Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   ITRANS   Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திரு அருணகிரிநாதரின் - மயில் விருத்தம்

காப்பு - சந்தன பாளித

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்
சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்
கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப்பரவுங்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்
கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்
தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச்
சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.

சித்ரக் கலாபமயிலே ரத்ன கலாபமயிலே 1. சந்தான புஷ்பபரி

சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்
சரணயுகள அமிர்தப்ரபா
சந்த்ர சேகர மூஷிகாரூட வெகுமோக
சத்யப்ரிய ஆலிங்கனச்
சிந்தா மணிக் கலச கரகட கபோல
த்ரியம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாப மயிலாம்
மந்தாகிநிப் பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வர அசலன் குலிசாயுதத்து
இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏறு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே.

2. சக்ரப் ரசண்டகிரி

சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டுக் கிரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகர அச்சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும்
எண் திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரும்
சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கும் மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்
பாகீரதிச் சடில யோகீ சுரர்க்குரிய
பரம உபதேசம் அறிவிக்கைக்குச்
செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
கந்தச்சுவாமி தணிகைக்
கல்லார கிரியுருக வருகிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே.

3. ஆதார பாதளம்

ஆதார பாதளம் பெயரஅடி பெயர
மூதண்ட முகடது பெயரவே
ஆடரவ முடி பெயர எண்டிசைகள் பெயரஎறி
கவுட்கிரி சரம்பெயரவே
வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார்
மிக்க ப்ரியப் படவிடா
விழிபவுரி கவுரி கண்டுள மகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்
மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலி
மாமறை முநிகுமாரி சாரங்கன் தனிவந்த
வள்ளிமணி நூபுர மலர்ப்
பாதார விந்த சேகரனேய மலரும்
உற்பலகிரி அமர்ந்த பெருமாள்
படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.

4. யுககோடி முடிவின்

யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்ததென் அயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற் குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
விசும்பிற் பறக்க விரிநீர்
வேலை சுவறச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்
நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்த நர
கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்
முருகன் உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
மூரிக் கலாப மயிலே.

5. சோதியிம வேதண்ட

சோதியி மவேதண்ட கன்னிகையர் தந்த அபி
நயதுல்ய சோம வதன
துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதிநெடு மூதண்ட அண்ட பகிர் அண்டங்கள்
யாவுங் கொடுஞ் சிறகினால்
அணை உந்தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங் கலாப மயிலாம்
நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியா குலன் சங்குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
வரமுதவு வாகை மயிலே.

6. சங்கார காலமென

சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமும் நடுங்கச்
சந்த்ர சூரியர் ஒளித்தி இந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனி நாடகஞ் செய்த போதந்த
காரம் பிறந்திட நெடுங்
ககனகூடமும் மேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்
சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோதர கிரித்
தெய்வ வாரண வநிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீரதன் இருங்
கெங்காதரன் கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்தி மாஅசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே.

7. தீரப் பயோததி

தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்
செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
தீக் கொப்புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அநந்தன் முதல் அரவெலாம்
பதை பதைத்தே நடுங்கப்
படர் சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சை ப்ரவாள மயிலாம்
ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
அமிர்த கலசக் கொங்கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி
பரமாநந்த வல்லி சிறுவன்
கோரத்ரி சூல த்ரியம்பக ஜடாதார
குருதரு திருத்தணிகை வேள்
கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே.

8. செக்கரள கேசசிக

செக்கரள கேச சிகரத்நபுரி ராசிநிரை
சிந்தப் புராரி யமிர்தந்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங் கொப்புளிப்பச்
சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயனத்
தறுகண் வாசுகிபணா முடியெடுத்து தறுமொரு
சண்டப்பர சண்டமயிலாம்
விக்ரம கிராதகுலி புன மீதுலாவிய
விருத்தன் திருத்தணிகைவாழ்
வேலாயுதன் பழ வினைத் துயர் அறுத்தெனை
வெளிப்பட வுணர்த்தி யருளித்
துக்க சுக பேதமற வாழ்வித்த கந்தச்
சுவாமி வாகனமானதோர்
துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

9. சிகரதம னியமேரு

சிகரதமனிய மேரு கிரிரசத கிரிநீல
கிரியெனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
திங்கள் சங்கெனவும் ப்ரபா
நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்ற மாமுகில் என்னவே
நெடியமுது ககனமுகடுற வீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்
அகரு மரு மணம்வீசு தணிகை அபிராமவேள்
அடியவர்கள் மிடிய கலவே
அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற் குழாம் அசையவே
மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
வல்லவுணர் மனம்அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசைய
வையாளி யேறு மயிலே.

10. நிராசத விராசத

நிராசத விராசத வரோதய பராபர
னிராகுல னிராமய பிரா
னிலா எழுதலாலற மிலா னெறியிலானெறி
நிலாவிய உலாச இதயன்
குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசரம் எலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்
புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரி
புகலாகும் அயிலாயுதன் னெடுந்
தராதல கிராதர்கள் குலாதவ பிராமவல
சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே.

11. எந்நாளும் ஒருசுனையில்


எந்நாளும் ஒருசுனையில் இந்த்ர நீ லப்போ
திலங்கிய திருத் தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
நம்பிரானான மயிலைப்
பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல் தருமாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறைநூல்
மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தை யுடன்வாழ்
அந்நாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்
அமுதாசனம் பெறுவர்
மேல் ஆயிரம் பிறை தொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம் பெறுவரே.


Back to Top

This page was last modified on Mon, 10 Jan 2022 14:45:03 -0600
          send corrections and suggestions to admin @ sivasiva.org