![]() |
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Oriya Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
விநாயகர் அகவல் Audio
சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து 20
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளிப் 50
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில் 60
எல்லை இல்லா ஆனந் தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே
Back to Top
This page was last modified on Fri, 06 Jan 2023 06:54:04 +0000