சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

8.107   மாணிக்க வாசகர்    திருவாசகம்

திருவண்ணாமலை -
கொச்சகக்கலிப்பா
Audio: https://sivaya.org/thiruvaasagam/07 Thiruvempavai Thiruvasagam.mp3  
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண்
மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்?
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து,
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன்
ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே!
ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 1]


பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப் பகல் நாம்
பேசும்போது; எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!' நேரிழையீர்!
சீ! சீ! இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆர்?' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 2]


முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, என்
அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 3]


ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?'
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?'
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்: அவ்வளவும்
கண்ணைத் துயின்று, அவமே காலத்தைப் போக்காதே'
விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப் பொருளை,
கண்ணுக்கு இனியானை, பாடிக் கசிந்து, உள்ளம்
உள் நெக்கு, நின்று உருக, யாம் மாட்டோம்; நீயே வந்து
எண்ணி, குறையில், துயில்' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 4]


மால் அறியா, நான்முகனும் காணா, மலையினை, நாம்
போல் அறிவோம், என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய்ப் படிறீ! கடை திறவாய்.
ஞாலமே, விண்ணே, பிறவே, அறிவு அரியான்
கோலமும், நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி, சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும், உணராய், உணராய் காண்!
ஏலக்குழலி பரிசு' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 5]


Go to top
மானே! நீ நென்னலை, நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும், நாணாமே
போன திசை பகராய்; இன்னம் புலர்ந்தின்றோ?
வானே, நிலனே, பிறவே, அறிவு அரியான்
தானே வந்து, எம்மைத் தலையளித்து, ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு, உன் வாய் திறவாய்!
ஊனே உருகாய், உனக்கே உறும்; எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடு' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 6]


அன்னே, இவையும் சிலவோ? பல அமரர்
உன்னற்கு அரியான், ஒருவன், இரும் சீரான்,
சின்னங்கள் கேட்ப, சிவன் என்றே வாய் திறப்பாய்;
தென்னா என்னா முன்னம், தீ சேர் மெழுகு ஒப்பாய்;
என்னானை, என் அரையன், இன் அமுது, என்று எல்லோமும்
சொன்னோம் கேள், வெவ்வேறாய்; இன்னம் துயிலுதியோ?
வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,
என்னே துயிலின் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 7]


கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்;
ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்;
கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங்கருணை,
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு!' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 8]


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம்; ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம்' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 9]


பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாத மலர்;
போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒருபால்; திருமேனி ஒன்று அல்லன்;
வேத முதல்; விண்ணோரும், மண்ணும், துதித்தாலும்,
ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்;
கோது இல் குலத்து, அரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்!
ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏது அவனைப் பாடும் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 10]


Go to top
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து, உன் கழல் பாடி,
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம் காண்; ஆர் அழல்போல்
செய்யா! வெள் நீறு ஆடீ! செல்வா! சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம், உய்ந்து ஒழிந்தோம்;
எய்யாமல் காப்பாய் எமை' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 11]


ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 12]


பைம் குவளைக் கார் மலரால், செம் கமலப் பைம் போதால்,
அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால்,
தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எம் கோனும், போன்று இசைந்த
பொங்கு மடுவில், புகப் பாய்ந்து, பாய்ந்து, நம்
சங்கம் சிலம்ப; சிலம்பு கலந்து ஆர்ப்ப;
கொங்கைகள் பொங்க; குடையும் புனல் பொங்க;
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 13]


காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,
சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி,
சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி, ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 14]


ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே, நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஓவாள்; சித்தம் களி கூர,
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப,
பார் ஒரு கால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள்;
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர்? இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வார் உருவப் பூண் முலையீர், வாய் ஆர நாம் பாடி,
ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 15]


Go to top
முன்னி, கடலை, சுருக்கி எழுந்து, உடையாள்
என்னத் திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து, எம்பிராட்டி திருவடிமேல்
பொன் அம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம்
என்னச் சிலை குலவி, நம்தம்மை ஆள் உடையாள்
தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி, அவள், நமக்கு முன் சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 16]


செம் கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்,
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்பாலதா,
கொங்கு உண் கரும் குழலி! நம் தம்மைக் கோதாட்டி,
இங்கு, நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி,
செம் கமலப் பொன் பாதம் தந்தருளும் சேவகனை,
அம் கண் அரசை, அடியோங்கட்கு ஆர் அமுதை,
நங்கள் பெருமானை, பாடி, நலம் திகழ,
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 17]


அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றால்போல்,
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப,
தண் ஆர் ஒளி மழுங்கி, தாரகைகள் தாம் அகல,
பெண் ஆகி, ஆண் ஆய், அலி ஆய், பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறு ஆகி,
கண் ஆர் அமுதமும் ஆய், நின்றான் கழல் பாடி,
பெண்ணே! இப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 18]


உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம், என்று
அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான், உனக்கு ஒன்று உரைப்போம், கேள்!
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க;
எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க;
கங்குல், பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க.
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு?' ஏல் ஓர் எம்பாவாய்!


[ 19]


போற்றி! அருளுக, நின் ஆதி ஆம் பாத மலர்.
போற்றி! அருளுக, நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்.
போற்றி! எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை அடிகள்.
போற்றி! மால், நான்முகனும், காணாத புண்டரிகம்.
போற்றி! யாம் உய்ய, ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்.
போற்றி! யாம் மார்கழி நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!


[ 20]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவண்ணாமலை
1.010   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
Tune - நட்டபாடை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
1.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ ஆர் மலர் கொண்டு
Tune - தக்கேசி   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
4.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
Tune - திருநேரிசை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
Tune - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   பட்டி ஏறு உகந்து ஏறி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
8.107   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
Tune -   (திருவண்ணாமலை )
8.108   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
Tune -   (திருவண்ணாமலை )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song