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானை,
தோய்ந்த நீர்த் தோணிபுரத்து உறை மறையோன்-தூ மொழி ஞானசம்பந்தன்-
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.064   பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; பூண நூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர்; நஞ்சு அழுந்து கண்டர்;
கீதத்தின் பொலிந்த ஓசைக் கேள்வியர்; வேள்வியாள
வேதத்தின் பொருளர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[1]
காலையின் கதிர்செய் மேனி, கங்குலின் கறுத்த கண்டர்
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர்; மதுவும் பாலும்
ஆலையில் பாகும் போல அண்ணித் திட்டு, -அடியார்க்கு,-என்றும்
வேலையின் அமுதர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[2]
வரும் தினம், நெருநல், இன்று ஆய், வழங்கின நாளர்; ஆல்கீழ்
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர்; இருவரோடும்
பொருந்தினர்; பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும்
விருந்தினர்-திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[3]
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற-நெருப்பு, -அரி காற்று அம்பு ஆக,
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர்; தேவர் தங்கள்
தலையினால்-தரித்த என்பும், தலைமயிர் வடமும், பூண்ட
விலை இலா வேடர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[4]
மறை இடைப் பொருளர்; மொட்டின் மலர் வழி வாசத் தேனர்
கறவு இடைப் பாலின் நெய்யர்; கரும்பினில் கட்டியாளா
பிறை இடைப் பாம்பு கொன்றைப் பிணையல் சேர் சடையுள் நீரர்
விறகு இடைத் தீயர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[5]
எண் அகத்து இல்லை அல்லர்; உளர் அல்லர்; இமவான் பெற்ற
பெண் அகத்தர்; ஐயர்; காற்றில் பெரு வலி இருவர் ஆகி,
மண் அகத்து ஐவர்; நீரில் நால்வர்; தீ அதனில் மூவர்
விண் அகத்து ஒருவர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[6]
சந்து அணி கொங்கையாள் ஓர் பங்கினர்; சாமவேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்;
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[7]
நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம் பூக்கொண்டு(வ்)
ஏற்றுழி, ஒரு நாள் ஒன்று குறைய, கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி, அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[8]
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்வு இடம்; சென்று கூடப்
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர்; இறப்பு இலாளா
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீலகண்டர்
வித்தினில் முளையர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[9]
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி தடை நிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண் ஆய்
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ, தம் வாள
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.095   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு தோகையம்பிகையம்மை உடனுறை அருள்மிகு தோன்றாத்துணையீசுவரர் திருவடிகள் போற்றி )
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள
நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[1]
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்! அண்டம் எண்திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர்! பசு ஏற்று உகந்தீர்
வெந்தழல் ஓம்பும் மிழலை உள்ளீர்!-என்னைத் தென்திசைக்கே
உந்திடும்போது மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[2]
அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல் அம்பரம், ஆகி நின்றீர்
கலைக்கன்று சேரும் கரத்தீர்! கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால்
குலைக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[3]
தீத் தொழிலான் தலை தீயில் இட்டு, செய்த வேள்வி செற்றீர்
பேய்த்தொழிலாட்டியைப் பெற்று உடையீர்! பிடித்துத் திரியும்
வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர்! விக்கி அஞ்சு எழுத்தும்
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[4]
தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும், பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும், என்னையும் வேறு உடையீர்
நாள் பட்டு வந்து பிறந்தேன், இறக்க, நமன் தமர்தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[5]
கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர்
உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[6]
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர்! தூய வெள் எருது ஒன்று
ஏற்றம் கொண்டீர்! எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர்
சீற்றம் கொண்டு என்மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெங்
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[7]
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிச் சொக்கம் பயின்றீர்
பழிப்பட்ட பாம்பு அரைப் பற்று உடையீர்! படர் தீப் பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்! மிழலை உள்ளீர்!-பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[8]
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர்! மறை ஓத வல்லீர்
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர்! விரிநீர் மிழலை உள்ள
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[9]
கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும் மெய்யும்
நெறுக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர்
வெறிக் கொன்றைமாலை முடியீர்! விரிநீர் மிழலை உள்ள
இறக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.012   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
நாயன்மார்கள் இருவரும் இந்த தலத்தில் தங்கிய போது வறட்சி ஏற்பட்டது. இறைவனின் அருளால் தினமும் ஒரு பொற்காசு பெற்ற நாயன்மார்கள் தங்களைச் சார்ந்த அடியார்களுக்கும் ஊரில் உள்ள மக்களுக்கும் நாள்தோறும் அமுது படைத்தனர். மேலும் பஞ்சம் நீங்கிய பின்னரும் பல நாட்கள் இங்கே தங்கி பல பதிகங்கள் பாடினார். ஆனால் நமக்கு அப்பர் பிரான் பாடிய எட்டு பதிகங்களே கிடைத்துள்ளன.
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
வரைந்து வைது எழுவாரையும் வாடலன்;
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது, வீழிமிழலைக்கே.

