அருணகிரிநாதர் முருகனிடம் கேட்ட வரங்கள்

உடல் பிணி நீங்க அருள்வாய்

தோதகம் மிகுத்த (பொதுப்பாடல்கள்) - வஞ்சகம் மிக்குள்ள (மண், நீர், தீ, காற்று, விண் என்னும்) ஐந்து பூதங்களின் மயக்கத்தால் ஏற்படும் விலாப் பக்கத்தில் உண்டாகும் சூலை நோய், வலிப்பு முதலிய நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து, எங்கும் பரவும் பெரு வயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குஷ்ட நோய்கள், தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூல நோய் பின்னும் பல வகையான நோய்கள் சிறிதேனும் என்னை அணுகாமல், வருந்தி நிற்கும் என்னை முக்தி நீடித்து விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக.

இருமலு ரோக (திருத்தணிகை) - இருமல், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக.

ஈளை சுரங்குளிர் (பாகை) கோழை, காய்ச்சல், குளிர், வாதம் என்ற பல நோய்கள் என்னைச் சூழ்ந்து நான் மிகவும் இளைப்பு அடையாமல், வலிமையை இழந்து துன்பமடையும் சிறிய கூடாகிய இவ்வுடலில் புகுந்து சுடுகாட்டிற்குச் சேரும்படி உயிரை இழக்காமல், மூளை, எலும்புகள், நாடிகள், நரம்புகள் இவையெல்லாம் வெவ்வேறாகும்படி நெருப்பில் மூழ்கி வேகாமல், மூலப்பொருளான சிவயோக பதவியில் நான் வாழ்வுபெறும்படியாக உபதேசித்தருள்வாயாக.

யோக நெறியில் சேர்ப்பாய்

மூலம் கிளர் ஓர் (பழநி) - மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஓர் உருவமாக, உடலின் நடுவில் நான்கு அங்குல அளவின் மேல், சுழுமுனை, இடை கலை, தோன்றும் பிங்கலை என்னும் நாடிகளுடன் கலந்து, முதல் வேர்களாகிய இந்த மூன்று நாடிகளும் (ஒவ்வொரு நாடியின் புறமும்) பிரகாசமான ஒளியைப் பரப்பி, ஒப்பற்ற சூலாயுதம் போல ஓடுகின்ற பிராண வாயுவை முதுகுத் தண்டிலுள்ள சுழு முனை வழியில் கணக்காக ஓடச்செய்து, (பின்னர் அது) (நெருப்பாறு, மயிர்ப்பாலம் என்னும்) நெற்றியில் விளங்கும் ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை நிலையில் (சிவனைக் குறிக்கும்) சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிற்கும். நிறைந்து (எல்லா நிலைகளிலும்) ஒளி வீசுகின்ற பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து, பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும் அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள் புரிவாயாக.

சூலம் என ஓடு திருக்கடவூர் - சூலம் போல ஓடுகின்ற பாம்பு போன்ற பிராணவாயுவை வெளியேறாது அடக்கி, பரிசுத்தமான பர ஒளியைக் காணவும், முத்தி நிலை கை கூடவும், சூழ்ந்துள்ள ஆணவ இருளாகிய உருவத்தை அழிபடும்படியாக யோக நெருப்பில் அதை எரித்து, ஜோதி ரத்னபீடம் அமைந்துள்ள நிர்மலமான வீட்டை அடைந்து, அந்த மேலைப் பெரு வெளியிலே, ஆயிரத்தெட்டு இதழோடு கூடிய மேலான குரு கமலத்தில் ( ஹஸ்ராரத்தில்) சேர்ந்து, சிவ ஞான இன்ப ஒளியைப் பிரதிபலிக்கும் புனலில் மூழ்கி, வேல், மயில் இவைகளின் தரிசன ஒளியை அந்த நிலையில் கிடைக்கப் பெற்று, முக்தி நிலையைச் சிறப்புடன் பெறும் அருளைத் தந்தருளுக

பூரண வார கும்ப (திருச்செந்தூர்) - நான் என வரும் ஆணவம் நீங்கி, தூயவனாக இருந்து, பிராண வாயு உடலின் பல பாகங்களுக்கு ஓடி, மூக்கின் மேல் இரண்டு விழி முனைகளும் பாய, காயம், வாக்கு, மனம் என்னும் மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருவடிகளை நினைந்து, காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப் போல் நான் விளங்கும்படி அருள் புரிவாயாக.

