சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.023   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மடையில் வாளை பாய, மாதரார் குடையும்
பண் - தக்கராகம்   (திருக்கோலக்கா சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=C9dg_z7o0uY
Audio: https://sivaya.org/audio/1.023 Madaiyil Vaalai.mp3
1.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
பண் - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=AX75gzPTGms
1.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மரு ஆர் குழலிமாது ஓர்
பண் - தக்கராகம்   (திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4owEV1ZD9TU
1.026   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெங் கள் விம்மு வெறி
பண் - தக்கராகம்   (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=RbUaUwyjqEk
1.027   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முந்தி நின்ற வினைகள் அவை
பண் - தக்கராகம்   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=wmv7e7-9cxY
1.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
பண் - தக்கராகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ZZu2txUJeng
1.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஊர் உலாவு பலி கொண்டு,
பண் - தக்கராகம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3yI2qwKTMms
1.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விதி ஆய், விளைவு ஆய்,
பண் - தக்கராகம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=rm_NWR-QZ3o
1.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விழுநீர், மழுவாள் படை, அண்ணல்
பண் - தக்கராகம்   (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LagWZEYok0U
1.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓடே கலன்; உண்பதும் ஊர்
பண் - தக்கராகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ywVeiOlRRiY
1.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கணை நீடு எரி, மால்,
பண் - தக்கராகம்   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=H3fxoFq9P1A
1.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அடல் ஏறு அமரும் கொடி
பண் - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=q8nvJ_Q7uC0
1.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரை ஆர் விரி கோவண
பண் - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.036   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கலை ஆர் மதியோடு உர
பண் - தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=P9yjQbTeGAI
1.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரவச் சடை மேல் மதி,
பண் - தக்கராகம்   (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=1ag87KOK2-I
1.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும்
பண் - தக்கராகம்   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=NRSDFiUVZNg
1.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்
பண் - தக்கராகம்   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=h8QZrRo4xp4
1.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி உடை மார்பினர், போர்
பண் - தக்கராகம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=OONhDo6cM7I
1.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீர் அணி திகழ் திருமார்பில்
பண் - தக்கராகம்   (திருப்பாம்புரம் பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி)
Audio: https://www.youtube.com/watch?v=Eogq2gNyTwQ
1.042   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பைம் மா நாகம், பல்மலர்க்
பண் - தக்கராகம்   (திருப்பேணுபெருந்துறை சிவாநந்தநாதர் மலையரசியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=yohjDAagwPM
1.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வடம் திகழ் மென் முலையாளைப்
பண் - தக்கராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=P_kgIT0mzcI
1.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துணி வளர் திங்கள் துளங்கி
பண் - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ieof1SKHvNQ
1.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்
பண் - தக்கராகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AweGz-Ek-Iw
1.046   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குண்டைக் குறள் பூதம் குழும,
பண் - தக்கராகம்   (திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=WiDBNDKsRBw
1.047   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பல் அடைந்த வெண் தலையில்
பண் - பழந்தக்கராகம்   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=jc-3lGGQv64
1.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நூல் அடைந்த கொள்கையாலே நுன்
பண் - பழந்தக்கராகம்   (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை)
1.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   போகம் ஆர்த்த பூண் முலையாள்
பண் - பழந்தக்கராகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ba-MJnMHA28
1.050   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி,
பண் - பழந்தக்கராகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qucQe6XZPzE
1.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெங் கண் ஆனை ஈர்
பண் - பழந்தக்கராகம்   (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=H2I_u74H02A
1.052   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மறை உடையாய்! தோல் உடையாய்!
பண் - பழந்தக்கராகம்   (திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=u5teN1hhIxI
1.053   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
பண் - பழந்தக்கராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=19dU8fmN7AA
1.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூத் தேர்ந்து ஆயன கொண்டு,
பண் - பழந்தக்கராகம்   (திருஓத்தூர் (செய்யாறு) வேதநாதர் இளமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=eDjeCtZ_l10
Audio: https://sivaya.org/audio/1.054 Poothernthaayina .mp3
1.055   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,
பண் - பழந்தக்கராகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2BP39HT21GU
1.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கார் ஆர் கொன்றை கலந்த
பண் - பழந்தக்கராகம்   (திருப்பாற்றுறை திருமூலநாதர் மோகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=0Q2QLIBw8lk
1.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;
பண் - பழந்தக்கராகம்   (திருவேற்காடு வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=MfFlB0vxtJ4
1.058   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரியும், நம் வினை உள்ளன
பண் - பழந்தக்கராகம்   (திருக்கரவீரம் கரவீரேசுவரர் பிரத்தியட்சமின்னாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=wuzO5Hh_CQU
1.059   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,
பண் - பழந்தக்கராகம்   (திருத்தூங்கானைமாடம் சுடர்க்கொழுந்தீசர் கடந்தைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=EusYq6RgstU
1.060   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண் தரங்கப் புனல் கமல
பண் - பழந்தக்கராகம்   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2yPMSDXb4nE
1.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நறை கொண்ட மலர் தூவி,
பண் - பழந்தக்கராகம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=C_MQ8sSlZyk
1.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நாள் ஆய போகாமே, நஞ்சு
பண் - பழந்தக்கராகம்   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=apnzZFYxrWY
4.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல் மாலை பயில்கின்ற குயில்
பண் - பழந்தக்கராகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=TOqsM3Xa3Fs
4.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
பண் - பழந்தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LtFr6FRYsgI
5.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=X012Z-pSPW4
7.013   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மலை ஆர் அருவித்திரள் மா
பண் - தக்கராகம்   (திருத்துறையூர் (திருத்தளூர்) துறையூரப்பர் பூங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DmK48qjw5j8
7.014   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வைத்தனன் தனக்கே, தலையும் என்
பண் - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XOG7u08TkQY
7.015   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பூண் நாண் ஆவது ஓர்
பண் - தக்கராகம்   (திருநாட்டியத்தான்குடி கரிநாதேசுவரர் மலர்மங்கையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=NdPYONZNHaI
7.016   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   குரும்பை முலை மலர்க் குழலி
பண் - தக்கராகம்   (கலயநல்லூர் (சாக்கோட்டை) அமிர்தகலைநாதர் அமிர்தவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=MQ0RTepwG6U
Audio: https://www.youtube.com/watch?v=utO6fHth1FM

