sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
7.067   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   7 th/nd Thirumurai (தக்கேசி   Location: திருவலிவலம் God: மனத்துணைநாதர் Goddess: மாழையங்கண்ணியம்மை) திருவலிவலம் ; அருள்தரு மாழையங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு மனத்துணைநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=4DdgcarYvmc  
ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், உலகு எல்லாம் ஓங்காரத்து உரு ஆகி நின்றானை;
வானம் கைத்தவர்க்கும்(ம்) அளப்ப(அ)ரிய வள்ளலை; அடியார்கள் தம் உள்ளத்
தேன், அங்கத்து அமுது, ஆகி, உள் ஊறும் தேசனை; நினைத்தற்கு இனியானை;
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.


[ 1]


பல் அடியார் பணிக்குப் பரிவானை, பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,
செல் அடியே நெருக்கித் திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை, நான் உறு குறை அறிந்து அருள் புரிவானை,
வல் அடியார் மனத்து இச்சை உளானை, வலி வலம் தனில் வந்து கண்டேனே.


[ 2]


ஆழியனாய், அகன்றே, உயர்ந்தானை; ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை;
கூழையர் ஆகி, பொய்யே குடி ஓம்பி, குழைந்து, மெய் அடியார் குழுப் பெய்யும்
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை;
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.


[ 3]


நாத்தான் உன் திறமே திறம்பாது, நண்ணி அண்ணித்து, அமுதம் பொதிந்து ஊறும்
ஆத்தானை, அடியேன் தனக்கு; என்றும் அளவு இறந்த பல்-தேவர்கள் போற்றும்
சோத்தானை; சுடர் மூன்றிலும் ஒன்றி, துருவி மால் பிரமன்(ன்) அறியாத
மாத்தானை; மாத்து எனக்கு வைத்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .


[ 4]


நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்கு-அரசரும் பாடிய நல்-தமிழ்மாலை
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை; தொண்டனேன் அறியாமை அறிந்து,
கல் இயல் மனத்தைக் கசிவித்து, கழல் அடி காட்டி, என் களைகளை அறுக்கும்
வல் இயல் வானவர் வணங்க நின்றானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.


[ 5]


Go to top
பாடுமாப் பாடிப் பணியும் ஆறு அறியேன்; பனுவுமா பனுவிப் பரவும் ஆறு அறியேன்;
தேடுமா தேடித் திருத்தும் ஆறு அறியேன்; செல்லுமா செல்லச் செலுத்தும் ஆறு அறியேன்;
கூடும் ஆறு எங்ஙனமோ? என்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்து எனை ஆண்டு,
வாடி நீ வாளா வருந்தல்! என்பானை வலி வலம் தனில் வந்து கண்டேனே .


[ 6]


பந்தித்த வல் வினைப் பற்று அற, பிறவிப்-படுகடல் பரப்புத் தவிர்ப்பானை;
சந்தித்த(த்) திறலால் பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு,
சிந்தித்தற்கு எளிது ஆய், திருப்பாதம், சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை;
வந்திப்பார் தம் மனத்தின் உள்ளானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .


[ 7]


எவ் எவர் தேவர் இருடிகள் மன்னர் எண் இறந்தார்கள் மற்று எங்கும் நின்று ஏத்த,
அவ் அவர் வேண்டியதே அருள் செய்து, அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை;
இவ் அவர் கருணை எம் கற்பகக் கடலை; எம்பெருமான், அருளாய்! என்ற பின்னை,
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .


[ 8]


திரியும் முப்புரம் செற்றதும், குற்றத் திறல் அரக்கனைச் செறுத்ததும், மற்றைப்
பெரிய நஞ்சு அமுது உண்டதும், முற்றும் பின்னை ஆய் முன்னமே முளைத்தானை;
அரிய நால் மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை;
வரையின் பாவை மணாளன், எம்மானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.


[ 9]


ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து, நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று,
தோன்று தோள்மிசைக் களேபரம் தன்னைச் சுமந்த மா விரதத்த கங்காளன்;
சான்று காட்டுதற்கு அரியவன்; எளியவன்தன்னை; தன் நிலாம் மனத்தார்க்கு
மான்று சென்று அணையாதவன் தன்னை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.


[ 10]


Go to top
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும்-கற்ற நால்மறை முற்று அனல் ஓம்பும்
வலி வலம் தனில் வந்து கண்டு, அடியேன் மன்னும் நாவல் ஆரூரன்-வன்தொண்டன்-
ஒலி கொள் இன் இசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார், போய்,
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த, விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே .


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவலிவலம்
1.050   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி,
Tune - பழந்தக்கராகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
1.123   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ இயல் புரிகுழல்; வரிசிலை
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
6.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்
Tune - திருத்தாண்டகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
7.067   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,
Tune - தக்கேசி   (திருவலிவலம் மனத்துணைநாதர் மாழையங்கண்ணியம்மை)

This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000
          send corrections and suggestions to admin @ sivaya.org   https://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=7.067;