சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
திரு மூல நாயனார்  

12 -ஆம் திருமுறை   12.300  
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
 
மாலைக்காலத்தில் தோன்றும் இளம்பிறைக் கண்ணி யைச் சூடிய சிவமூர்த்தியினது திருக்கயிலாய மலையினில் உள்ள பழமையான கோயிலுக்கு முதற்பெருந் தலைவராகத் தலைமை பெற்று, இந்திரன் மால் அயன் முதலாய தேவர்கட்கு இறைவனை அடைகின்ற நெறியினை அருள் செய்கின்ற குருமூர்த்தியாகிய நந்தியெம் பெரு மான் திருவருள் பெற்ற, நான்கு மறைகளையும் உணர்ந்த, யோகியர் களில் ஒருவர். *** முந்தை நிகழ் கோயில் - முன்னைப் பழமைக்கும் பழமை யாகத் திகழ்ந்து வரும் கோயில். முதன்மை பெற்ற கோயில் என்றலும் ஒன்று. நெறி - இறைவனை அடைவதற்குரிய நெறி. சிவபெருமா னிடத்து அருளுபதேசம் பெற்றவராதலின், அதனைத் தம்பால் வந்து கேட்போர்க்கும் அருளும் குருமூர்த்தியாக விளங்கினர் நந்திதேவர். திருமூலர் நந்தியெம்பெருமானிடத்து அருள் பெற்றவராதலை,
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
(தி. 10 பாயி. பா. 6)
என வரும் அவர்தம் திருவாக்கால் அறியலாம்.
நந்தி என்பது சிவபெருமானுடைய திருப்பெயர்களுள் ஒன்றா கும். அஃது அவர்பால் முதலுபதேசம் பெற்ற நந்தியெம் பெருமானுக் கும் ஆயிற்று.
யோகியார் பெயரை யாண்டும் குறியாது, மேல்வரும் பதினான் காவது பாடலில் 'திருமூலராய் எழலும்' என ஆசிரியர் குறித்தருளுவ தால், அந்நிகழ்ச்சியின் பின்பே திருமூலர் என்னும் பெயர் இவருக்கு வழங்குவதாயிற்று என அறிய இயலுகின்றது.

அச்சிவயோகியார் தாமும், அணிமா முதலாக வரும் எண் வகைச் சித்திகளையும் பெற்றவர். அவர் நம் முதல்வரது திருக் கயிலாய மலையினின்றும் புறப்பட்டுத் தென்திசையில் பொதிய மலையில் இருந்த அகத்திய முனிவரிடத்துக் கொண்டதொரு நட்பு உரிமையால், அவருடன் சில நாள் தங்குதற்கு விரும்பி, நல்ல தமிழின் பிறப்பிடமாய பொதிய மலையில் சேர்வதற்கு வழிக்கொண்டு வந்தார். *** அணிமா முதலிய எண்வகைச் சித்திகள்:
1. அணிமா - அணுவினும் சிறிய வடிவம் கொள்ளுதல்.
2. மகிமா - எங்கும் நிறைந்து நிற்கும் பெருவடிவம் கொள்ளுதல்.
3. லகிமா - மலையனைய பொருள்களும் எடுக்கும்பொழுது எளியவாய் இருத்தல்.
4. கரிமா - அணுவனைய வடிவில் இருந்தும், எடுக்கும் பொழுது மலையனைய பளுவாய் இருத்தல்.
5. பிராத்தி - யாண்டும் செல்லும் ஆற்றல் உடைமை.

