உடல் நலம் தரும் திருப்புகழ்

1027 தோதகம் மிகுத்த (பொதுப்பாடல்கள்) - வஞ்சகம் மிக்குள்ள (மண், நீர், தீ, காற்று, விண் என்னும்) ஐந்து பூதங்களின் மயக்கத்தால் ஏற்படும் விலாப் பக்கத்தில் உண்டாகும் சூலை நோய், வலிப்பு முதலிய நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து, எங்கும் பரவும் பெரு வயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குஷ்ட நோய்கள், தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூல நோய் பின்னும் பல வகையான நோய்கள் சிறிதேனும் என்னை அணுகாமல், வருந்தி நிற்கும் என்னை முக்தி நீடித்து விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக.

243 இருமலு ரோக (திருத்தணிகை) - இருமல், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக.

790 ஈளை சுரங்குளிர் (பாகை) கோழை, காய்ச்சல், குளிர், வாதம் என்ற பல நோய்கள் என்னைச் சூழ்ந்து நான் மிகவும் இளைப்பு அடையாமல், வலிமையை இழந்து துன்பமடையும் சிறிய கூடாகிய இவ்வுடலில் புகுந்து சுடுகாட்டிற்குச் சேரும்படி உயிரை இழக்காமல், மூளை, எலும்புகள், நாடிகள், நரம்புகள் இவையெல்லாம் வெவ்வேறாகும்படி நெருப்பில் மூழ்கி வேகாமல், மூலப்பொருளான சிவயோக பதவியில் நான் வாழ்வுபெறும்படியாக உபதேசித்தருள்வாயாக.

Back to top -