அருணகிரிநாதரால் மறக்க முடியாத 23 நிகழ்சிகள்

பக்கரை விசித்ரமணி (விநாயகர்) வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்

நினது திருவடி (விநாயகர்) வளரும் யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து, அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய சொற்களைக் கொண்டு (துதித்தும்), தூக்கிய கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டியும் (அந்த விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன்.

கதியை விலக்கு (பழநி) திருமேனியையும் (1), ஆறு திருமுகங்களையும் (2) மிகுந்த வலிமை பொருந்திய தோள்களையும் (3) கூரிய நுனியை உடைய வெற்றி வேலினையும் (4) பாம்பினைக் கால்களில் பிடித்துள்ள கலாப மயிலையும் (5) ஏழுலகங்களும் அதிரும்படியாக கொக்கரிக்கும் கோழியையும் (6) உன்னடியார்கள் வாழ்த்தி வணங்கி வாழ்வு பெறும் புதிய தாமரை மலர் போன்ற திருவடிகளையும் (7) ஒருபோதும் மறக்கமாட்டேன்.

குரம்பை மலசலம் (பழநி) நீ அழகோடு மயிலின் மீது ஏறி வந்து, செழிப்புடன் பூரித்த சிவ ஒளியை என்னுடைய மனதில் அழுந்தும்படி நன்றாக ஓதி உபதேசிக்கும் பொருட்டு வந்த திருமுகச் சிரிப்பு பூத்த ஒளியையும், குளிர்ந்த கண்களையும், உனது மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் நான் மறவேன்

கொந்துவார் குரவடி (திருத்தணிகை) கூட்டமாக இரைச்சலுடன் வருகின்ற, அநேக யுக்திகளைக்கொண்டு கொண்டு விரோதிக்கின்ற, சமயவாதிகளால் பெறுவதற்கு அரிதானதும், அன்னியர்களால் சந்திக்க முடியாததும், தனதென வருமொரு சம்ப்ர தாயமும் ... தனக்கே உரிய ஓர் ஒப்பற்ற பரம்பரையாக வருவதும், இதுவே என்று எனக்கு உபதேசித்து, வாசனை பொருந்திய கடம்பமாலை அணிந்ததும், வண்டினம் ஒலிப்பதும், பொன்னால் ஆன சிறுசலங்கைகளைத் தரித்ததுமான, சுகம் தரும் இரு திருவடித் தாமரைகளைத் தந்த பெரிய கிருபையை கனவிலும் நனவிலும் மறவேன்.

குமர குருபர குணதர (திருவருணை) அறிவிலியாகிய என்னை, அன்புடன் ஆண்டருள, கருணைக்குப் பாத்திரமான அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலையில் ஒரு முறை வேதங்கள் பக்கங்களில் முழங்க நடந்து வந்த, இரண்டு சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடிகளை, கனவிலும், விழித்துக் கொண்டிருக்கும் போதும் மறவேனே.

மகர மெறிகடல் (திருவருணை) முதன் முதலில், திருவண்ணாமலைப் பதியில் நீ கருணையோடு அளித்து அருளிய மேலான ஒப்பற்ற உபதேச மொழியையும், உனது இரண்டு திருவடிகளையும் மறக்க மாட்டேன்.

முருகு செறிகுழல் சொரு (திருவருணை) எனக்கு திருவண்ணாமலையில்* கருணையுடன் நீ அருள் செய்த மெளன உபதேசத்தையும் நின் இரண்டு பெருமை மிக்க திருவடிகளையும் நான் மறக்க மாட்டேன்.

காம அத்திரமாகி (விராலிமலை) நீ எதிரில் தோன்றி முன்பு அடிமையாகிய என்னைக் கரை ஏற்றிய காரணத்தால் உன் அருளின் திறத்தை நான் மறக்க மாட்டேன்.