ஆசை நாலுசதுர (பழமுதிர்ச்சோலை) - திக்குகள் நான்கு பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி இனிய ஒளி வீசிட, இரண்டு பக்கங்களிலும் பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற பிராண வாயு விருப்பம் மிக்கெழ சுவாதிஷ்டான (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து, (தில்லையில் நடனம் செய்யும் நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க, மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி, வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி ... வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய, (பிரமரந்திரம் - பிந்து மண்டலம், ஹஸ்ராரம் - அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும் கண்டறிந்து, சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்த) ஆதாரத்தில், விந்து நாத ஓசை சாலும் ... சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள ஒப்பற்ற சத்தம் மிகுந்த பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய், ஒன்று சேர்ந்து மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன், புகழ்ந்து சொல்லப்படும் வேத வாசி சக்திக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி ஒளிக்குள்ளே, ஊமையாகிய என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற, பிரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க, உனது அருளாற்றலால் ஒளிர்கின்ற யோக விதங்கள் எட்டும் இதில் பொருந்தும் வகையை நான் அறியுமாறு இன்று தந்தருளுக.

ஞான நெறியில் சேர்ப்பாய்

ககனமும் அநிலமும் (வள்ளிமலை) - ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும், கெட்டுப்போன மாமிச நாற்றமும், கிருமிகள் உள்ளதுமான இந்த உடம்பு, நெருப்புப் பொறி பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி, யுகங்கள் முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக, ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக.

ஐங்கரனை (கொங்கணகிரி) - ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி இடைவிடாமல் வளரும் இரவு, பகல், இவை இல்லாமல் போகும் நிலையினை அருள் புரிவாயாக. செந்தமிழால் போற்றி, உன்னை அன்புடனே துதிக்க மன நிலையை அருள் புரிவாயாக. நிலைபெற்ற தவநிலையை கொடுத்து உந்தன் அடிமையாகிய நான் முக்திநிலை பெறவேண்டி சந்திர வெளியைக் காணும்படியான யோகநிலை மார்க்கத்தைக் காட்டி அருள் புரிவாயாக. பெருமை, கெளரவம் இவைகளை எட்டு திக்கிலும் உள்ளோரெல்லாம் மதிக்கும்படியாக ஓங்கும் சிறப்பு வகையில் அருள்வாயாக. மாதர்கள் தரும் இன்பமே மிக்க இனிமையான சுகம் என்றிருந்த என் மனம் உன்னையே நினைத்த நிலையாய் அமைதிபெற அருள்வாயாக. இரவும் பகலும் மக்களை சுபமாக காக்கும் முறைகளை அறியவேண்டி என்னை வந்தடைந்து கேட்க, அவர்களுக்கு அருளும் புத்தியினை நீ எனக்கு அருள்வாயாக. கொங்கு நாட்டில் உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்) (அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று ( முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக.

நகரம் இரு பாதமாகி (பொதுப்பாடல்கள்) - 'நமசிவய' என்னும் பஞ்சாக்ஷரத்தில் 'ந' என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு பாதங்களாகும். 'ம' என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும். நடுவில் உள்ள 'சி' என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும். 'வ' என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய திருமுடி, 'ய' என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும். இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் 'நமசிவாய' என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும் அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள் மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ+உ+ம்) என்று கூடிய அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய அறிவின் அறிவொளி பரி பூரணப் பொருளாகும். அந்தப் பொருளை அடியேனும் உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும் அனுபவ ஞானத்தை அருள்வாயாக.

குருதி கிருமிகள் (வயலூர்) - இரத்தம், புழுக்கள், நீர், மலம், மயிர், சதை ஆகிய இவை பொருந்திய உருவை உடைய இந்த உடல் எடுத்தது போதும் போதும். அழகோடு விளங்கும் பல விதமான நகைகளும், நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும், ஆறு சுவைகள் கூடிய உணவும், படுக்கையும், குளிர் இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட வீடும் - இவைகள் யாவும் போதும் போதும். மனைவி, குழந்தைகள், தாயார், உடன் பிறந்தவர்கள், உறவு முறைகளைக் கூறி குலவும் சுற்றத்தினர் இவர்களும் போதும் போதும். ஒரு நான்கு மறைகளின் வழியை எடுத்துக் கூறும் சைவ சித்தாந்த நூல்களைத் தவிர வேறு உலக சம்பந்தமான நூல்களை ஓதுவதும் போதும் போதும். விளங்கி நிற்பவனும், அழிவில்லாதவனுமாகிய உன்னை நினைப்பவர்களது. நட்பைத் தவிர, இனி பிறரிடத்தே திரிவது நல்லது என்று அவர்கள் வசப்பட்டு, அவர்களை வழிபடுகின்ற நட்பும் போதும் போதும். நின் திருவருள் அலை வீசும் கடலின் சங்கமத் துறை வழியில் செல்லும் அறிவை என் மனம் மகிழும் பொருட்டு நீ அருள்வாயாக.

