திருப்புகழில் வினை நீக்கம்

858 அறுகுநுனி பனி (திருவிடைமருதூர்) - ஆதலால் நல் வினை தீ வினை என்னும்) இரண்டு வினைகளும் மூன்று மலங்களும், இறப்பு, பிறப்பு என்பனவும் ஒழிய, ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும் வகை வருமாறு பேரின்ப நிலையை அருள்வாயாக.

28 அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) - யமன் என்னை அழைத்துச் செல்லாத படிக்கு, என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை), என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக, உன் உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் தந்தருள்வாயாக.

1203 அடியார் மனம் (பொதுப்பாடல்கள்) இழிந்தவனாகிய என்னுடைய ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் யாவும், நல்வினை, தீவினை என்ற இரு நோய்களுடனும், என்னைப் பிடித்துள்ள தரித்திரத்தோடும் யாவுமாக அழிபட்டு, ஞான பரிசுத்த பரவெளி எனக்குப் புலப்பட்டதாகி, மகிழ்ச்சி மிகுந்து ஏற்பட, நீ எனக்காக மயில் மீது ஏறி வந்து, முக்தி வீட்டை யான் அடையுமாறு என்மீது அன்பு வைத்து, உனது திருவருளைத் தந்தருள்க.

20 வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்) - தீயில் இடப்பட்ட பஞ்சு போல மிகவும் கெட்டுப் போகின்ற அடியனாகிய நானும் துன்பப்படும் வினைத் தொடர்புள்ள கடலிலிருந்து கரையேற இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த உன் திருவடிகளாகிய தாமரைகளை அருள் புரிவாயாக.

1092 அனகனென அதிகனென (பொதுப்பாடல்கள்) - வாக்கு அடங்கவும், மனம் ஒடுங்கவும், ஓர் உபதேசப் பொருளை தந்தருள்வாயாக

Back to top -