பத்தர் கணப்ரிய (திருச்செங்கோடு) கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நாலாதிசைகளிலும் உள்ள அன்பர்கள் இது அற்புதம் என வியந்து கொண்டாடும் அழகிய கவிபாடும் திறத்தின் ஒலி மிகுந்துள்ள திருப்புகழை ஓரளவுக்காவது நானும் சொல்லும்படியாக வைத்தும், அப்பாடல்கள் உலகெங்கும் பரவும்படியாகச் செய்தும், திருப்புகழில் உன்னைத் தரிசனம் செய்வித்த அருளை அடியேன் ஒரு நாளும் மறக்க மாட்டேன்.

சதுரத்தரை நோக்கிய (திருவேட்களம்) நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்) கமலம் தொடங்கி, முச்சுடர்களால் (அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்) குளிர்ந்து தழைய, சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி, என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மமகார மலங்கள் ஒழியுமாறு கெடுத்து (உனது) பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற தோள்களையும், ஆறு முகங்களையும், ஒளி சுற்றிலும் பரவி(ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும், மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனை இனிய பார்வையுடன் பார்த்து, உன் அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும், (நான்) மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும் மறவேன்.

கொங்கு லாவிய (சீகாழி) இரண்டு கழலடிகளைப் பார்த்து எனது வாழ் நாள் வீணாகப் பெருகுதல் இல்லாமல் (உனது) கண்ணோக்க அருளை (நீ) தந்த பெரும் கிருபையை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன்

தலை நாளில் பதம் (வழுவூர்) வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து, சிவ மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை உனது திருவருளால் உன்னைச் சார்ந்த உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் புகட்டி, முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும்மண்டலங்களையும் உள்ள மேலிடத்தில், இடைகலை பிங்கலை என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ள பர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து, முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம் கொள்ள, சுவாதிஷ்டான ஆதாரத்தைக் கடந்து, மூலாதாரத் தலமான திருவாரூர் முதலில் சேர, அது முதலாக உள்ள தலங்கள் பிறவற்றைப் புலப்பட யோக ஒளியை ஏற்றி வைத்து, அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில் வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன்.

தாமரையின் மட்டு (வயலூர்) விராலிப் பெருமலையில் யாம் நிற்போம் நீ அதை மனத்தில் நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று அழைப்பு விடுத்து, என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து, ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த அன்பை இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன்.

திரு உரூப நேராக (வயலூர்) பிறப்பில் மீண்டும் விழாத வண்ணம், உனது திருப்புகழை நான் ஓதி, உனக்கு அடிமை பூணும் வகை வரும்படி, எனது கனவில் வந்து ஆண்டருளிய சுவாமியே, மயில் மேல் வீற்றிருக்கும் உனது வாழ்வையும், கருணைக் கடல் போல மிக்க ஒளிவீசும் உனது திருமுகத்தையும், வீரம் என்றும் மாறுதல் இல்லாத திருவடியையும், கடம்பையும், வேல் ஏந்திய திருப்புயத்தையும் நான் என்றும் மறவேன்.

குருவும் அடியவர் (நெருவூர்) வயலூர்ப் பதியில் அடியேன் உனது திருவடியைப் பெற நீ மயில் மீது வந்து அளித்த நறுமணம் உள்ள, பலவிதமான வண்டுகள் மொய்க்கும், தாமரை மலர் போன்ற திருவடியை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன்.

பக்குவ ஆசார (திருப்புக்கொளியூர்) பக்குவமான ஆசார ஒழுக்க நிலையிலே நின்று,ப்சிறப்பான பச்சிலை, மூலிகைகள் போன்ற உணவையே உண்டு, மெளனத் தவநிலையில் நிற்கும் சிவயோகிகள் தங்களது பக்தி மூலமாக முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய் உள்ள மோக்ஷவீட்டைப் பற்றுவதானதும், எந்தவிதமான பற்றும் இல்லாத நிலையை நான் அடைவதற்காகவும், அந்நிலையை நான் அடைந்ததுமே, மாயமாக வந்து என்னைப் பற்றியுள்ள துர்க்குணங்கள் யாவும் என்னை விட்டுப் பிரியவும், அந்த ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாக மாறி, பாசம் யாவும் அற்றுப்போகும்படி உபதேச மந்திரத்தை வாய்விட்டுக் கூறிய சற்குருநாதனே, உனது அற்புதமான அழகிய திருவடிகளை நான் என்றும் மறவேன்.