பொதிய மலை நோக்கி வழிக்கொண்டு வரும் சிவயோகியார், நிலைபெற்ற திருக்கேதாரம் எனும் பதியை வழிபட்டு, அப்பால் வந்து, பெருமுனிவர்கள் தங்கிய பெரும் புகழ் வாய்ந்த பசுபதி நேபாளம் என்னும் பதியைப் பணிந்து போற்றி, அதன்பின் புறப்பட்டு வந்து சிறந்த தமது திருச்சடையில் சிவபெருமான் ஏற்ற புனிதமாய கங்கையாற்றின், அன்னப் பறவைகள் மலிந்த அகன்ற நீர்த்துறைகளை உடைய அரிய கரையின் அருகே வந்தார். *** திருக்கேதாரம் இமயமலைச் சாரலிலுள்ள ஒரு பதியா கும். திருஞானசம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியில் இருந்தவாறே அருளிய பதிகங்களையுடையது. மிகத்தொன்மையான பன்னிரண்டு சிவலிங்கங்களில் இங்குள்ள திருமேனியும் ஒன்றாகும். பசுபதி நேபாளம் - உயிர்கட்குத் தலைவனாகிய பெருமான் எழுந்தருளி யிருக்கும் நேபாளம். அவன் யாண்டும் நீக்கமற நிற்பினும் இப்பகுதி யில் பசுபதிநாதர் எனும் திருப்பெயரோடு வீற்றிருந்தருள்வது பற்றி அத்திருமேனியோடு திருப்பதியையும் இணைத்துக் கூறினார். நேபாளத்தின் தலைநகரான காத்மண்டு என்னும் நகருக்கு வடக்கே இருகல் தொலைவில் இத்திருக்கோயில் உள்ளது. சிவபத்தி மீதூர்ந்த தனியரசர்களால் வழிவழியாக ஆளப் பெறுவது. உருத்திராக்கம் மிகுதியாகக் கிடைக்கும் இடம் இஃதாம்.
வந்தவர், கங்கையாற்றின் நீர்த் துறையில் நீராடிப் பின்னர், நீண்ட பிறவிக் கடலில் புகுவாரை அக் கடலினின்றும் கரை யேற்றும் கண்ணுதற்பெருமான் அமர்ந்தருளும் காசி என்னும் திருப் பதியைப் பணிந்து போற்றி, அப்பால் சென்று மேகங்கள் படியும் விந்திய மலையினையும், நிலைபெற்ற திருப்பருப்பத மலையையும் பணிந்து, அதன் பின்னாகத் தொடர்ந்து, பிறையணிந்த சடையை யுடைய பெருமானது திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தார். *** கரு - பிறவி. பிறத்தற்குரிய துறைகள் பலவும் கொண்டது பிறவி ஆதலின் அதனைக் கடல் என்றார். ஓரறிவு முதலாக ஆறறிவு ஈறாகவுள்ள உயிர்கள் பலவும் தத்தம் வினைக்கேற்பப் பிறவியுட் பட்டுச் சுழன்று வருதல் கண்கூடு. ஆதலின் அதனைக் கடல் என்றார். முத்தம் - நீங்குதல். வி - சிறப்பாக; உறுதியாக. அகரம் எதிர்மறைப் பொருளது. அஃதாவது சிறப்பாக நீங்குதற்குரிய ஒன்று நீங்காதிருப் பது. பிறவிப் பெருங்கடலுள் புகும் நீங்குதலை இல்லாமை செய்வது என்பார் சிவக்கவிமணியார். அப்பதி காசியாம். அயனிடத்துத் தவஞ் செய்து காசியில் அரசு உரிமை பெற்ற திவோதானன் என்னும் அரசன், அப்பதியில் தேவர்கள் வதிதல் கூடாது என்று வரம் பெற்று, ஆண்டு கொண்டிருக்கும் பொழுது, தேவர்கட்கும் தேவனாகிய இறைவனும் அவ்வரம் பொய்யாதவாறு, அங்கு அருவுருவாய் எழுந்தருளியிருந் தனன் என்பது வரலாறு. ஆதலின் காசி அவி முத்தமாயிற்று. திருப் பருப்பத மலை - மிகத் தொன்மையான சிவலிங்கம் பன்னிரண்டனுள், இங்குள்ள திருமேனியும் ஒன்றாகும்.
பெருமை பொருந்திய திருக்காளத்தி மலையில் என்றும் நிலைபெற்று விளங்கும் சிவபெருமானை வணங்கிக், கூத்தப் பெருமான் ஆடியருளும் திருமன்றங்களுள் ஒன்றாகிய திருவாலங் காடு எனும் திருப்பதியைத் தொழுது ஏத்தி, அயனும் மாலும் ஆகிய இருவர்க்கும் காணுதற்கரியராய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருவேகாம்பரத்தினையும் பணிந்து, உயர்ந்த பெரிய பொன் மதில் களையுடைய திருக்காஞ்சிபுரம் என்னும் வளம்மிக்க திருநகரில் தங்கினார். *** தாணு - தூண் போல உயிர்களைத் தாங்குபவர்; சிவ பெருமான். ஆலவனம் - திருவாலங்காடு.
நற்பதியாய காஞ்சி நகரில் வாழ்கின்ற யோகியர் களாகிய முனிவர்களை நயந்து, அவர்களுடன் அன்பாய்க் கலந்து, அப்பால் சென்று, கற்செறிவு மிக்க மதிலையுடைய திருவதிகைப் பதியைச் சேர்ந்து இறைவனைக் கண்டு வழிபட்டு, நஞ்சுண்ட கழுத்தை யுடைய பெருமான் அற்புதத் தனிக் கூத்தாடுகின்ற கனகசபையைச் சூழ்ந்த திருவீதியையுடைய பொற்பதியாகும் பெரும்பற்றப் புலியூ ரென்னும் தில்லைப்பதியை வந்து சேர்ந்தார். *** 'அமர்தல் மேவல்' (விரும்பல்) என்னும் தொல்காப்பி யம் (உரியியல் 82). யோகம் - கூடுதல். உயிர் இறைவனோடு கூடி அப்பரம்பொருளையே சிந்தித்திருப்பது, இந்நிலையில் இருந்தரு ளுவதை விரும்பிச் செய்வர் யோகியர். காஞ்சியில், சிவயோகியர்கள் வாழிடங்கள் பல உள எனத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்து (தி. 12 பு. 19) ஆசிரியர் முன்னர் அருளியதும் காண்க. பற்றற்றார் பலரும் பெரும்பற்றுக் கொண்டு கூத்தப்பெருமானை வழிபாடாற்றி வருதலின் பெரும்பற்றப்புலியூர் எனப் பெயர் பெறுவதாயிற்று.
அத்திருப்பதியில், எவ்வுலகும் உய்ய எடுத்து ஆடி யருளிய சேவடியையுடைய பெருமானைச் செவ்விய அன்பு மீதூர வணங்கிச், சிந்தையில் பெருகிய பேரின்பம் தழையத் திளைத்துப், பெருமானையே நினைந்து நிற்பார், அன்பர்களின் மெய் உணர்வில் தாமே தோன்றி ஆடும் ஆனந்தத் திருக்கூத்தைச் சிவயோகியார் அவ்வாறு தாம் பெறுகின்ற அப்பேரின்ப இயல்பில் கும்பிட்டு, அவ் வின்ப விளைவின் ஆராமையால் அங்குத் தங்கி இருந்தார். *** செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள் பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக் கூத்துக் கண்டபின்
ஒப்பில் ஒருகோடி யுகம் இருந்தேனே. (தி. 10 பா. 13)
எனத் திருமூலர் அருளிய திருவாக்கு, இதற்கு அரணாகின்றது. எனி னும், திருமூலர் தில்லைக்கு இருமுறை வந்து வழிபட்டுள்ளார் என் றும், இவ்வநுபவம் முதன்முறையாகும் என்றும் துடிசைக்கிழார் அ. சிதம்பரனார் கூறுவர்.

