சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இடரினும், தளரினும், எனது உறு
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=HR13vYitroI
Audio: https://sivaya.org/audio/3.004 idarinum thalarinum.mp3
4.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=61iq2NzFuUI
4.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்
பண் - கொல்லி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_3VaGscvF20
5.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   நிறைக்க வாலியள் அல்லள், இந்
பண் - திருக்குறுந்தொகை   (திருவாவடுதுறை )
Audio: https://www.youtube.com/watch?v=9IAdluR7a9Y
6.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
பண் - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=aONsKzVnCNw
6.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவே, என் செல்வமே, தேனே,
பண் - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BNhQkPjS49Q
7.066   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மறையவன்(ன்) ஒரு மாணி வந்து
பண் - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=C495G4myBeQ
7.070   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
பண் - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=7lQUDNu7Qb0
9.006   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவாவடுதுறை
பண் -   (திருவாவடுதுறை )

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.004   இடரினும், தளரினும், எனது உறு  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் இடரினும் தளரினும் என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார் எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார்.
பொருளாதார நிலை சீர் பெருவதற்க்கும் , வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[1]
வாழினும், சாவினும், வருந்தினும், போய்
வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்;
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[2]
நனவினும், கனவினும், நம்பா! உன்னை,
மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்!
புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்த,
கனல் எரி-அனல் புல்கு கையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[3]
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,
அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா;
கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[4]
கையது வீழினும், கழிவு உறினும்,
செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;-
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[5]
வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும்,
எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[6]
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,
அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[7]
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்,
சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்;
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[8]
உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா;
கண்ணனும், கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[9]
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்,
அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா;
புத்தரும் சமணரும் புறன் உரைக்க,
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[10]
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை,
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்
நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.056   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்;
பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்;
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்-
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[1]
மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர் போலும்;
குடந்தையில் குழகர் போலும்; கொல் புலித் தோலர் போலும்;
கடைந்த நஞ்சு உண்பர் போலும்; காலனைக் காய்வர் போலும்;
அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[2]
உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு துணை ஆவர் போலும்;
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழச் செறுவர் போலும்;
கற்றவர் பரவி ஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[3]
மழு அமர் கையர் போலும்; மாது அவள் பாகர் போலும்;
எழு நுனை வேலர் போலும்; என்பு கொண்டு அணிவர் போலும்;
தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம்பலவும் சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[4]
பொடி அணி மெய்யர் போலும்; பொங்கு வெண் நூலர் போலும்;
கடியது ஓர் விடையர் போலும்; காமனைக் காய்வர் போலும்;
வெடி படுதலையர் போலும்; வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை அளப்பர்போலும் ஆவடுதுறையனாரே.

[5]
வக்கரன் உயிரை வவ்வக் கண் மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்; தானவர் தலைவர் போலும்;
துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்;
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[6]
விடை தரு கொடியர் போலும்; வெண் புரி நூலர் போலும்;
படை தரு மழுவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
உடை தரு கீளர் போலும்; உலகமும் ஆவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.

[7]
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த;
நந்தி, மாகாளர் என்பார், நடு உடையார்கள் நிற்ப;
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே.

[8]
பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும்,
தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்,
தீனரைத் தியக்கு அறுத்த திரு உரு உடையர் போலும்;
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே.

[9]
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்;
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்;
கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.057   மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்)
அஞ்சல்! என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!

[1]
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார்
தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன், நான்;
ஆன் உகந்து ஏறுவானே! ஆவடுதுறை உளானே!

[2]
கட்டமே வினைகள் ஆன காத்து, இவை நோக்கி, ஆள் ஆய்
ஒட்டவே ஒட்டி, நாளும் உன்னை உள் வைக்க மாட்டேன்-
பட்ட வான் தலை கை ஏந்திப் பலி திரிந்து ஊர்கள் தோறும்
அட்டமா உருவினானே! ஆவடுதுறை உளானே!

[3]
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேச மாட்டேன்;
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்;
கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்;
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!

[4]
துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை அகப்பட்டேனைக்
கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்துக் கொள்வாய்
மட்டு அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்து(வ்)
அட்டமா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே!

[5]
கார் அழல் கண்டம் மேயாய்; கடி மதில் புரங்கள் மூன்றும்
ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி
நீர் அழல் சடை உளானே! நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே!

[6]
செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்;
குறி இலேன்; குணம் ஒன்று இல்லேன்; கூறுமா கூற மாட்டேன்;
நெறி படு மதி ஒன்று இல்லேன்; நினையுமா நினைய மாட்டேன்;
அறிவு இலேன்; அயர்த்துப் போனேன்-ஆவடுதுறை உளானே!

[7]
கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய
சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!

[8]
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட,
கடியது ஓர் உருவம் ஆகி, கனல்-எரி ஆகி, நின்ற
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார்
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே.

[9]
மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத்
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்)
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.029   நிறைக்க வாலியள் அல்லள், இந்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;
மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-
பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.

[1]
தவளமாமதிச் சாயல் ஓர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன், எம் இறை,
அளவு கண்டிலள்; ஆவடுதண்துறைக்
களவு கண்டனள் ஒத்தனள்-கன்னியே.