சுருதி மறைகள் (உத்தரமேரூர்) - வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள், எட்டுத் திக்குப் (1) பாலகர்கள் , (2,) முநிவர்கள் குற்றமில்லாத ரிஷிகள் ஏழு பேர் சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள், சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச மாயா அதிகாரிகள், (3) பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள் வெகு தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள், அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக் கோடிக்கணக்கான அடியார்கள், திருமால், பிரமன், ஒரு கோடி பேர் - இவர்களெல்லாம் கூடி, அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது திருவடிகளை, அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக.

எத்தனை கலாதி (திருத்தணிகை) எத்தனை கலகச் சண்டைகள், எத்தனை சித்து வேலைகள், அங்கு எத்தனை வியாதிகள், எத்தனை பைத்தியக்காரச் செயல்கள், அசையும் உயிராகவும், அசையாததாகவும் உலகில் எடுத்த உடல்கள் எத்தனை, நீங்காத அச்சம் தரும் செயல்கள் எத்தனை, அங்கே வலிமையுடைய ஆண்மைச் செயல்கள்தாம் எத்தனை, அங்கே ஆசைகள் எத்தனை விதமானவையோ, புலால் உண்டு தினந்தோறும் பசியாறக்கூடிய செயல்கள் எத்தனை, பித்துப்பிடித்தவன் போன்ற யான் வயிற்றில் உண்டு இவ்வாறு கெட்டுப் போகாமல் பிறவியினின்றும் விடுதலை பெற்றிட, உனது அடியார் கூட்டத்தின் செயல்களான தன்மையும், யாராலும் உணர்தற்கு அரியதாக நிற்பதும், பரவிப் பிரகாசிக்கின்ற ஒளிமயமான ப்ரணவ மந்திரப் பொருளாக நிற்பதும், பாச பந்தங்களால் அறிவதற்கு அரிதாக நிற்பதுமான உன் கழல்களைத் தந்தருள்க.

குவலயம் மல்கு (வெள்ளிகரம்) - அறிவில்லாதவருடன் நட்புக் கொள்ளும் செய்கைகளை உடைய நானும், இங்கு உன்னுடைய அடியார்களைப் போல் அருமையான வேதங்களையே உண்மையான நூலாகக் கருதி, மநு தர்ம சாஸ்திர வழியிலே நடந்து, அறிவு இன்னது என்பதை உள் அறிவுகொண்டு அறிந்து, பூரண ஞானம் பெற்று, எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள் செய்வாயாக.

துடித்து எதிர் (பொதுப்பாடல்கள்) - உடல் பதைத்து, எதிர் எதிரே கூர்மையுடன் எழுகின்ற, முறை கெட்ட தர்க்கம் செய்யும் சமயவாதிகளின் சுழல் போன்ற கூட்டத்துக்கு கோடிக் கணக்கில் எதிர் வாதம் பேசி, மிதித்து வருத்தமுறச் செய்யக் கூடிய தீமைகளின் அதிகார நிலையை அறுத்துத் தள்ளக் கூடியதும், வேலாயுதத்தைச் செலுத்தி (பகைவர்களின்) உடலைத் துண்டிக்க வல்லதும், நூல் வல்லவர்களின் தலை மீது உள்ள கர்வம் மிகுந்த தலைமுடியை விழுந்து போகும்படி செய்ய வல்லதும், யாவரும் அடிமைப்படும்படி ஒழுங்காக அமைந்துள்ள வேதக் குவியல்களெல்லாம் கண்டு உணராததுமான மூலப்பொருளை அறியும் படி நீ எனக்கு ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை யாரும் பழிக்காத முறையில் உபதேசித்து அருள்வாயாக.

மன நூறு கோடி (பொதுப்பாடல்கள்) - மயிலில் ஏறி, விரைவில் வந்து, பரவெளியாம் ஞான முக்தியினை நீ தந்தருள்வாயாக.

கலக்கும் கோது (திருச்செங்கோடு) - பிறருக்குக் கிடைக்காத ஞான உபதேசத்தை, எனக்கு சிறப்பாக விருப்பம் மிகவும் கொண்டுள்ள நான், ஊழ் வினையின் பயனாக மனத்தில் நினைக்கின்ற தீய குணங்களை விட்டு உய்யும் பொருட்டு அபயம் என்று நீஅருள்வாயாக.

ஊனத்தசை தோல்கள் (சீகாழி) - அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை, மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறு குடிலாகிய இந்த உடல் நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து, ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும், கூனித் தடிகொண்டு நடந்தும், இழிவைத் தரும் சளி மிக்க குப்பையான இந்த உடலை, மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் படி செல்வதான இந்த உலக மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி, உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக.

நாளு மிகுத்த (பொதுப்பாடல்கள்) - நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி நெகிழ்ந்த மனத்தினனாய், . உனது நடனக் கோலத்தைக் காண விரும்பும் எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க அருள் புரிவாயாக.