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.023   மடையில் வாளை பாய, மாதரார் குடையும்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருக்கோலக்கா ; (திருத்தலம் அருள்தரு ஓசைகொடுத்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்தபுரீசர் திருவடிகள் போற்றி )
உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவ ராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று மடையில் வாளை எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.
நல்ல தாளம், இசை கை வர
மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

[1]
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே,
உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.

[2]
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறை வல்லானையே
பேண, பறையும், பிணிகள் ஆனவே.

[3]
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,
குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!

[4]
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயில் ஆர் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்க, பறையும், பாவமே.

[5]
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!

[6]
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,
குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

[7]
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை
முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

[8]
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,
கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா
ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!

[9]
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர் தோய் உரு இலாளரும்,
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ, பறையும், பாவமே.

[10]
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.024   பூஆர் கொன்றைப் புரிபுன் சடை  
பண் - தக்கராகம்   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீகாழி திரும்பிய ஞானசம்பந்தர் நேரே ஆலயம் சென்று பூவார் கொன்றை எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் போற்றித் தம் மாளிகையை அடைந்தார்.
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!
காவாய்! என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.

[1]
எந்தை! என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,
கந்தமாலை கொடு சேர் காழியார்,
வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

[2]
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,
கானமான் கைக் கொண்ட காழியார்,
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.

[3]
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்,
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

[4]
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.

[5]
கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக்
கங்கை புனைந்த சடையார், காழியார்,
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.

[6]
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார்,
அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே.

[7]
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,
கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.

[8]
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்,
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.

[9]
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார், காழியார்,
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.

[10]
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.025   மரு ஆர் குழலிமாது ஓர்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருச்செம்பொன்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு சுகந்தவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு சொர்னபுரீசர் திருவடிகள் போற்றி )
மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும், பாவமே.

[1]
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய்,
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச்
சேராதவர் மேல் சேரும், வினைகளே.

[2]
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித்
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.

[3]
மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய்,
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.

[4]
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல்,
நிலையா வணங்க, நில்லா, வினைகளே.

