சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.060   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவிடைமருதூர் - தக்கேசி அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=JXJJZzDa-P4  
கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால், கைப்பர், பாழ் புக; மற்று அது போலப்
பழுது நான் உழன்று உள்-தடுமாறிப் படு சுழித்தலைப் பட்டனன்; எந்தாய்!
அழுது நீ இருந்து என் செய்தி? மனனே! அங்கணா! அரனே! எனமாட்டா
இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .


[ 1]


நரைப்பு மூப்பொடு பிணி வரும், இன்னே; நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன்;
அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன்; அஞ்சினேன், நமனார் அவர் தம்மை;
உரைப்பன், நான் உன சேவடி சேர; உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத
இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே!.


[ 2]


புல்-நுனைப் பனி வெங்கதிர் கண்டால் போலும் வாழ்க்கை பொருள் இலை; நாளும்
என் எனக்கு? இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன்; எந்தாய்!
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகிக் கழிந்தன, காலம்;
இன்னம் என் தனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .


[ 3]


முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய, மூர்க்கன் ஆகிக் கழிந்தன, காலம்;
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்; சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்;
அந்தி வெண்பிறை சூடும் எம்மானே! ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா!
எந்தை! நீ எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .


[ 4]


அழிப்பர், ஐவர் புரவு உடையார்கள்; ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு,
கழித்து, கால் பெய்து, போயின பின்னை, கடை முறை உனக்கே பொறை ஆனேன்;
விழித்துக் கண்டனன், மெய்ப் பொருள் தன்னை; வேண்டேன், மானுட வாழ்க்கை, ஈது  ஆகில்;
இழித்தேன்; என் தனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .


[ 5]


Go to top
குற்றம் தன்னொடு குணம் பல பெருக்கி, கோல நுண் இடையாரொடு மயங்கி,
கற்றிலேன், கலைகள் பல ஞானம்; கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்;
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன்; பாவியேன் பல பாவங்கள் செய்தேன்;
எற்று உளேன்? எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தைபிரானே!.


[ 6]


கொடுக்க கிற்றிலேன், ஒண் பொருள் தன்னை; குற்றம் செற்றம் இவை முதல் ஆக,
விடுக்க கிற்றிலேன், வேட்கையும் சினமும்; வேண்டில், ஐம்புலன் என் வசம் அல்ல;
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த, நமன்தமர் நரகத்து இடல் அஞ்சி;
இடுக்கண் உற்றனன்; உய்வகை அருளாய்- இடைமருது(வ்)உறை எந்தைபிரானே!.


[ 7]


ஐவகையர் அரையர் அவர் ஆகி, ஆட்சிகொண்டு, ஒரு கால் அவர் நீங்கார்;
அவ் வகை அவர் வேண்டுவது ஆனால், அவர் அவர் வழி ஒழுகி, நான் வந்து
செய்வகை அறியேன்; சிவலோகா! தீவணா! சிவனே! எரிஆடீ!
எவ் வகை, எனக்கு உய்வகை? அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே!.


[ 8]


ஏழை மானுட இன்பினை நோக்கி, இளையவர் வயப்பட்டு இருந்து, இன்னம்
வாழை தான் பழுக்கும், நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு,
கூழை மாந்தர் தம் செல்கதிப் பக்கம், போகமும் பொருள் ஒன்று அறியாத
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே! .


[ 9]


அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும்
இரைக்கும் காவிரித் தென்கரை தன்மேல் இடைமருது(வ்) உறை எந்தைபிரானை,
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை, உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள்,
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி, நாதன் சேவடி நண்ணுவர் தாமே. .


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிடைமருதூர்
1.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓடே கலன்; உண்பதும் ஊர்
Tune - தக்கராகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு ஓர் காதினன்; பாடு
Tune - குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.110   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நடை மரு திரிபுரம் எரியுண
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
2.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
Tune - காந்தாரம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
4.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   காடு உடைச் சுடலை நீற்றார்;
Tune - திருநேரிசை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.015   திருநாவுக்கரசர்   தேவாரம்   பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப்படை உடையார் தாமே போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
7.060   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கழுதை குங்குமம் தான் சுமந்து
Tune - தக்கேசி   (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை)
9.017   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்
Tune -   (திருவிடைமருதூர் )
11.028   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவிடைமருதூர் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song