ஆனாத ஞான (பொதுப்பாடல்கள்) என்றும் கெடாத ஞான அறிவைக் கொடுத்ததையும், ஆராய்ந்து அறிய வேண்டிய நூல்களில் கருத்தைக் கொடுத்ததையும், ஒரு வழியாக நிலைத்திராத மயக்கம் உள்ள வாழ்க்கையில் மயங்கித் திளைத்து, தளர்ச்சி உற்று உயிர் அழிந்து போகாமல், ஆசை என்கின்ற கடலைக் கடக்கும்படியான ஆற்றலைத் தந்ததையும், வாக்குக்கு எட்டாத ஒரு நிலையில் என்னை இருக்கும்படி அருளியதும், ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகேழும் யான் கீழ்ப்பட்டவனான நான் மிக்க புகழ் எய்தி இனிமையுடன் ஏழு உலகில் உள்ளவரும் உள்ளவையும் நானே என்னும் அத்துவித நிலையைப் பெறுமாறு புகழ் கொண்டதும், மிக அற்புதமாக அமைந்துள்ள திருப்புகழ்ப் பாக்களை தேன் ஊறிய இனிமையுடன் பாடி, எல்லா திசைகளிலும் நான் எழுதி அனுப்பும் கடிதமோ பாடலோ ராஜமரியாதையுடன் போற்றப்படத்தக்க மேன்மையை எனக்கு அருளிச் செய்ததும், துன்பக் கடலினின்றும் கரை ஏற முடியாத பெரிய மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும், பலவிதமான கலக்கங்கள் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், டும்பு, அசூயை எனப்பட்ட துர்க் குணங்கள்) கூடியதும், நீர்க்குமிழிபோல் தோன்றி மறைவதுமான பிறப்பும் நீங்கும்படியாக இன்பம் தரும் வகையில் எனக்கு வரமாகத் தந்து அருளியதும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்

மின்னினில் நடுக்கம் (பொதுப்பாடல்கள்) ஆறு முகங்களையும் நினைக்குமாறு செய்த புண்ணியப் பயனை எந்தக் காரணத்தையும் கொண்டு மறக்க முடியுமா

வட்ட முலைக்கச்சு (பொதுப்பாடல்கள்) உனது திருக்கையில் பொருந்த வைத்துப் பிடித்துள்ள வாளையும், வெட்சி மலர் சூழ்ந்த அழகிய திருவடியாகிய காப்பையும் உடை மணி முதலிய கட்டியுள்ள அழகிய சாமர்த்தியத்தையும் மறக்கவே மாட்டேன்.

வரிபரந் திரண்டு (பொதுப்பாடல்கள்) என் புத்தி கெட்டுப் போனாலும், தங்க மயமான உன்னுடைய திருவடிகளை நான் மறக்க மாட்டேன்.

வரிவிழி பூசலாட (பொதுப்பாடல்கள்) உலக மாயையில் நான் அகப்பட்டிருக்கும் போதும், பெருமை பொருந்திய உனது பன்னிரண்டு கைகளும், ஆறு திரு முகங்களும், கடப்ப மாலை அணிந்துள்ள மார்பும், இரண்டு திருவடிகளும் நான் மறக்க மாட்டேன்

மலரணை ததும்ப (பழமுதிர்ச்சோலை) மாலைகள் அசையும் திருமுடி முதலான உனது வடிவத்தையும் அழகிய திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தையும் மறக்க மாட்டேன்.

Back to top