திருப்புகழில் ஞான மார்க்கம்

536 ககனமும் அநிலமும் (வள்ளிமலை) - ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும், கெட்டுப்போன மாமிச நாற்றமும், கிருமிகள் உள்ளதுமான இந்த உடம்பு, நெருப்புப் பொறி பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி, யுகங்கள் முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக, ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக.

616 ஐங்கரனை (கொங்கணகிரி) - ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி இடைவிடாமல் வளரும் இரவு, பகல், இவை இல்லாமல் போகும் நிலையினை அருள் புரிவாயாக. செந்தமிழால் போற்றி, உன்னை அன்புடனே துதிக்க மன நிலையை அருள் புரிவாயாக. நிலைபெற்ற தவநிலையை கொடுத்து உந்தன் அடிமையாகிய நான் முக்திநிலை பெறவேண்டி சந்திர வெளியைக் காணும்படியான யோகநிலை மார்க்கத்தைக் காட்டி அருள் புரிவாயாக. பெருமை, கெளரவம் இவைகளை எட்டு திக்கிலும் உள்ளோரெல்லாம் மதிக்கும்படியாக ஓங்கும் சிறப்பு வகையில் அருள்வாயாக. மாதர்கள் தரும் இன்பமே மிக்க இனிமையான சுகம் என்றிருந்த என் மனம் உன்னையே நினைத்த நிலையாய் அமைதிபெற அருள்வாயாக. இரவும் பகலும் மக்களை சுபமாக காக்கும் முறைகளை அறியவேண்டி என்னை வந்தடைந்து கேட்க, அவர்களுக்கு அருளும் புத்தியினை நீ எனக்கு அருள்வாயாக. கொங்கு நாட்டில் உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்) (அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று ( முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக.

1165 நகரம் இரு பாதமாகி (பொதுப்பாடல்கள்) - 'நமசிவய' என்னும் பஞ்சாக்ஷரத்தில் 'ந' என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு பாதங்களாகும். 'ம' என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும். நடுவில் உள்ள 'சி' என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும். 'வ' என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய திருமுடி, 'ய' என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும். இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் 'நமசிவாய' என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும் அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள் மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ+உ+ம்) என்று கூடிய அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய அறிவின் அறிவொளி பரி பூரணப் பொருளாகும். அந்தப் பொருளை அடியேனும் உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும் அனுபவ ஞானத்தை அருள்வாயாக.

908 குருதி கிருமிகள் (வயலூர்) - இரத்தம், புழுக்கள், நீர், மலம், மயிர், சதை ஆகிய இவை பொருந்திய உருவை உடைய இந்த உடல் எடுத்தது போதும் போதும். அழகோடு விளங்கும் பல விதமான நகைகளும், நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும், ஆறு சுவைகள் கூடிய உணவும், படுக்கையும், குளிர் இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட வீடும் - இவைகள் யாவும் போதும் போதும். மனைவி, குழந்தைகள், தாயார், உடன் பிறந்தவர்கள், உறவு முறைகளைக் கூறி குலவும் சுற்றத்தினர் இவர்களும் போதும் போதும். ஒரு நான்கு மறைகளின் வழியை எடுத்துக் கூறும் சைவ சித்தாந்த நூல்களைத் தவிர வேறு உலக சம்பந்தமான நூல்களை ஓதுவதும் போதும் போதும். விளங்கி நிற்பவனும், அழிவில்லாதவனுமாகிய உன்னை நினைப்பவர்களது. நட்பைத் தவிர, இனி பிறரிடத்தே திரிவது நல்லது என்று அவர்கள் வசப்பட்டு, அவர்களை வழிபடுகின்ற நட்பும் போதும் போதும். நின் திருவருள் அலை வீசும் கடலின் சங்கமத் துறை வழியில் செல்லும் அறிவை என் மனம் மகிழும் பொருட்டு நீ அருள்வாயாக.

714 சுருதி மறைகள் (உத்தரமேரூர்) - வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள், எட்டுத் திக்குப் (1) பாலகர்கள் , (2,) முநிவர்கள் குற்றமில்லாத ரிஷிகள் ஏழு பேர் சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள், சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச மாயா அதிகாரிகள், (3) பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள் வெகு தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள், அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக் கோடிக்கணக்கான அடியார்கள், திருமால், பிரமன், ஒரு கோடி பேர் - இவர்களெல்லாம் கூடி, அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது திருவடிகளை, அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக.