பெருமை பொருந்திய மாடங்களையுடைய தில்லைப் பதியில் சிவயோகியார் தங்கி இருந்து வணங்கி, அப்பால் சென்று வலிமையான ஆனேற்றின் மேலாக வருகின்ற பெருமான், அமுது செயக் கொஞ்சமும் அச்சமின்றி, நஞ்சினைக் கொடுத்தது இக்கடல் எனக் கருதி, அக்கடலிடை ஓடிச் சென்று சேராது, இவ்வுலகிற்கு நீர் வளத்தை நிறையக் கொடுத்துக் கடலின் வயிற்றை நிறைக்காத காவிரி ஆற்றின் கரையினை அணைந்தார். *** 'தடவும் கயிவும் நளியும் பெருமை' என்னும் தொல்காப்பியம் (?? பு. ? பா. ?). புனல் பரந்து பொன் கொழிக்கும் காவிரி, வயல் வளத்திற்கே பெரிதும் உதவி, இறுதியில் சிறிதாக எஞ்சிய நீரே கடல் முகத்துக் கொண்டு செல்கின்றது. அவ்வாறு நீர் சிறியதாய் இருத்தலின் கடலின் நுழை முகத்தேயே தங்கி விடுகின்றது. அதனுட் செல்ல வில்லை. இதனையே தற்குறிப்பேற்றமாக ஆசிரியர், இறைவனுக்கு நஞ்சினைக் கொடுத்தமையால் அதனுட் செல்லவில்லை எனக் கூறுகின்றார். 'இனி, இயற்பகை நாயனார் புராணத்தினுள், 'வயல் வளந்தர வியல்பினிலளித்துப், பொன்னி நன்னதி மிக்க நீர்பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்குவதோர், நன்னெடும் பெருந் தீர்த்தம்' (தி. 12 பு. 3 பா. 3) என்றது இக்கருத்துடன் மாறுபடுமோ? எனின், மாறுபடாது; இது முன்னரே ஆண்டு விளக்கப் பட்டது காண்க. 'மிக்கநீர்' என்றது வெள்ளக் காலத்திற் பெருகி மிகுந்த நீர் என்ற குறிப்புடைமையாலும், ஈண்டு 'வயிறு நிறையாத' என்றமையால் நிறைவுபட வழங்காது சுருங்கிய அளவில் மட்டும் தருவது என்ற குறிப்புடைமையானும் அமையு மென்க', என விளக்கியிருக்கும் சிவக்கவிமணியார் கூற்றும் (ஆறாவது தொகுதி: பக். 472) ஈண்டுக் கருதத் தக்கதாம். இதுபோன்றே வைகை கடலோடு கலக்காமைக்குப் பரஞ் சோதியார் கூறும் காரணமும் நினைந்து மகிழ்தற்குரியதாம்.
தொடுத்தவறு மையும் பயனுந் தூக்கிவழங் குநர்போல
அடுத்த வயல் குளநிரப்பி யறம்பெருக்கி யவனியெலாம்