[5]
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச்
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
நிறையால் வணங்க, நில்லா, வினைகளே.

[6]
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை
மெய்யால் வணங்க, மேவா, வினைகளே.

[7]
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து,
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே!

[8]
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,
தேரார் செம்பொன் பள்ளி மேவிய,
நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை
ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.

[9]
மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,
பேசா வண்ணம் பேசித் திரியவே,
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா! என்ன, நில்லா, இடர்களே.

[10]
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.026   வெங் கள் விம்மு வெறி  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்புத்தூர் ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு புத்தூரீசர் திருவடிகள் போற்றி )
வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்,
கங்கை தங்கும் முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

[1]
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத்
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்,
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்
ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே.

[2]
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட,
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்,
ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும்
தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.

[3]
நாற விண்ட நறுமாமலர் கவ்வி,
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்,
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

[4]
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத்
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்,
பசை விளங்கப் படித்தார் அவர் போலும்
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.

[5]
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி,
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்,
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.

[6]
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும்
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர்,
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.

[7]
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத்
திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.

[8]
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

[9]
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல்
தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர்,
ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

[10]
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும்; அவலம் அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.027   முந்தி நின்ற வினைகள் அவை  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்புன்கூர் ; (திருத்தலம் அருள்தரு சொக்கநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகநாதர் திருவடிகள் போற்றி )
முந்தி நின்ற வினைகள் அவை போகச்
சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்;
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே.

[1]
மூவர் ஆய முதல்வர், முறையாலே
தேவர் எல்லாம் வணங்கும் திருப் புன்கூர்
ஆவர், என்னும் அடிகள் அவர் போலும்
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே.

[2]
பங்கயங்கள் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும் திருப் புன்கூர்,
கங்கை தங்கு சடையார் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

[3]
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம்
திரை உலாவு வயல் சூழ் திருப் புன்கூர்,
உரையின் நல்ல பெருமான் அவர் போலும்
விரையின் நல்ல மலர்ச் சேவடியாரே.

[4]
பவழ வண்ணப் பரிசு ஆர் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப் புன்கூர்
அழகர் என்னும் அடிகள் அவர் போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே.

[5]
தெரிந்து இலங்கு கழுநீர் வயல், செந்நெல்
திருந்த நின்ற வயல், சூழ் திருப் புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்
விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே.

[6]
பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப் புன்கூர்,
ஆர நின்ற அடிகள் அவர் போலும்
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே.

[7]
மலை அதனார் உடைய மதில் மூன்றும்
சிலை அதனால் எரித்தார் திருப் புன்கூர்த்
தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை
மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே.

[8]
நாட வல்ல மலரான், மாலும் ஆய்த்
தேட நின்றார், உறையும் திருப் புன்கூர்
ஆட வல்ல அடிகள் அவர் போலும்
பாடல் ஆடல் பயிலும் பரமரே.

[9]
குண்டு முற்றிக் கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல்!
வண்டு பாட மலர் ஆர் திருப் புன்கூர்க்
கண்டு தொழுமின், கபாலிவேடமே!

[10]
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்,
சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பரவி வாழ்மினே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.028   செப்பம் நெஞ்சே, நெறி கொள்!  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்
துப்பன் என்னாது, அருளே துணை ஆக,
ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று
அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[1]
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்,
மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[2]
செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர்,
கை கொள் வேலர், கழலர், கரிகாடர்,
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[3]
பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு உளீர்!
துணி கொள் போரார், துளங்கும் மழுவாளர்,
மணி கொள் கண்டர், மேய வார் பொழில்
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[4]
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,
மறையும் ஓதி, மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[5]
துடிகளோடு முழவம் விம்மவே,
பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக,
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[6]
சாடிக் காலன் மாள, தலைமாலை
சூடி, மிக்குச் சுவண்டு ஆய் வருவார், தாம்
பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து
ஆடி, சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[7]
பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக்
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்,
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[8]
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன்,
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[9]
கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர்,
ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே!
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[10]
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்!
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.029   ஊர் உலாவு பலி கொண்டு,  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு சித்தநாதேசர் திருவடிகள் போற்றி )
ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,
சீர் உலாவும் மறையோர் நறையூரில்,
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

[1]
காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி,
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ,
வீடும் ஆக மறையோர் நறையூரில்,
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!

