சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1163   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 375 - வாரியார் # 1044 )  

தரணிமிசை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான

தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்
     துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்
          தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் ...... பதுவாயுந்
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்
     பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன்
          தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ...... வசமாகித்
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்
     கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்
          சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ...... அயர்வாகிச்
செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்
     சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ்
          செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ...... கழல்தாராய்
செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங்
     கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந்
          திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ...... மகிழ்வாகிச்
சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன்
     டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்
          டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ...... தவமோதச்
சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்
     சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன்
          சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் ...... கதிர்வேலா
சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்
     தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ்
          சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் ...... பெருமாளே.
Easy Version:
தரணி மிசை அ(ன்)னையினிட உந்தியின் வந்து உகு
துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு
அதில் தசை உதிர(ம்) நிண(ம்) நிறைய அங்கமும் தங்க
ஒன்பது வாயும் தரு கரமொடு இனிய பதமும் கொ(ண்)டு
அங்கு ஒன்பதும் பெருகி
ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் தநயன் என
நடை பழகி மங்கை தன் சிங்கியின் வசமாகி
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று
பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன்
சிதற உயிர்
பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு
அன்புடன் சுடலை மிசை எரியில் இட வெந்து பின்
சிந்திடும்
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைங்கழல்
தாராய்
செரு எதிரும் அசுரர் கிளை மங்க
எங்கெங்கணும் கழுகு கருடன்நயனம் இது கண்டு கொண்டு
அம்பரம் திரிய
மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி
சின அசுரர் உடலம் அது தின்று தின்று இன்புடன்
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்டு திமிலை
பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத
சர வரிசை விடு குமர
அண்டர் தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று
வந்து
இந்திரன் சது(ர்) முகன் அடி பரவ மண்டு வெம்ச(ம)ம்
பொரும் கதிர் வேலா
சக(ம்) முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும்
தெரிவரிய
முடியில் அரவங்களும் திங்களும் சலம் இதழி அணியும் ஒரு
சங்கரன் தந்திடும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

தரணி மிசை அ(ன்)னையினிட உந்தியின் வந்து உகு ...
இந்தப் பூமியில் தாயின் வயிற்றில் (கர்ப்பப்பையில்) வந்து சேரும்
துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு ... ஒரு துளி பயறு
அளவு விழுதலாகி, இன்பகரமான முட்டை வடிவாகி,
அதில் தசை உதிர(ம்) நிண(ம்) நிறைய அங்கமும் தங்க ...
அதில் சதை, இரத்தம், கொழுப்பு இவை நிறைவு பெற, (பின்னர்)
அவயவங்களும் வந்து கூட,
ஒன்பது வாயும் தரு கரமொடு இனிய பதமும் கொ(ண்)டு
அங்கு ஒன்பதும் பெருகி
... ஒன்பது துவாரங்களும், ஏற்பட்ட
கைகளுடன், அழகிய கால்களும் கொண்டு, அங்கே (கண் - 2, காது - 2,
மூக்குத் தொளை - 2, வாய் - 1, மல, ஜலத்துவாரம் - 2 ஆகிய) ஒன்பது
துவாரங்களும் தெளிவாக வந்து சேர்ந்து,
ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் தநயன் என ...
ஒரு பத்து மாதத்தில் பூமியில் வந்து பிறந்து, அக்குழந்தையைக் கண்டு
பெற்றோர்கள் அன்பு பூண்டு தங்கள் மகன் என்று மகிழும்படி வளர்ந்து,
நடை பழகி மங்கை தன் சிங்கியின் வசமாகி ... நடக்கக் கற்று,
(வாலிப வயதில்) மாதர்களின் விஷமச் செயல்களில் அகப்பட்டு,
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று ... சலிப்பு
அடைந்து, நிலை மாறி, நிமிர்ந்த உடல் குனிய, தடியுடன் நடந்து
செல்வதாகி,
பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன்
சிதற உயிர்
... பிறகு படுக்கையில் கிடக்கை உற்றுக் கிடக்க, வீட்டின்
முன் வாயில் வழியே யமன் வந்து
உயிரைச் சிதறும்படிச் செய்ய,
பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி ... பிணம் என்று
முடிவு செய்து, மக்களும் சுற்றமும் சோர்வடைந்து,
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு ... இந்தப்
பிணத்தை எடுத்துச் செல்லவும் என்று பன்முறைகள் சொல்ல, எடுத்துக்
கொண்டு போய்,
அன்புடன் சுடலை மிசை எரியில் இட வெந்து பின்
சிந்திடும்
... அன்புடன் சுடுகாட்டில் நெருப்பில் இட, வெந்து சாம்பலாகி
நீரில் கலந்து அழிகின்ற
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைங்கழல்
தாராய்
... இந்தப் பிறவி இனி வராதிருக்க, தண்டைகள் அணிந்த உனது
இரு திருவடிகளையும் தந்து அருள்வாயாக.
செரு எதிரும் அசுரர் கிளை மங்க ... போரில் எதிர்த்து வந்த
அசுரர்கள் கூட்டம் அழிய,
எங்கெங்கணும் கழுகு கருடன்நயனம் இது கண்டு கொண்டு
அம்பரம் திரிய
... எல்லா இடத்திலும் கழுகு, கருடன் இவைகளின்
கண்கள் (பிணங்களைக்) கண்டு உணர்ந்து ஆகாயத்தில் சுற்றிவர,
மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி ... மிக்கு
வரும் பேய்களின் கொடிய கூட்டங்கள் தங்களுக்குள் மகிழ்ச்சி பூண்டு,
சின அசுரர் உடலம் அது தின்று தின்று இன்புடன் ...
கோபத்துடன் இறந்து பட்ட அசுரர்களின் உடல்களைத் தின்று,
மகிழ்ச்சியுடன்
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்டு திமிலை
பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத
... டுமுடுமுட
டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்டு - இவ்வாறு சப்திக்கும் திமிலை,
பறை, முழவு, துடி பம்பை முதலிய பறை வகைகளை மிக்க
பேரொலிகளுடன் எழுப்ப,
சர வரிசை விடு குமர ... அம்புகளை வரிசை, வரிசையாக செலுத்திய
குமரனே,
அண்டர் தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று
வந்து
... தேவர்களை முன்பு அடைபட்டிருந்த சிறையினின்றும்
விடுவித்த முருகனே என்று கூறி வந்து
இந்திரன் சது(ர்) முகன் அடி பரவ மண்டு வெம்ச(ம)ம்
பொரும் கதிர் வேலா
... இந்திரன், நான்முகன் பிரமன் முதலியோர்
உன் அடிகளைப் போற்ற, எதிரிகளை நெருக்கி கொடிய போரைச் செய்த
ஒளி வீசும் வேலாயுதனே,
சக(ம்) முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும்
தெரிவரிய
... உலகம் எல்லாவற்றையும் முழுதாக அமுதென உண்ட
மேக வண்ணத் திருமாலும் காண முடியாத
முடியில் அரவங்களும் திங்களும் சலம் இதழி அணியும் ஒரு
சங்கரன் தந்திடும் பெருமாளே.
... ஜடாமுடியில் பாம்புகளையும்,
சந்திரனையும், கங்கை, கொன்றை ஆகியவற்றையும் தரித்துள்ள ஒப்பற்ற
சிவபெருமான் அருளிய பெருமாளே.

Similar songs:

1163 - தரணிமிசை (பொதுப்பாடல்கள்)

தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song