திருப்புகழில் யோக மார்க்கம்

188 மூலம் கிளர் ஓர் (பழநி) - மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஓர் உருவமாக, உடலின் நடுவில் நான்கு அங்குல அளவின் மேல், சுழுமுனை, இடை கலை, தோன்றும் பிங்கலை என்னும் நாடிகளுடன் கலந்து, முதல் வேர்களாகிய இந்த மூன்று நாடிகளும் (ஒவ்வொரு நாடியின் புறமும்) பிரகாசமான ஒளியைப் பரப்பி, ஒப்பற்ற சூலாயுதம் போல ஓடுகின்ற பிராண வாயுவை முதுகுத் தண்டிலுள்ள சுழு முனை வழியில் கணக்காக ஓடச்செய்து, (பின்னர் அது) (நெருப்பாறு, மயிர்ப்பாலம் என்னும்) நெற்றியில் விளங்கும் ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை நிலையில் (சிவனைக் குறிக்கும்) சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிற்கும். நிறைந்து (எல்லா நிலைகளிலும்) ஒளி வீசுகின்ற பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து, பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும் அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள் புரிவாயாக.

786 சூலம் என ஓடு திருக்கடவூர் - சூலம் போல ஓடுகின்ற பாம்பு போன்ற பிராணவாயுவை வெளியேறாது அடக்கி, பரிசுத்தமான பர ஒளியைக் காணவும், முத்தி நிலை கை கூடவும், சூழ்ந்துள்ள ஆணவ இருளாகிய உருவத்தை அழிபடும்படியாக யோக நெருப்பில் அதை எரித்து, ஜோதி ரத்னபீடம் அமைந்துள்ள நிர்மலமான வீட்டை அடைந்து, அந்த மேலைப் பெரு வெளியிலே, ஆயிரத்தெட்டு இதழோடு கூடிய மேலான குரு கமலத்தில் ( ஹஸ்ராரத்தில்) சேர்ந்து, சிவ ஞான இன்ப ஒளியைப் பிரதிபலிக்கும் புனலில் மூழ்கி, வேல், மயில் இவைகளின் தரிசன ஒளியை அந்த நிலையில் கிடைக்கப் பெற்று, முக்தி நிலையைச் சிறப்புடன் பெறும் அருளைத் தந்தருளுக

82 பூரண வார கும்ப (திருச்செந்தூர்) - நான் என வரும் ஆணவம் நீங்கி, தூயவனாக இருந்து, பிராண வாயு உடலின் பல பாகங்களுக்கு ஓடி, மூக்கின் மேல் இரண்டு விழி முனைகளும் பாய, காயம், வாக்கு, மனம் என்னும் மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருவடிகளை நினைந்து, காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப் போல் நான் விளங்கும்படி அருள் புரிவாயாக.

1313 ஆசை நாலுசதுர (பழமுதிர்ச்சோலை) - திக்குகள் நான்கு பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி இனிய ஒளி வீசிட, இரண்டு பக்கங்களிலும் பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற பிராண வாயு விருப்பம் மிக்கெழ சுவாதிஷ்டான (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து, (தில்லையில் நடனம் செய்யும் நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க, மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி, வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி ... வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய, (பிரமரந்திரம் - பிந்து மண்டலம், ஹஸ்ராரம் - அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும் கண்டறிந்து, சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்த) ஆதாரத்தில், விந்து நாத ஓசை சாலும் ... சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள ஒப்பற்ற சத்தம் மிகுந்த பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய், ஒன்று சேர்ந்து மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன், புகழ்ந்து சொல்லப்படும் வேத வாசி சக்திக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி ஒளிக்குள்ளே, ஊமையாகிய என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற, பிரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க, உனது அருளாற்றலால் ஒளிர்கின்ற யோக விதங்கள் எட்டும் இதில் பொருந்தும் வகையை நான் அறியுமாறு இன்று தந்தருளுக.

Back to top -