247 எத்தனை கலாதி (திருத்தணிகை) எத்தனை கலகச் சண்டைகள், எத்தனை சித்து வேலைகள், அங்கு எத்தனை வியாதிகள், எத்தனை பைத்தியக்காரச் செயல்கள், அசையும் உயிராகவும், அசையாததாகவும் உலகில் எடுத்த உடல்கள் எத்தனை, நீங்காத அச்சம் தரும் செயல்கள் எத்தனை, அங்கே வலிமையுடைய ஆண்மைச் செயல்கள்தாம் எத்தனை, அங்கே ஆசைகள் எத்தனை விதமானவையோ, புலால் உண்டு தினந்தோறும் பசியாறக்கூடிய செயல்கள் எத்தனை, பித்துப்பிடித்தவன் போன்ற யான் வயிற்றில் உண்டு இவ்வாறு கெட்டுப் போகாமல் பிறவியினின்றும் விடுதலை பெற்றிட, உனது அடியார் கூட்டத்தின் செயல்களான தன்மையும், யாராலும் உணர்தற்கு அரியதாக நிற்பதும், பரவிப் பிரகாசிக்கின்ற ஒளிமயமான ப்ரணவ மந்திரப் பொருளாக நிற்பதும், பாச பந்தங்களால் அறிவதற்கு அரிதாக நிற்பதுமான உன் கழல்களைத் தந்தருள்க.

658 குவலயம் மல்கு (வெள்ளிகரம்) - அறிவில்லாதவருடன் நட்புக் கொள்ளும் செய்கைகளை உடைய நானும், இங்கு உன்னுடைய அடியார்களைப் போல் அருமையான வேதங்களையே உண்மையான நூலாகக் கருதி, மநு தர்ம சாஸ்திர வழியிலே நடந்து, அறிவு இன்னது என்பதை உள் அறிவுகொண்டு அறிந்து, பூரண ஞானம் பெற்று, எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள் செய்வாயாக.

1251 துடித்து எதிர் (பொதுப்பாடல்கள்) - உடல் பதைத்து, எதிர் எதிரே கூர்மையுடன் எழுகின்ற, முறை கெட்ட தர்க்கம் செய்யும் சமயவாதிகளின் சுழல் போன்ற கூட்டத்துக்கு கோடிக் கணக்கில் எதிர் வாதம் பேசி, மிதித்து வருத்தமுறச் செய்யக் கூடிய தீமைகளின் அதிகார நிலையை அறுத்துத் தள்ளக் கூடியதும், வேலாயுதத்தைச் செலுத்தி (பகைவர்களின்) உடலைத் துண்டிக்க வல்லதும், நூல் வல்லவர்களின் தலை மீது உள்ள கர்வம் மிகுந்த தலைமுடியை விழுந்து போகும்படி செய்ய வல்லதும், யாவரும் அடிமைப்படும்படி ஒழுங்காக அமைந்துள்ள வேதக் குவியல்களெல்லாம் கண்டு உணராததுமான மூலப்பொருளை அறியும் படி நீ எனக்கு ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை யாரும் பழிக்காத முறையில் உபதேசித்து அருள்வாயாக.

1271 மன நூறு கோடி (பொதுப்பாடல்கள்) - மயிலில் ஏறி, விரைவில் வந்து, பரவெளியாம் ஞான முக்தியினை நீ தந்தருள்வாயாக.

590 கலக்கும் கோது (திருச்செங்கோடு) - பிறருக்குக் கிடைக்காத ஞான உபதேசத்தை, எனக்கு சிறப்பாக விருப்பம் மிகவும் கொண்டுள்ள நான், ஊழ் வினையின் பயனாக மனத்தில் நினைக்கின்ற தீய குணங்களை விட்டு உய்யும் பொருட்டு அபயம் என்று நீஅருள்வாயாக.

766 ஊனத்தசை தோல்கள் (சீகாழி) - அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை, மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறு குடிலாகிய இந்த உடல் நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து, ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும், கூனித் தடிகொண்டு நடந்தும், இழிவைத் தரும் சளி மிக்க குப்பையான இந்த உடலை, மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் படி செல்வதான இந்த உலக மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி, உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக.

1294 நாளு மிகுத்த (பொதுப்பாடல்கள்) - நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி நெகிழ்ந்த மனத்தினனாய், . உனது நடனக் கோலத்தைக் காண விரும்பும் எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க அருள் புரிவாயாக.

283 பூசலிட்டு (திருத்தணிகை) - வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள் புரிவாயாக

303 அதிரும் கழல் (குன்றுதோறாடல்) - துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக

652 அறிவிலாப் பித்தர் (காஞ்சீபுரம்) - காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் எனக்கு வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து, நான் தெளிவு பெறுவதற்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்

824 ஒருவழிபடாது (சோமநாதன்மடம்) - என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு, நீ இருப்பதை ஒருகாலும் நினையாத என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு அடியேனுக்கு, இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகம் தான் தைரியத்தைத் தர வல்லது என்று மொழிந்து காட்டுவதும், பாசக்கயிறை வீசும் மிகுந்த கோபங்கொண்ட யமதூதர்களை மோதி விரட்டியடிக்கக் கூடியதுமான, மெளன நிலையான ஞானோபதேசம் என்ற ஆயுதத்தால் எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிய, நீ அன்போடு அருள்வாயாக.

Back to top -