பூசலிட்டு (திருத்தணிகை) - வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள் புரிவாயாக

அதிரும் கழல் (குன்றுதோறாடல்) - துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக

அறிவிலாப் பித்தர் (காஞ்சீபுரம்) - காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் எனக்கு வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து, நான் தெளிவு பெறுவதற்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்

ஒருவழிபடாது (சோமநாதன்மடம்) - என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு, நீ இருப்பதை ஒருகாலும் நினையாத என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு அடியேனுக்கு, இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகம் தான் தைரியத்தைத் தர வல்லது என்று மொழிந்து காட்டுவதும், பாசக்கயிறை வீசும் மிகுந்த கோபங்கொண்ட யமதூதர்களை மோதி விரட்டியடிக்கக் கூடியதுமான, மெளன நிலையான ஞானோபதேசம் என்ற ஆயுதத்தால் எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிய, நீ அன்போடு அருள்வாயாக.

வினை நீங்க அருள்வாய்

அறுகுநுனி பனி (திருவிடைமருதூர்) - ஆதலால் நல் வினை தீ வினை என்னும்) இரண்டு வினைகளும் மூன்று மலங்களும், இறப்பு, பிறப்பு என்பனவும் ஒழிய, ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும் வகை வருமாறு பேரின்ப நிலையை அருள்வாயாக.

அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) - யமன் என்னை அழைத்துச் செல்லாத படிக்கு, என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை), என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக, உன் உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் தந்தருள்வாயாக.

அடியார் மனம் (பொதுப்பாடல்கள்) இழிந்தவனாகிய என்னுடைய ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் யாவும், நல்வினை, தீவினை என்ற இரு நோய்களுடனும், என்னைப் பிடித்துள்ள தரித்திரத்தோடும் யாவுமாக அழிபட்டு, ஞான பரிசுத்த பரவெளி எனக்குப் புலப்பட்டதாகி, மகிழ்ச்சி மிகுந்து ஏற்பட, நீ எனக்காக மயில் மீது ஏறி வந்து, முக்தி வீட்டை யான் அடையுமாறு என்மீது அன்பு வைத்து, உனது திருவருளைத் தந்தருள்க.

வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்) - தீயில் இடப்பட்ட பஞ்சு போல மிகவும் கெட்டுப் போகின்ற அடியனாகிய நானும் துன்பப்படும் வினைத் தொடர்புள்ள கடலிலிருந்து கரையேற இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த உன் திருவடிகளாகிய தாமரைகளை அருள் புரிவாயாக.

அனகனென அதிகனென (பொதுப்பாடல்கள்) - வாக்கு அடங்கவும், மனம் ஒடுங்கவும், ஓர் உபதேசப் பொருளை தந்தருள்வாயாக

அடியார் கூட்டத்தில் எனை சேர்ப்பாய்

சுருளளக பார (பழநி) - உன்னுடைய அடியார்களைப் போல் அருமையான வேதங்களையே உண்மையான நூலாகக் கருதி, மநு தர்ம சாஸ்திர வழியிலே நடந்து, அறிவு இன்னது என்பதை உள் அறிவுகொண்டு அறிந்து, பூரண ஞானம் பெற்று, எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள் செய்வாயாக.

முறுகு காள (சுவாமிமலை) - ஞான ஒளியைச் சிறந்து வீசும் உனது ஆறு முகங்களையும் மிகவும் விரும்பி, சோர்வில்லாமல், அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அறுகம் புல், ஊமத்தை, மணம் வீசும் குவளை, வாசம் மிக்க திரு நீற்றுப் பச்சை வில்வ இவைகளை எல்லாம் நிரம்ப உன் பாதங்களின் மேலே சொரிந்து உனது திருவடியை விரும்பி, அவசமாகி உருகு தொண்டர் உடன் அதாகி விளையும் தன் வசம் அழிந்து மனம் உருகுகின்ற அடியார்களுடன் கலந்து கூடி, அதனால் உண்டாகும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க முறைமை பெறக் கூடிய ஒரு பேற்றை அருள்வாயாக.

மாலினால் எடுத்த (வைத்தீசுரன் கோயில்) - ஆசை என்ற ஒன்றினால் உருவெடுத்த, துளைகள் உள்ள இந்த உடம்பு, சோறு கொண்டு வளர்க்கப்படும் இந்த சரீரம், மாறி மாறி எண்ணம் கொள்ளும் இந்த மனம், இவையெல்லாம் அநியாயமான பிரபஞ்ச மயக்கத்தால் எடுத்தவனாக நான் வாட்டம் உறுகின்றேன். ஐயனே, எனக்கு இரக்கப்பட்டு வந்தருள்வாய் ஐயா, இனிப் பிறப்பதும் இறப்பதும் இல்லாமல், உன் வேலாயுதத்தால் என் வினைக்கூட்டங்களை தூளாகும்படி எரித்து, உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க. அன்பு நிறைந்த உன் அடியார் திருக்கூட்டத்தில் யானும் கலந்து, உன்னைப் போல பரிசுத்த உள்ளம் பெறவே, மகிழ்ச்சி கொள்ளும் நமக்கு உற்ற துணையாகும் என்றிருக்க பரிந்து அருள்வாயாக.

விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக

சிவமாதுடனே (திருவருணை) - சிவம் என்கின்ற தலைவியுடன் சிவபோகமாய் கொண்டவனாக, சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு அதனால் அறிவுப் பசி தீர்ந்து, விளங்கும் 'தலைவன் - தலைவி என்ற ஈருருவமும் ஒரே உருவமாய் எட்டுத் திசையிலுள்ளவர் சுகித்து உணர்பவன் இவன்தான் என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி, இவன் இளையவன் (முருகன்) என வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற, சிவபிரானிடத்தில் வேண்டி,நான் விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.

பக்தி மார்க்கத்தில் சேர்ப்பாய்

நிறுக்குஞ் சூதன (திருச்செந்தூர்) - அழிவில்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும், திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக் கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக

நிகமம் எனில் (பழநி) - உன்னை மனம் ஒரு வழியில் நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக

தரையினில் வெகுவழி (கூந்தலூர்) - நிரம்ப மலர்கள் கொண்டு விரும்பிப் பூஜித்தாகிலும், ஒரு பூவோ ஓர் இலையோ கொண்டாகிலும் நான் உன்னை நினைத்து, நல்ல வகையில் அன்போடு கீழே விழுந்து உனது திருவடிகளைத் தொழுமாறு அருள்வாயாக.

அகிலநறுஞ் சேறு (பொதுப்பாடல்கள்) - ஒளிரும் நளினமும், அணிகளின் விளக்கமுமுள்ள அலங்காரமான மார்பில் அணையும் செந்நிறச் செல்வனே, உன்னை வணங்குகிறேன் என்று கூறி நான் உன்னைப் போற்ற அருள் புரிய வேண்டும்.

இருந்த வீடும் (பொதுப்பாடல்கள்) - நான் வசிக்கும் வீடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், என்னைச் சுற்றி அமைந்த உறவினரும், என் மனதிற்கு உகந்த ஊரும், என் மனைவி முதலிய பெண்களும், எனது இளமையும், செல்வம் நிறைந்து விரிந்து பரந்த எனது நாடும், இந்நாட்டின் மலைகளும் மற்றும் எல்லாம் நிலைத்திருக்கும் என்றெண்ணி நான் மகிழாமல் ஒளிதரும் விளக்குகளை ஏற்றி உன்னை வழிபட எனக்கு நீ அருள்வாயாக

எருவாய் கருவாய் (திருவீழிமிழலை) -உற்பத்திக்கு வேண்டிய எருவாய், கர்ப்பக் கருவாய், அதனின்று உருவமாகி, இவ்வுருவமே பயிர் வளர்வதுபோல் விளைபொருளாகி இவர் இவர் என்று இன்று இருப்பவர், இறந்தபின்பு, அவர் அவர் என்று சொல்லும்படியாகி, அவர் அவர் என்று பேசப்பட்டவர், பிறந்தபின்பு இவர் இவர் என்று சொல்லும்படியாகி, இந்தச் சங்கிலியே ஒரு தொடர்ச்சியாக, வெறி பிடித்தது போல, ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களை அடைந்து வீணாக யான் அழிவுறாமல், ஒருமுறையாவது முருகனே, பரமனே, குமரனே, என்றும் என்னுயிரைக் காத்தருள் என்றும் கூவித் துதிக்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக.

எலுப்புத் தோல் (சிதம்பரம்) எலும்பு, தோல், மயிர், நாடிக் குழாய்களின் நெருக்கம், உள் அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள், இரத்தக் கடல்நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில், சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம், வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல், இழிவான மூல நோயுடன் விரைவாதம், நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபநோயின் காரணமாக கோழையின் கலப்பு, செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி, குருட்டுத் தன்மை, கால் முடமாயிருத்தல், பேச வராமை, உள் பக்கத்தே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண், (இத்தகைய நோய்கள் எல்லாம்) குடி புகுந்த, கேடு செய்கின்ற இந்த உடலே நிலையானது என்று எடுத்துக்கொண்டு, பாழ்படுத்தும் கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன், உனது திருவடிகளைப் பெற, ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக.