[1]
ஏற்று வெல் கொடி ஈசன், தன் ஆதிரை,
நாற்றம் சூடுவர்; நன்நறும் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்,
வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே.

[2]
புனை பொன் சூலத்தன்; போர் விடை ஊர்தியான்;
வினை வெல் நாகத்தன்; வெண் மழுவாளினான்;
நினைய நின்றவன், ஈசனையே எனா;-
வினை இலார் தொழும் வீழிமிழலையே.

[3]
மாடத்து ஆடும் மனத்து உடன் வைத்தவர்,
கோடத்தார், குருக்கேத்திரத்தார் பலர்,
பாடத்தார், பழிப்பார் பழிப்பு இல்லது ஓர்
வேடத்தார், தொழும் வீழிமிழலையே.

[4]
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே
கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை;
விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.

[5]
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்வு இலீர்!
தழலை நீர் மடிக் கொள்ளன்மின்! சாற்றினோம்:
மிழலையான் அடி சார, விண் ஆள்வரே!

[6]
தீரன்; தீத்திரளன்; சடைத் தங்கிய
நீரன்; ஆடிய நீற்றன்; வண்டு ஆர் கொன்றைத்
தாரன்; மாலையன்; தண் நறுங்கண்ணியன்;
வீரன் வீழிமிழலை விகிர்தனே.

[7]
எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை
நரியினார்; பரியா மகிழ்கின்றது ஓர்
பெரியனார்; தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழிமிழலையே!

[8]
நீண்ட சூழ் சடைமேல் ஓர் நிலா மதி;
காண்டு, சேவடிமேல் ஓர் கனைகழல்;
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்;
மீண்டும் போவது, வீழிமிழலைக்கே.

[9]
பாலையாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்,
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும், வீழிமிழலையே!

[10]
மழலை ஏற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்து எடுத்தான் முடிதோள் இறக்
கழல் கொள் காலில்-திருவிரல் ஊன்றலும்,
மிழலையான் அடி வாழ்க! என, விட்டதே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.013   என் பொனே! இமையோர் தொழு  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
என் பொனே! இமையோர் தொழு பைங்கழல்
நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்;
செம்பொனே! திரு வீழிமிழலையுள்
அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே!

[1]
கண்ணினால் களி கூரக் கையால்-தொழுது
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன் தனை,-
விண் உளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே!-அடியேனைக் குறிக்கொளே!

[2]
ஞாலமே! விசும்பே! நலம் தீமையே!
காலமே! கருத்தே! கருத்தால்-தொழும்
சீலமே! திரு வீழிமிழலையுள்
கோலமே!-அடியேனைக் குறிக்கொளே!

[3]
முத்தனே! முதல்வா! முகிழும் முளை
ஒத்தனே! ஒருவா! உரு ஆகிய
சித்தனே! திரு வீழிமிழலையுள்
அத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

[4]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list