: காவிரி நீராகப் பெருகும் தீர்த்தத்தில் கலந்து நீராடி, அதனைக் கடந்து மறுகரை ஏறி, பசுவின் கன்றாக உமையம்மையார் சென்று தவம் செய்து பெருமானை வழிபட்ட ஆவடுதண்டுறை என்னும் திருப்பதியைச் சேர்ந்து, ஆனேற்றில் எழுந்தருளி உயிர்களுக் கெல்லாம் அருள் சுரக்கும் தலைவராய பெருமானது அழகிய அக் கோயிலை வலம் வந்து, இயல்பாகவே தோன்றும் பெருங் காதற் பெருக்கால், அங்கு உறைந்தருளும் பெருமானைப் பணிந்து, அங்குத் தங்கியிருக்க விரும்புவார், *** தீர்த்தம் - தூய்மை செய்வது. புறத்தூய்மை நீரானும், அகத் தூய்மை அதன் புனிதத்தானும் அமைதலின், உடல், உணர்வு ஆகிய இவ்விரண்டும் கலக்க நீராடினார் என்பார், 'பெருந்தீர்த்தம் கலந்தாடி' என்றார். 'கங்கை யாடிலென் காவிரி யாடிலென்' (தி. 5 ப. 99 பா. 2) என்பதால், இவ்விரண்டும் கலக்கத் திருவருள் சிந்தனை யுடன் நீராடல் வேண்டும் என்பது பெற்றாம். 'ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்' (தி. 8 திருவெம். 12), 'களித்துக் கலந்ததோர் காதல் கசிவொடு காவிரிவாய்க் குளித்து' (தி. 4 ப. 92 பா. 7) என வரும் திருவாக்குக்களையும் காண்க. கயிலையில் இறைவனோடு சொக்கட்டான் ஆடிக்களித்தமை யால், உமையம்மை ஆவின் வடிவம் பெற்றனர் என்றும், அது நீங்க வழிபட்ட திருப்பதியாதலின், (ஆ அடுதுறை - பசுவடிவம் நீங்கப் பெற்ற இடம்) இப்பெயர் பெற்றதென்றும் கூறுப. வினை வயத்ததன்றி அருள் வயத்ததாதலின், 'ஆவின் நறும் கன்று' என்றார்.
அந்நிலையில் ஆவடுதண்டுறையை விட்டு நீங்காத தொரு கருத்து உள்ளத்துத் தானாகத் தோன்றி எழும் எண்ணத்தால், எழுந்த பேராதரவு உள்நின்று விளங்கினும், பின்னரும் பொதியமலை சேரும் விருப்பால் அத்திருப்பதியை நீங்கிப் போகும் சிவயோகியார், மேய்த்துக் காத்திடற்குரிய பசுவினங்கள் காவிரியாற்றின் கரையி லுள்ள ஒரு சோலையில் புலம்புவதைத் தாம் கண்டருளினார். *** மூளும் ஆதரவு - மேன்மேல் பெருகி எழும் அன்பு. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
அந்தணர்கள் வாழுகின்ற சாத்தனூர் என்னும் இடத்தில், பசு மேய்ப்பவரின் குடியில் வந்து பிறந்து, முன்புள்ள முறை யில் பசு இனங்களை மேய்க்கின்ற மூலன் என்னும் பெயருடையவன் ஒருவன், காவிரிக் கரையில் வந்து தன் பசுக்களை மேய்ப்பவன், தனது வினைப்பகுதி மாண்டிட, அவன் வாழ்நாளைக் கொடுந்தொழில் உடைய கூற்றுவன் உண்டிட, அத்தன்மையால் இறந்து நிலத்திடை வீழ்ந்தான். *** சாத்தனூர் - திருவாவடுதுறையின் தென்பால் 7 கிமீ. தொலைவில் உள்ளது. எனினும் இஃது ஊர்ப்பெயர் என்றும், ஆவடு துறை என்பது கோவில் பெயர் என்றும் இவ்வூர்க் கல்வெட்டால் அறிய இயலுகின்றது என டாக்டர். மா. இராசமாணிக்கனார் கூறுவர். இதற்கு ஏற்பச் சேந்தனார் திருவிசைப்பாவிலும் சாத்தனூரொடு ஆவடுதுறை யையும் இணைத்துக் கூறப் பெற்றுள்ளமையும் காணமுடிகின்றது. 'பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப் புகழாள ராயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர்'(தி. 9 ப. 6 பா. 1), 'சோதி மதிலணி சாந்தை மெய்ச் சுருதி விதிவழி யோர்தொழும், ஆதி யமரர் புராணன்' (தி. 9 ப. 6 பா. 2), 'மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும் முனிகோடி கோடியா மூர்த்தியும், அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர் அணிஆ வடுதுறை ஆடினாள்' (தி. 9 ப. 6 பா. 8) எனவரும் திருவாக்குகளைக் காண்க.
அவ்விடத்து இறந்து வீழ்ந்த மூலனின் உடம்பினை அப்பசுக் கூட்டங்கள் வந்து அணைந்து, சுற்றி, அன்பினால் மிகக் கதறுவனவாயும், உடலைச் சூழ்வனவாயும், மோந்தனவாயும் நிற்ப, அதனை நல்ல தவ முனிவரான யோகியார் கண்டு, 'பெருமானுடைய அருளாலே இப்பசுக்கள் உற்ற துயர்களாகிய இவை நீங்க நான் ஒழித்திடுவேன்' என்று எண்ணியவராய்,
குறிப்புரை:

'இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தால் அன்றி இப்பசுக்கள் தம் துயர் நீங்கி எழா' என்று, மூலனுடைய உடலில் தம் உயிரைச் சேர்ப்பிக்க அருள் கொண்ட சிவயோகியார், தம் உடல் தீங்குறாத வகையில் ஓரிடத்தில் காவல்செய்து வைத்துத், தாம் பழகியிருந்த யோக சாதனையின் வழியால் அம்மூலனுடைய உடலில் தமது உயிரைச் சேர்த்தினார். *** தாம் பயின்ற பவனவழி - தாம் பயிற்சி பெற்ற மூச்சுக் காற்றை அடக்கும்வழியில். 'காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக், கூற்றை உதைக்கும் குறியது வாமே' (தி. 10 பா. 559) என்றும், 'காயாதி பூதம் கலைகாலம் மாயையில், ஆயாதகல அறிவொன்றனாதியே, ஓயாப்பதியதன் உண்மையைக் கூடினால், வீயாப் பரகாயம் மேவலு மாமே' (தி. 10 பா. 628) என்றும் அவர்தாமே கூறுவாராதலின், இந்நிலை திருமூலருக்கு வாய்த்தது எளிதேயாம். 'நந்தியருளாலே மூலனை நாடினேன்'(தி. 10 பாயி. பா. 7), 'நந்தியருளாலே மூலனை நாடிப்பின், நந்தியருளாலே சதாசிவன் ஆயினேன்' (தி. 10 பாயி. பா. 29) என ஆசிரியர் திருமூலர் தாமே அருளும் திருவாக்குகளும் இதற்கு அகச்சான்றுகளாகின்றன.
தம் உயிரை மூலன் உடலில் பாய்ச்சிய பின்பு, சிவயோகியார் மூலனது உடலில் திருமூலராய் எழலும், பசுக்கள் எல்லாம் அதுகண்டு நாத்தழும்பேற அவரை நக்கி முகந்து, அணைந்து கனைப்பொடு நயந்து, வாய்க்கப்பெற்றெழுந்த மகிழ்ச்சியால் வால் எடுத்துத் துள்ளிப் பின் நீங்கிய துயருடையனவாகித் திரும்ப நிரையாகச் சென்று மேய்ந்தன.
குறிப்புரை:

பசுக்களின் கூட்டம் மகிழ்வுற்றது கண்டு அன்பு கூர்ந்த கருணை உடையவராய், அப்பசுக்கள் சென்று மேயும் இடத்துப் பின்னாகச் சென்று, மேய்ந்த அப்பசுக்கள் எல்லாம், காவிரியாற்றின் துறையில் சென்று தண்ணீர் விரும்பி உண்டு, களைப்புத் தீர்ந்து கரை ஏறிப் பின், மலர்கள் விரிந்த சோலையின் நிழலில் இனிதாகத் தங்கிடத், தாம் காவல் செய்தார்.
குறிப்புரை:

வெப்பமாய சுடருடைய கதிரவனும் மேற்குப் புறத்துள்ள மலையிடத்துச் சேர்தலும், அதுபொழுது சைவப்பெரு நெறியின் மெய்ம்மையை உணர்ந்த திருமூலநாயனாரும், அப்பசுக் கள் தாமாகவே முன் எழுந்து பையப் பைய நடப்பனவாகியும் கன்றை நினைந்து போவனவாகியும் இந்நிலவுலகில் விளங்கும் சாத்தனூரைப் போய்ச் சேர்ந்திடத் தாமும் அவற்றின் பின்னாகச் சென்றார்.
குறிப்புரை:

பின் சென்ற திருமூல நாயனார், பசுக்கள் எல்லாம் தத்தமது மனைகளிற் சேரும்வரை நிற்பப், பெருமையுடைய மூலன் மனைவியும், மூலன் வரக் காணாமையால், 'பொழுது போன பின்பும் தன் கணவர் வரத் தாழ்த்தாரே' என்று மனத்திலான அச்சத்துடன் தேடிச் சென்று, திருவருட் சிந்தனையுடன் நிற்கும் அவரைக் கண்டாள்; கண்டதும், அவர் தன்மை உணராத அவள், 'இவருக்கு நேர்ந்த தென்ன?' என்று அவர் திருமேனியைத் தீண்ட முற்படுதலும், அவர் அதற்கு இசையாரானார்.
குறிப்புரை:

பிள்ளைகளுடன் நெருங்கிய சுற்றத்தவருமில்லாத வளாய அவ்விடத்து நின்ற மூலன் மனைவியும், அவர் நிலை கண்டு அஞ்சியவளாக மிக மயங்கி, 'என்ன செய்தீர்?' என்று உண்மை யறியாது தளர்ந்திடலும், அதுபொழுது திருமூலரும் அவளை நோக்கி, 'ஈங்கு உனக்கு என்னுடன் சேர்தற்குரிய தொடர்பு ஒன்றுமில்லை' என்று மறுத்துப், பெருகும் தவமுடைய அவர், அங்குள்ள அவ்வூர்ப் பொதுமடத்தின் உள்ளே சென்று சேர்ந்தார்.
குறிப்புரை:

தனது கணவனின் மனநிலை இவ்வாறு வேறானமை கண்டு எவ்வளவோ அவருடன் உரையாட முயன்றும், ஒரு வார்த்தை யும் பேசாதிருக்கும் நிலை கண்டு, அவருடன் அணையாது, துயிலும் கொள்ளாதிருந்த அவள், மறுநாள் காலை அவ்வூரிலுள்ள நன்மக்கள் பலர் முன்னிலையில், அவருக்கு நேர்ந்த மனமாற்றத்தை எடுத்துச் சொல்ல, அது கேட்ட பெரியோர் வந்து, அவர் தன்மையை ஆய்ந்து, அவளுக்குச் சொல்வாராய்,
குறிப்புரை:

'பெண்ணே! நீ நினைந்தவாறு இவர் பித்துடைய ரல்லர்; பேய் முதலியவற்றால் மனமாற்றம் அடைந்தாரும் அல்லர்' பொருள் அல்லவற்றைப் பொருளாகக் கருதும் மன வேறுபாடுகளி னின்றும் நீங்கித் தெளிந்த மனநிலை யுடையவராய், இறைவன் மீது கொண்ட பேரன்பினால் அப்பெருமானிடம் ஒன்றுபட்ட உள்ளத்தால் மீதூர்ந்த பெருமை யுடையவராயுள்ளார். இச்சிவயோக நிலையின் தன்மை, யாராலும் அளத்தற்கரிதாகும் என்று அவளிடம் கூறுவாராகி,
குறிப்புரை:

'இருவகைப் பற்றுக்களையும் நீக்கிய மேலான உபதேசத்தினால் ஈசன் திருவடிகளைப் பெற்றிருப்பவராகிய ஞானிகளைப் போன்று, அவர் முழுவதும் உணர்ந்த முனிவரா யுள்ளார், முன்னை நிலைமையில் உங்களது சுற்றத்தொடர்பிற்கு உரியவர் ஆகார்' என்று அவர்கள் எடுத்துக் கூறிட, அதுகேட்டுப் பெருந் துயரடைந்த மூலன் மனைவியும் மயங்கிச்சோர, அருகில் உள்ளார் அவளைக் கொண்டு அவ்விடம் நீங்கிப் போயினார்கள். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
இந்த நிலைமையில் சாத்தனூர்ப் பொதுமடத்தில் இருந்த திருமூலர், எழுந்திருந்து, அங்குப் பசு நிரைகள் வந்தவழியே திரும்பிச் சென்று, தாம் காவலாக வைத்த முன்னைய உடலைத் தேடிப் பார்த்தபோது, அவ்வுடற் பொறையைக் காணாராகி, எல்லாம் உணர்ந்த மெய்ஞ்ஞானமாய் நிற்கும் தம் சிந்தையில், அச்செயலை ஆராய்ந்து தெளிவாராய்,
குறிப்புரை:

குளிர்ந்த நிலவணிந்த திருச்சடையையுடைய சிவபெருமான், தாம் தந்தருளிய ஆகமப் பொருளை இந்நிலவுலகில் திருமூலர் வாக்கால் தமிழால் சொல்லுதற்கு ஏற்ப, ஒப்பற்ற கருணை யால், சிவயோகியாராக இருந்தார்தம்உடலை மறைப்பிக்க, பேரறிவு உடையராய திருமூலர், அது 'ஈசர் அருளாகும்' என உணர்ந்தார். *** 'சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே' (தி. 10 பா. 12)
'சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே' (தி. 10 பா. 16)
'என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' (தி. 10 பா. 20)
என அவரே திருமந்திரத்தில் அருளிய திருவாக்குகளையும் காண்க.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஈசர் அருளென உணர்ந்த திருமூலர், தமக்கு அருகே, உடல் அளவில் முன் தொடர்புடைய இடையர் குலத்துள்ளார் சூழ்ந்து நிற்ப, தம்முடன் அவர்களுக்கு எத்தொடர்பும் இல்லை யென்ற தன்மையை முழுமையாகக் கூறினாராக, கேட்ட அவர்களும் அங்கிருந்து போனபின்பு, ஆனேற்றைக் கொடியாகக் கொண்ட பெருமானின் திருவடிகளைச் சிந்தித்து, அதனால், பெருகிய காமம் வெகுளி மயக்கம் முதலாய குற்றங்களை அறவே நீக்கி, திருஆவடு தண்டுறை என்னும் திருக்கோயிலை அடைந்தார்.
குறிப்புரை:

திருஆவடுதண்டுறை என்னும் கோயிலை அடைந்து, அங்கு அரும்பொருளாய் உள்ள சிவபெருமானைச் சிந்தையுற வணங்கி, அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் அக்கோயி லின் புறத்தே மேற்குத் திசையில் நின்ற மிக உயர்ந்த அரசமரத்தின்கீழ்த் தெய்வத்தன்மை மேவுதற்கு ஏதுவாய யோகாசனத்தில் வீற்றிருந் தருளிச் சிவயோகந் தலைநின்று, பூப்போல மலரும் தமது இதயத் துள்ள அரும்பொருளாய சிவத்துடன் ஒன்றி இருந்தார். *** 'சிவன் ஆவடுதண்டுறை சீருடையான் பதம் சேர்ந்
அங்கிருந்து ஊன் பொருந்திய உடம்பினை எடுத்துவரும் பிறவி என்னும் தீயவிடத்தினின்றும் நீங்கி, உலகவர் உய்ந்திட, ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கும் மலர்கின்ற நல்ல திருமந்திர மாலையைப் பெருமானுக்குப் பாடி அணிகின்ற அத்தொண்டில், ஆண்டிற்கு ஒரு பாடலாகப் பன்றியின் கொம்பணிந்த பரம்பொருளாகிய சிவபெருமானை, 'ஒன்றவன் தானே' எனப் பாட எடுத்து, *** 'ஒன்றவன் தானே எடுத்து' என்பதால் இதுவே திருமந் திரத்தின் முதற் பாடலாகும். 'ஐந்துகரத்தனை' எனத் தொடங்கும் மூத்த பிள்ளையாரின் வணக்கப் பாடல் ஆசிரியரின் திருவாக்கன்று என்பது விளங்கும்.
பாடிய அப்பாமாலையில், தாம் நினைந்தருளிய ஞானம் முதலாகவுள்ள நான்கு பொருளும் சிறக்குமாறு, தமிழால் மூவாயிரம் பாடல்கொண்ட அம்மாலையைச் சாத்தி, விளங்கிய மூவாயிரம் ஆண்டுகள் இந்நிலவுலகில் வாழ்ந்து மகிழ்ந்திருந்து, அதன்பின் திருச்சடையின்மீது பிறையையணிந்த பெருமானின் திருவருளால், திருக்கயிலாய மலையினிடத்துச் சென்று, ஒருகாலும் பெருமானைப் பிரியாதிருக்கும் பேரின்பமாம் திருவடி நீழலைச் சார்ந்தார். *** பாடிய அப்பாமாலையில், தாம் நினைந்தருளிய ஞானம் முதலாகவுள்ள நான்கு பொருளும் சிறக்குமாறு, தமிழால் மூவாயிரம் பாடல்கொண்ட அம்மாலையைச் சாத்தி, விளங்கிய மூவாயிரம் ஆண்டுகள் இந்நிலவுலகில் வாழ்ந்து மகிழ்ந்திருந்து, அதன்பின் திருச்சடையின்மீது பிறையையணிந்த பெருமானின் திருவருளால், திருக்கயிலாய மலையினிடத்துச் சென்று, ஒருகாலும் பெருமானைப் பிரியாதிருக்கும் பேரின்பமாம் திருவடி நீழலைச் சார்ந்தார்.
நலம் சிறந்த ஞான, யோக, கிரியை, சரியை ஆகிய நெறிகள் எல்லாம் மலர்ந்த திருவாய் மொழியை அருளிய திருமூல தேவ நாயனாரின் மலரனைய திருவடிகளை வணங்கி, உலகெங்கும் பரவ விளங்கிய புகழுடைய திருவாரூரில் சமணர்கள் கலங்குமாறு செய்த இந்நிலவுலகில் என்றும் சிறந்த வலிமையுடைய தண்டி யடிகளின் அடிமைத் திறத்தைச் சொல்லுவாம். திருமூலதேவ நாயனார் புராணம் முற்றிற்று. ***

This page was last modified on Thu, 22 Feb 2024 12:04:34 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

naayanmaar history