[2]
கல்வியாளர், கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்,
மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில்
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

[3]
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,
பாடல் வண்டு பயிலும், நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[4]
உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்,
நண்பு உலாவும் மறையோர், நறையூரில்
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[5]
கூர் உலாவு படையான், விடை ஏறி,
போர் உலாவு மழுவான், அனல் ஆடி,
பேர் உலாவு பெருமான், நறையூரில்
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே.

[6]
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர்,
மன்றில் வாச மணம் ஆர், நறையூரில்
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[7]
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்
திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[8]
ஆழியானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்து, மேல்
சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர்
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!

[9]
மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார்,
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!
உய்ய வேண்டில், இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.

[10]
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட, பறையும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.030   விதி ஆய், விளைவு ஆய்,  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

[1]
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

[2]
வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்,
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப்
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.

[3]
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.

[4]
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க,
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து,
நாதான் உறையும் இடம் ஆவது நாளும்
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.

[5]
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்,
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்,
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன்
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

[6]
கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ;
செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக;
அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை;
பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே.

[7]
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி,
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே.

[8]
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து
ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்
பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.

[9]
உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.

[10]
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.031   விழுநீர், மழுவாள் படை, அண்ணல்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருக்குரங்குஅணில்முட்டம் ; (திருத்தலம் அருள்தரு இறையார்வளையம்மை உடனுறை அருள்மிகு வாலீசுவரர் திருவடிகள் போற்றி )
விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.

[1]
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக்
கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம்
உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.

[2]
சூலப்படையான், விடையான், சுடு நீற்றான்,
காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்-
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து
ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.

[3]
வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்-
தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி,
கூடாதன செய்த குரங்கணில் முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.

[4]
இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி,
கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்;
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து
உறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.

[5]
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம்
கலவம்மயில் காமுறு பேடையொடு ஆடிக்
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.

[6]
மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து,
தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க,
கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து,
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.

[7]
மை ஆர் நிற மேனி அரக்கர் தம் கோனை
உய்யா வகையால் அடர்த்து, இன் அருள் செய்த
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.

[8]
வெறி ஆர் மலர்த் தாமரையானொடு மாலும்
அறியாது அசைந்து ஏத்த, ஓர் ஆர் அழல் ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம்
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.

[9]
கழுவார், துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும்,
வழுவாச் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்!
குழு மின்சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து
எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே.

[10]
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக
வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.032   ஓடே கலன்; உண்பதும் ஊர்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;
காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,
ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.

[1]
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.

[2]
வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி,
அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து,
பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்,
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.

[3]
அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்,
வெதபொடிப் பூசிய வேத முதல்வன்-
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.

[4]
வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய்,
பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ.

[5]
வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக
என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி,
அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய்
இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.

[6]
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி,
போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.

[7]
பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த,
ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ.

[8]
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.

[9]
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற,
நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த,
வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்
எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ.

[10]
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.033   கணை நீடு எரி, மால்,  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருஅன்பில் ஆலந்துறை ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்திவாகீசர் திருவடிகள் போற்றி )
கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா,
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம்,
அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.

[1]
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி,
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்-
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.

[2]
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து,
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்
நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

[3]
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

[4]
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடு முழவம் அதிர, மட மாதர்
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.

[5]
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-
வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.

[6]
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட
படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை,
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும்
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.

[7]
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி,
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி,
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.

[8]
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும்,
பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை;
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.

[9]
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.

[10]
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.034   அடல் ஏறு அமரும் கொடி  
பண் - தக்கராகம்   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்,
கடல் ஆர் புடை சூழ் தரு, காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே.

[1]
திரை ஆர் புனல் சூடிய செல்வன்,
வரையார் மகளோடு மகிழ்ந்தான்,
கரை ஆர் புனல் சூழ்தரு, காழி
நிரை ஆர் மலர் தூவுமின், நின்றே!

