சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

தென்திருமுல்லைவாயில் - பியந்தைக்காந்தாரம் அருள்தரு கோதையம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=qfep3aaid6U  
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன், நடம் மன்னு
துன்னு சுடரோன்,
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன், எங்கள்
அரன், ஊர்
களி மண்டு சோலை, கழனிக் கலந்த கமலங்கள் தங்கும்
மதுவின்
தெளி மண்டி உண்டு, சிறைவண்டு பாடு திரு முல்லை
வாயில் இதுவே.


[ 1]


பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன், அயனைப்
படைத்த பரமன்,
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க
நின்ற அரன், ஊர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி அவை ஓதம்
மோத வெருவி,
தெருவத்தில் வந்து, செழு முத்து அலைக் கொள் திரு
முல்லை வாயில் இதுவே.


[ 2]


வாராத நாடன், வருவார் தம் வில்லின் உரு மெல்கி
நாளும் உருகில்
ஆராத இன்பன், அகலாத அன்பன், அருள் மேவி நின்ற
அரன், ஊர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை
பிரியாள்
தீராத காதல் நெதி நேர, நீடு திரு முல்லை வாயில்
இதுவே.


[ 3]


ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு
மூன்றொடு ஏழும் உடன் ஆய்,
அன்று இன்றொடு என்றும், அறிவு ஆனவர்க்கும்
அறியாமை நின்ற அரன் ஊர்
குன்று ஒன்றொடு ஒன்று, குலை ஒன்றொடு ஒன்று, கொடி
ஒன்றொடு ஒன்று, குழுமிச்
சென்று, ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு
முல்லைவாயில் இதுவே.


[ 4]


கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர் கூறன், விடை
நாளும் ஏறு குழகன்,
நம்பன், எம் அன்பன், மறை நாவன், வானின் மதி ஏறு
சென்னி அரன், ஊர்
அம்பு அன்ன ஒண்கணவர் ஆடு அரங்கின் அணி
கோபுரங்கள், அழகு ஆர்
செம்பொன்ன செவ்வி தரு மாடம், நீடு திரு முல்லை
வாயில் இதுவே.


[ 5]


Go to top
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட
ஒருவன்,
ஆன் ஏறு அது ஏறி, அழகு ஏறும் நீறன், அரவு ஏறு
பூணும் அரன், ஊர்
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து, குயில் ஏறு
சோலை மருவி,
தேன் ஏறு மாவின் வளம் ஏறி, ஆடு திரு முல்லை வாயில்
இதுவே.


[ 6]


நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற
நிமலன்;
அஞ்சு ஆடு சென்னி, அரவு ஆடு கையன்; அனல் ஆடும்
மேனி அரன்; ஊர்
மஞ்சு ஆரும் மாடமனை தோறும், ஐயம் உளது என்று
வைகி வரினும்,
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக் கொள் திரு
முல்லை வாயில் இதுவே.


[ 7]


வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடிபத்தும்
இற்று நெரிய,
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன்;
எங்கள் அரன்; ஊர்
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற
பொன்னி வடபால்,
திரை வந்து வந்து செறி தேறல் ஆடு திரு முல்லை
வாயில் இதுவே.


[ 8]


மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரிநூலன்;
வேதமுதல்வன்,
பால் ஆடு மேனி கரியானும், முன்னியவர் தேட நின்ற
பரன்; ஊர்
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல்
வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள, மல்கு திரு முல்லை
வாயில் இதுவே.


[ 9]


பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன்; நம் நம்பன்;
அடியே
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர், அமண், மாய
நின்ற அரன்; ஊர்
வனம் மல்கு கைதை, வகுளங்கள் எங்கும், முகுளங்கள்
எங்கும் நெரிய,
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லை
வாயில் இதுவே.


[ 10]


Go to top
அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்
செய்த எந்தை, மருவார்
திணி கொண்ட மூன்றுபுரம் எய்த வில்லி, திரு
முல்லைவாயில் இதன்மேல்,
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன்
ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர், அகல்வானம்
ஆள்வர், மிகவே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: தென்திருமுல்லைவாயில்
2.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துளி மண்டி உண்டு நிறம்
Tune - பியந்தைக்காந்தாரம்   (தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் கோதையம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song