குருதி புலால் என்பு (திருவானைக்கா) - இரத்தம், ஊன், எலும்புகள், தோல், நரம்புகள், கிருமிகள், காற்று, நீர், மாமிசம், நெருங்கிய குடல்கள், கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த உடல் என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலக் காட்டிலே ஓடுகின்ற, கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள், மகா பொல்லாதவர்கள், பஞ்சமா பாதகச் செயல்களை செய்ய, அதன் காரணமாக, வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்களில் சொல்லப்படுகின்ற சரியை, கிரியை, தேவ பூஜை, வழிபாடு தோத்திரம், நாடிச் செய்யும் தியானம் முதலியவற்றில் ஒன்றையேனும் முயற்சித்து அநுஷ்டிக்காமல் அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டுகொள்வதற்கும் நீ அருள்வாயாக.

எகினி னம்பழி (திருப்பந்தணை நல்லூர்) - ஆசையும், நோய், பிணி இவைகளை நிரம்பக் கொண்டு நாய் போன்ற அடியேன் இனிமேல் அலைச்சல் உறாமல் அமுதம் போன்ற (சரவணபவ என்னும்) ஆறு எழுத்து மந்திரத்தையும் ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, நான் அன்பு கூடிய மனத்துடன் முருகா என்று சொல்லும்படியான கழல் அணிந்த உனது திருவடியை அருள்வாயாக.

ஆலம் வைத்த (திருவானைக்கா) உடலெங்கும் நடுக்கத்துடன் பித்தமும் அதிகமாக ஏற்பட்டு, தலையில் எழுதியுள்ள விதியின்படி, அதன் காரணமாக பூமியில் பொய்யன் என்று பெயர் பெற்று, பல துன்பங்களுக்கு ஆளாகி, புழுக்கள் வாழும் மலப் பிண்டமாகிய, இந்த உடலை (பிறவியை) பேணி வளர்க்கும் எனக்கு உனது திருவருளைத் தந்து அருள வேண்டும்.

இருளும் ஓர்கதிரணு (சிதம்பரம்) இருட்டும் சூரிய ஒளியின் ஒரு கதிரும் புகமுடியாத தேவலோகத்தை யான் அடைந்து, என் நல்வினை, தீவினை என்ற இரு நோய்களும் எரிந்து போகவும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும், ஒளி பொருந்திய மூலாதார அக்கினி பொருந்தி, அருவி பாய்வது போல இனிய தேவாமிர்தம் ஊற, உன் திருவருள் யாவும் என் வசமாகும்படியாக உதவியருளி, சிவஞானத்தை யான் மகிழ்ந்து பெறுமாறு அருள் செய்து உன் இரு திருவடிகளையும் தருவாயாக.

இருவினையஞ்ச (திருப்பந்தணை நல்லூர்) சஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக, இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக, இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய, எனது துயரமெல்லாம் குறைந்துபோக, உனது திருவருள் பெருக, இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி, சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே, முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா, குகா, வேலா, சிவசிவ என்று கூறி அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.

வேய் இசைந்து (பழநி) - ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும், மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கியே சில பூஜைகளையும் செய்ய அருள் புரிவாயாக.

ஈயெறும்பு நரி (வாலிகொண்டபுரம்) - ஈ, எறும்பு, நரி, நாய், பேய், கழுகு, உண்ணப்போகும் இந்த உடலை நான் சுமந்து இது தக்கது என நினைத்து ஆணவ மொழிகளையே பேசி, மதயானை போலே எல்லாமே என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும்படியான சுகநிலையை அடைந்து, இது நிலைத்திருக்கும் என நம்பி, சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப் போதுமோ என்று கூறும்படியாக, பொருட் செல்வங்களால், ஒப்பற்ற கர்வம் மிக்க எண்ணங்களுடன் பேச்சுக்கள் பேசி, குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச, மங்கையர்கள் நடனமாட, வெண்சாமரங்கள் வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலியவை ஊதிவர, பல்லக்கில் அழகாக நான் வீற்றிருக்கும் பகட்டான பெரிய வாழ்வைத் தேடிக்கொண்டு திரியும் ஆசையானது வெந்தழிய, உன்மீது ஆசை மிகுந்து, மங்களகரமான உனது தரிசனத்தைக் கண்டு அனுபவித்து, உன் திருவடித் தொண்டன் என்னும்படியான அன்பை எனக்குத் தருவாயாக.

உலகபசு பாச (பழநி) - உலகத்தில் உயிர், பாசம் இவை சம்பந்தப்பட்ட உற்றோரும், சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள், மல, மூத்திர, மூச்சு முதலிய உபாதைகளால் எனது புத்திநிலை கெடாதவாறு உனது திருவருளைத் தந்தருள்வாயாக.

உறவின் முறையோர் (பொதுப்பாடல்கள்) உறவு முறை கொண்டுள்ள சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை உண்டாகும்படி விளைவித்து, அவர் தம் உள்ளத்தில் உள்ள கவலையால் உருகுதலை விட்டு, இந்த உடலை எடுத்ததின் வினைப்பயனாக, உடலை அழிவு செய்கின்ற பெரிய ஒரு சுடுகாட்டில் மிக்கெழும் நெருப்பை மூட்டிவிட, உயிரை யமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், மனமும் உ(ன்)னி வேட்கை மிகவும் உன(து) தாள்கள் எனது மனமும் உன்னை நினைத்து காதல் மிக உண்டாக, உனது திருவடிகளை மகிழ்ச்சியுடன் சிரத்தையோடு போற்றுதற்கு புத்தியைத் தந்து அருளுக.