[2]
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை
துடி ஆர் இடையாளொடு துன்னும்,
கடி ஆர் பொழில் சூழ்தரு, காழி
அடியார் அறியார், அவலமே.

[3]
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன்,
அளி ஆர் குழல் மங்கையொடு அன்பு ஆய்,
களி ஆர் பொழில் சூழ்தரு, காழி
எளிது ஆம், அது கண்டவர் இன்பே.

[4]
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்,
முனி தான், உமையோடு முயங்கி,
கனி ஆர் பொழில் சூழ்தரு, காழி
இனிது ஆம், அது கண்டவர் ஈடே.

[5]
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து
மலையான் மகளோடு மகிழ்ந்தான்,
கலையார் தொழுது ஏத்திய, காழி
தலையால் தொழுவார் தலையாரே.

[6]
திரு ஆர் சிலையால் எயில் எய்து,
உரு ஆர் உமையோடு உடன் ஆனான்,
கரு ஆர் பொழில் சூழ்தரு, காழி
மருவாதவர் வான் மருவாரே.

[7]
அரக்கன் வலி ஒல்க அடர்த்து,
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்,
சுரக்கும் புனல் சூழ்தரு, காழி
நிரக்கும் மலர் தூவும், நினைந்தே!

[8]
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்
உருவில் பெரியாளொடு சேரும்,
கரு நல் பரவை கமழ், காழி
மருவ, பிரியும், வினை மாய்ந்தே.

[9]
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற,
அமைந்தான், உமையோடு உடன் அன்பு ஆய்;
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி
சுமந்தார், மலர் தூவுதல் தொண்டே.

[10]
நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.035   அரை ஆர் விரி கோவண  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.

[1]
புனைதல் புரி புன்சடை தன் மேல்
கனைதல் ஒரு கங்கை கரந்தான்,
வினை இல்லவர், வீழி மிழலை
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே?

[2]
அழ வல்லவர், ஆடியும் பாடி
எழ வல்லவர், எந்தை அடிமேல்
விழ வல்லவர், வீழி மிழலை
தொழ வல்லவர், நல்லவர்; தொண்டே!

[3]
உரவம் புரி புன் சடை தன்மேல்
அரவம் அரை ஆர்த்த அழகன்,
விரவும் பொழில், வீழி மிழலை
பரவும்(ம்) அடியார் அடியாரே!

[4]
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன்,
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை
விரி தார் பொழில், வீழி மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.

[5]
சடை ஆர் பிறையான், சரி பூதப்
படையான், கொடி மேலது ஒரு பைங்கண்
விடையான், உறை வீழி மிழலை
அடைவார் அடியார் அவர் தாமே.

[6]
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறி ஆர் குழலாளொடு நின்றான்,
வெறி ஆர் பொழில், வீழி மிழலை
அறிவார் அவலம் அறியாரே.

[7]
உளையா வலி ஒல்க, அரக்கன்,
வளையா விரல் ஊன்றிய மைந்தன்,
விளை ஆர் வயல், வீழி மிழலை
அளையா வருவார் அடியாரே.

[8]
மருள் செய்து இருவர் மயல் ஆக
அருள் செய்தவன், ஆர் அழல் ஆகி
வெருள் செய்தவன், வீழி மிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே.

[9]
துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை!
விளங்கும் பொழில் வீழி மிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.

[10]
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர் சடையான் அடி கூற,
மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.036   கலை ஆர் மதியோடு உர  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.

[1]
மதி ஒன்றிய கொன்றை வடத்தன்,
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடி மாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே.

[2]
கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு இடம் ஆகும்
திக்கின் இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையாரது ஐயாறே.

[3]
சிறை கொண்ட புரம் அவை சிந்தக்
கறை கொண்டவர் காதல் செய் கோயில்
மறை கொண்ட நல் வானவர் தம்மில்
அறையும் ஒலி சேரும் ஐயாறே.

[4]
உமையாள் ஒரு பாகம் அது ஆகச்
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்
அமையார் உடல் சோர்தரு முத்தம்
அமையா வரும் அம் தண் ஐயாறே.

[5]
தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

[6]
வரம் ஒன்றிய மா மலரோன் தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்
வரை நின்று இழி வார் தரு பொன்னி
அரவம் கொடு சேரும் ஐயாறே.

[7]
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே.

[8]
சங்கக் கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.

[9]
துவர் ஆடையர், தோல் உடையார்கள்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதே,
தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே.

[10]
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்-
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்-
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச்
சொலும் மாலை வல்லார் துயர் வீடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.037   அரவச் சடை மேல் மதி,  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்பனையூர் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சவுந்தரேசர் திருவடிகள் போற்றி )
அரவச் சடை மேல் மதி, மத்தம்,
விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

[1]
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம்
கள் நின்று எழு சோலையில் வண்டு
பண் நின்று ஒலி செய் பனையூரே.

[2]
அலரும் எறி செஞ்சடை தன் மேல்
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர்
சிலர் என்றும் இருந்து அடி பேண,
பலரும் பரவும் பனையூரே.

[3]
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு
பொடி ஆடிய மேனியினான் ஊர்
அடியார் தொழ, மன்னவர் ஏத்த,
படியார் பணியும் பனையூரே.

[4]
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட,
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம்
பொறையார் மிகு சீர் விழ மல்க,
பறையார் ஒலிசெய் பனையூரே.

[5]
அணியார் தொழ வல்லவர் ஏத்த,
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர்
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும்
பணிவார் பயிலும் பனையூரே.

[6]
அடையாதவர் மூ எயில் சீறும்
விடையான், விறல் ஆர் கரியின் தோல்
உடையான் அவன், ஒண் பலபூதப்
படையான் அவன், ஊர் பனையூரே.

[7]
இலகும் முடிபத்து உடையானை
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல்,
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும்
பல கண்டவன், ஊர் பனையூரே.

[8]
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்!
சிரம் முன் அடி தாழ வணங்கும்
பிரமனொடு மால் அறியாத
பரமன் உறையும் பனையூரே!

[9]
அழி வல் அமணரொடு தேரர்
மொழி வல்லன சொல்லிய போதும்,
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்
பழி இல்லவர் சேர் பனையூரே.

[10]
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊர் ஊர் நினைவார் உயர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.038   கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருமயிலாடுதுறை ; (திருத்தலம் அருள்தரு அஞ்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாயூரநாதர் திருவடிகள் போற்றி )
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வர மா மயிலாடுதுறையே.

[1]
உர வெங்கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதி என்பர்
குரவம், சுரபுன்னையும், வன்னி,
மருவும் மயிலாடுதுறையே.

[2]
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்,
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு
ஆன மயிலாடுதுறையே!

[3]
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்
துஞ்சும், பிணி ஆயினதானே.

[4]
தணி ஆர் மதி செஞ்சடையான்தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும்
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்
மணியான், மயிலாடுதுறையே.

[5]
தொண்டர் இசை பாடியும் கூடிக்
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்
பண்டும் பல வேதியர் ஓத,
வண்டு ஆர் மயிலாடுதுறையே.

[6]
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்
நுணங்கும் புரிநூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே.

[7]
சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரம் கொள் பரமேட்டி, வரையால்
அரங்க அரக்கன் வலி செற்ற,
வரம் கொள் மயிலாடுதுறையே.

[8]
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்,
கோலத்து அயனும், அறியாத
சீலத்தவன் ஊர் சிலர் கூடி
மாலைத் தீர் மயிலாடுதுறையே.

[9]
நின்று உண் சமணும், நெடுந் தேரர்,
ஒன்று அறியாமை உயர்ந்த
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்
மன்றல் மயிலாடுதுறையே.

[10]
நயர் காழியுள் ஞானசம்பந்தன்
மயர் தீர் மயிலாடுதுறைமேல்
செயலால் உரை செய்தன பத்தும்
உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.039   அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவேட்களம் ; (திருத்தலம் அருள்தரு நல்லநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசுபதேசுவரர் திருவடிகள் போற்றி )
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;
மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;
சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.

[1]
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்க வெண்தோடு சரிந்து இலங்க,
புடைதனில் பாரிடம் சூழ, போதரும் ஆறு இவர் போல்வார்
உடைதனில் நால்விரல் கோவண ஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளை
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே.

[2]
பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த,
சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.