விடமடைசு வேலை (விநாயகர்) - அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள் புரிவாயாக

கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்) - விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள் புரிவாயே.

இருகுழை யெறிந்த (திருச்செந்தூர்) - விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக

ஆலகாலம் என (பழநி) - உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற் கொண்டு, உனது இரண்டு திருவடிகளை தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக.

பாதி மதிநதி (சுவாமிமலை) - யமன் என்னை அணுகாத வகைக்கு உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக.

மருவே செறித்த (சுவாமிமலை) - என்னிடம் அன்பு மாறாமலும், என் பிழைகளைப் பொறுத்து உன் இரண்டு திருவடிகளிலும் பொருந்தியுள்ள பேரின்பப் பெருவாழ்வை யான் பற்றும்படியாக அருள் புரிவாயாக.

செம் கலச (சிதம்பரம்) - உன் அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக.

இணங்கித் தட்பொடு (சிதம்பரம்) - கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு அருள்வாயாக.

அங்கை நீட்டி (திருசிராப்பள்ளி) - வேசிகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்து, பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக

ஆதிமக மாயி (ஊதிமலை) - முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய்

கொண்டாடிக் கொஞ்சும் (தென்சேரிகிரி) - தொன்மை வாய்ந்த சொற்களால் அமைந்த பழைய வேதமொழியைக் கொண்டு, தர்க்க வாதங்களுக்கு இடமில்லாதபடி, உமையை இடப் பாகத்தில் கொண்ட சிவபிரானுக்கு முன்பு உபதேசித்தப் பிரணவப் பொருளை அருள்வாயாக.

எதிரிலாத பத்தி (கதிர்காமம்) - சமானம் இல்லாத அன்புடையவனாகி இனிமையைத் தரும் உன் திருவடிகளின் தியானத்தை இரவும் பகலும் இதயமாகிற கடலுக்குள்ளே பதியவைத்து என் உள்ளத்திலே உன் நினைப்பு சிறக்குமாறு அருள்வாயாக.

அருவரை எடுத்த (வயிரவிவனம்) - உன் திருவடி மலரை உள்ளத்தில் தினமும் நினைத்துத் தொழுதிருக்கும் கருத்தை உடைய அடியார்களின் தாள்களைப் பணிந்திடவும் எனக்கு ஞானத்தைத் தந்தருள்வாயாக.

திரைவார் கடல் (திருமயிலை) - குகனே என்று ஓதி அடியேனும், உன் தொண்டர்களாய் வழிபடும் அடியார்களோடு அருளன்பு கூடியவனாக ஆகின்ற விசேஷமான நாளும் எனக்கு உண்டோ? உன் நாமங்களைச் சொல்ல நீ அருள் புரிவாயாக.

அனுத்தே னேர்மொழி (திருப்போரூர்) - விலைமாதர்கள் மீதுள்ள ஆசையை ஒழிக்க அருள் புரிவாயாக. -

சீர் உலாவிய (திருப்போரூர்) - சாம வேதம் வல்ல மறையோர்களும், தேவர்களும் போற்றி தினந்தோறும் புது மலர்களைத் தூவிய உனது திருவடியில் விழுந்து வணங்கும் அறிவை வழங்கி அருள் செய்வாயாக.

விடமும் வேலன (திருவதிகை) - கீதத்துடன் தினமும், உனது பன்னிரண்டு புயங்களைப் போற்றிச் செய்து உரைக்க (எனக்கும்) அருள் புரிவாயாக.

அமுதினை மெத்த (மாயூரம்) - ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக.

பழியுறு சட்டகமான (திருவிடைக்கழி) - பழி பாவங்களுக்கு இருப்பிடமான உடலாகிய இந்தக் குடிசையை எடுத்து இழிவான சொற்களை சொல்லும் செயல்களை உடைய மாதர்கள் தருகின்ற மாயமான படுகுழியில் படியாக கரையேறும் வழி உண்டோ என்று தடவிப் பார்த்தும் தெரியாமல், பழங்கொள்கைகளையே ஆராயாமல் பிதற்றும் இவ்வுலக முழுமூடர்கள் . திருந்து விருப்பமுடன் ஓதும் பல குழப்பம்தரும் நூல்களைத் தேடி ஒரு பயனையும் தெளிந்து அறியாமல் இறப்பதன்முன்பு, உன் தாமரைப் பாதங்களை விரும்பி உருகி, உள்ளத்தில் பக்திரசம் அமுதமாக ஊற உன் திருப்புகழை ஓதுவதற்கு அருள்வாயாக.