[3]
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்
   கோவணத்தோடு அசைத்து,
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம்
   கானலில் வண்டு பண்செய்ய,
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.

[4]
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல், பால் புரை நீறு, வெண்நூல், கிடந்த
பெண் உறு மார்பினர்; பேணார் மும்மதில் எய்த பெருமான்;
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர்; விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண் நிற மால்விடை அண்ணல் வேட்கள நன் நகராரே.

[5]
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம்
பொறி வளர் ஆர் அழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர்,
மறி வளர் அம் கையர், மங்கை ஒரு பங்கர், மைஞ்ஞிறமான் உரி தோல் உடை ஆடை
வெறி வளர் கொன்றை அம்தாரார் வேட்கள நன்நகராரே.

[6]
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை, மாமலை வேந்தன் மகள் மகிழ,
நுண் பொடிச் சேர நின்று ஆடி, நொய்யன செய்யல் உகந்தார்,
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்,
வெண் பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்நகராரே.

[7]
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆர் அமுதம் அமரர்க்கு அருளி,
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து, சூலமோடு ஒண்மழு ஏந்தி,
தாழ் தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்நகராரே.

[8]
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும், கைதொழ நின்றதும் அல்லால்,
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெரு உற ஊன்றிய பெம்மான்-வேட்கள நன்நகராரே.

[9]
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர், ஆதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல்;
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச, மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த
வித்தகர், வேத முதல்வர் வேட்கள நன் நகராரே.

[10]
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.040   பொடி உடை மார்பினர், போர்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவாழ்கொளிபுத்தூர் ; (திருத்தலம் அருள்தரு வண்டார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணவீசுரர் திருவடிகள் போற்றி )
பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.

[1]
அரை கெழு கோவண ஆடையின்மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து, ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி, போர் விடை ஏறி, புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரை கெழு மா மலர் தூவி, விரிசடையான் அடி சேர்வோம்.

[2]
பூண் நெடுநாகம் அசைத்து, அனல் ஆடி, புன்தலை அங்கையில் ஏந்தி,
ஊண் இடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி,
வாள் நெடுங்கண் உமைமங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தாள் நெடு மா மலர் இட்டு, தலைவனது தாள்நிழல் சார்வோம்.

[3]
தார் இடுகொன்றை, ஒர் வெண்மதி, கங்கை, தாழ்சடைமேல் அவை சூடி,
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி,
வார் இடுமென்முலை மாது ஒரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கார் இடு மா மலர் தூவி, கறை மிடற்றான் அடி காண்போம்.

[4]
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, காதில் ஒர் வெண்குழையோடு
புன மலர்மாலை புனைந்து, ஊர் புகுதி என்றே பல கூறி,
வனமுலை மாமலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
இனமலர் ஏய்ந்தன தூவி, எம்பெருமான் அடி சேர்வோம்.

[5]
அளை வளர் நாகம் அசைத்து, அனல் ஆடி, அலர்மிசை அந்தணன் உச்சிக்
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே! கள்வனே! என்னா,
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தளை அவிழ் மா மலர் தூவி, தலைவனது தாள் இணை சார்வோம்.

[6]
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து, அழிதலை அங்கையில் ஏந்தி,
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி,
மடல் நெடு மா மலர்க்கண்ணி ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தட மலர் ஆயின தூவி, தலைவனது தாள் நிழல் சார்வோம்.

[7]
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து,
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி,
வயல் விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
சய விரி மா மலர் தூவி, தாழ்சடையான் அடி சார்வோம்.

[8]
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த, காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி, ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி,
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரிமலர் ஆயின தூவி, விகிர்தனது சேவடி சேர்வோம்.

[9]
குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார், புறம் கூற,
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி,
வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தொண்டர்கள் மா மலர் தூவ, தோன்றி நின்றான் அடி சேர்வோம்.

[10]
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர்
நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்
வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்,
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.041   சீர் அணி திகழ் திருமார்பில்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்பாம்புரம் ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி உடனுறை அருள்மிகு பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் திருவடிகள் போற்றி )
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

[1]
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர்,
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள்,
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவ,
பக்கம் பல் பூதம் பாடிட, வருவார் பாம்புர நன் நகராரே.

[2]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list