உரை ஒழிந்து (த்ரியம்பகபுரம்) - செல்வத்தை அபகரிக்கும் பலவித கெட்ட எண்ணங்களை உடைய வேசியர்கள், பிறருடைய சொத்துக்களும் தம்முடையதே என்று நினைப்பவர்கள் பேசும் கோப மொழிகளில் அகப்பட்டு நிற்கும் இழிவுள்ள என் செயல் இனி முற்றும் அற்றுப் போக அருள் செய்வாயாக

கொந்தார் மைக்குழல் (திருப்பனந்தாள்) - இந்த அற்பனின் மனம் அலைந்து அலைந்துத் திரியாமல், அழிதல் இல்லாத சிறந்ததொரு உபதேசப் பொருளைஇதோ பெற்றுக்கொள், இது ஒரு அற்புதமானது என்று கூறி இவ்வண்ணம் இப்போதே அருள்வாயாக.

கார் அணியும் குழல் (திருத்தவத்துறை) - பொது மகளிர் மீதுள்ள காம மயக்கத்தை விட்டு ஒழிக்கும்படி அருள் புரிவாயாக.

சந்திதொறும் நாணம் (சிங்கை) - அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக.

ஆனைமுகவற்கு (மதுரை) - உன் இரு திருவடிகளிலும் வீழ்ந்து பொருந்தும் பதவியில் நல்வாழ்வோடு நான் சிறந்து விளங்க அருள் புரிவாயாக.

முத்து நவரத்நமணி (மதுரை) - பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.

தோடு மென்குழை (பொதுப்பாடல்கள்) - யாரும் நின்று உன் திருவருளால் உன் திருவடிகளைத் தொழ (அவர்களுக்கு) மன வலிமையைக் தந்து அருளும் செல்வனே, இழிவான நிலை ஒழிவதற்கு, ஆதி நாயகனான சிவ பெருமான் தந்தருளிய பெருமானே, அடியேன் நல் வாழ்வு பெற அருள்வாயாக.

கலந்த மாதும் (பொதுப்பாடல்கள்) - தேய்ந்து அழியும் இந்த உடலுடனும், மனத்தில் கொண்ட துயரத்துடனும் இருக்கின்ற எனக்கு நான் மகிழ்ச்சி கொண்டு தியானிக்கும் உனது திருவடியைத் தந்து, உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு அருள் செய்வாயாக.

கருதியே மெத்த (பொதுப்பாடல்கள்) - உனது இரண்டு திருவடிகளின் கிருபா கடாட்சத்தின் பெருமையைப் பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை எனக்கு அருள் புரிவாயாக.

அளகநிரை குலைய (பொதுப்பாடல்கள்) - மயிலின் மீது ஏறி உலகம் முழுவதும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த உனது இரண்டு நறு மணம் வீசும் மலர்ப் பாதங்களை அருள்வாயாக.

எத்தி இரு குழை (பொதுப்பாடல்கள்) - வேசிகளின் மீதுள்ள ஆசை அற்றுத் தொலைய அருள் செய்வாயாக.

குனகியொரு மயில் (பொதுப்பாடல்கள்) - நாயினும் கீழான அடியேனும் ஈடேறும் பொருட்டு அருள் புரிவாயாக.

ஞானா விபூஷணி (பொதுப்பாடல்கள்) - உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய, நாயினும் இழிந்த, அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஓட்டம் பிடிக்க, நன்றாக கலை ஞானத்துடன் உன்னை நான் பாட அருள்வாயாக.

பூசல்தரும் கயலும் (பொதுப்பாடல்கள்) - சுற்றுகின்ற பம்பரம்போலச் சுழன்று எதிரே ஓடி விழுதலைக் காண்பது போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பட, அதாவது உயிர் உடலை விட்டு நீங்கும் (இறப்பு என்னும்) பயம் ஒழிய அருள் புரிவாயாக.

குடிமை மனையாட்டி (பொதுப்பாடல்கள்) - உனது குற்றமற்ற, மலர் போன்ற, சிறந்த நிலையாகிய சிவந்த திருவடி என்னும் பற்றுக் கோட்டை அருள்வாயாக.

சீர் சிறக்கும் மேனி (பழமுதிர்ச்சோலை) - அடடா என்று என்னைக் கூவி அழைத்து, உனக்கு என்ன மயக்கம் இது சொல்லுக, என வற்புறுத்தி, நீ அன்பு வைத்த திருவடி இதோ என்று கூறித் தந்து அருள் புரிவாயாக.

வானவராதி யோர் (திருப்பூவணம்) - தீயகுணங்களைக் கொண்ட பாவியாகிய நான் உனது சேவடிகளைக் காண நீ அருளவேண்டும்.

Back to top -