[2]
பாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை
ஓதி; என் உளம் கொண்டவன்; ஒண் பொருள்
ஆதி-ஆவடுதண்துறை மேவிய
சோதியே! சுடரே! என்று சொல்லுமே.

[3]
கார்க் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்;
வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து, இவள்
ஆர்க் கொள் கொன்றையன்; ஆவடுதண்துறைத்
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே!

[4]
கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன்,
பருகு பால் அமுதே எனும் பண்பினன்,
அருகு சென்று இவள், ஆவடுதண்துறை
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே.

[5]
குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும்,
தழலும், தையல் ஓர்பாகமாத் தாங்கினான்;
அழகன்; ஆவடுதண்துறையா! எனக்
கழலும், கைவளை காரிகையாளுக்கே.

[6]
பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத்
தஞ்சம் என்று இறுமாந்து, இவள் ஆரையும்
அஞ்சுவாள் அல்லள்; ஆவடுதண்துறை
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே!

[7]
பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என்
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்;
அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை
இறைவநென்னை உடையவன் என்னுமே.

[8]
வையம் தான் அளந்தானும் அயனும் ஆய்
மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்;
ஐயன்; ஆவடுதண்துறையா! என,
கையில் வெள்வளையும் கழல்கின்றதே.

[9]
பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்;
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்;
அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை
நக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.046   நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை,   நன்மை தன்னை,
கம்பனை, கல்லால் இருந்தான் தன்னை, கற்பகம் ஆய் அடியார்கட்கு அருள் செய்வானை,
செம்பொன்னை, பவளத்தை, திரளும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீயை, நீரை,
அம்பொன்னை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[1]
மின்னானை, மின் இடைச் சேர் உருமினானை, வெண்முகில ஆய் எழுந்து மழை பொழிவான் தன்னை,
தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தாய் ஆகிப் பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி
என்னானை, எந்தை பெருமான் தன்னை, இரு நிலமும் அண்டமும் ஆய்ச் செக்கர்வானே
அன்னானை, ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!

[2]
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை, பவளக்கொழுந்தினை, மாணிக்கத்தின்
தொத்தினை, தூ நெறி ஆய் நின்றான் தன்னை, சொல்லுவார் சொல் பொருளின் தோற்றம் ஆகி
வித்தினை, முளைக் கிளையை, வேரை, சீரை, வினை வயத்தின் தன்சார்பை, வெய்ய தீர்க்கும்
அத்தனை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[3]
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை, பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அக் கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச் சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[4]
ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை, உதயத்தின்   உச்சியை, உரும் ஆனானை,
பருமணியை, பாலோடு அஞ்சு ஆடினானை, பவித்திரனை, பசுபதியை, பவளக்குன்றை,
திருமணியை, தித்திப்பை, தேன் அது ஆகி, தீம்கரும்பின் இன்சுவையை, திகழும் சோதி
அருமணியை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[5]
ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில் நடம் ஆட வல்லான் தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான் தன்னை, குரை கடல்வாய் நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
நீற்றானை, நீள் அரவு ஒன்று ஆர்த்தான் தன்னை, நீண்ட சடைமுடிமேல் நீர் ஆர் கங்கை
ஆற்றானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[6]
கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை, கடல் வரை வான் ஆகாசம் ஆனான் தன்னை,
செம் மானப் பவளத்தை, திகழும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீ ஆனானை,
எம்மானை, என் மனமே கோயில் ஆக இருந்தானை, என்பு உருகும் அடியார் தங்கள்
அம்மானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே   அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[7]
மெய்யானை, பொய்யரொடு விரவாதானை, வெள்ளடையை, தண்நிழலை, வெந்தீ ஏந்தும்
கையானை, காமன் உடல் வேவக் காய்ந்த கண்ணானை, கண்மூன்று உடையான் தன்னை,
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை, பாய் புலித்தோல் உடையான் தன்னை,
ஐயானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[8]
வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை, விசயனை முன் அசைவித்த வேடன் தன்னை,
தூண்டாமைச் சுடர் விடு நல் சோதி தன்னை, சூலப்படையானை, காலன் வாழ்நாள்
மாண்டு ஓட உதை செய்த மைந்தன் தன்னை, மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும்
ஆண்டானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே   அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[9]
பந்து அணவு மெல்விரலாள் பாகன் தன்னை, பாடலோடு ஆடல் பயின்றான் தன்னை,
கொந்து அணவு நறுங்கொன்றை மாலையானை, கோல மா நீலமிடற்றான் தன்னை,
செந்தமிழோடு ஆரியனை, சீரியானை, திரு மார்பில் புரி வெண்நூல் திகழப் பூண்ட
அந்தணனை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[10]
தரித்தானை, தண்கடல் நஞ்சு, உண்டான் தன்னை; தக்கன் தன் பெரு வேள்வி தகர்த்தான் தன்னை;
பிரித்தானை; பிறை தவழ் செஞ்சடையினானை; பெரு வலியால் மலை எடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை; நேரிழையாள் பாகத்தானை; நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர
அரித்தானை; ஆவடு தண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.047   திருவே, என் செல்வமே, தேனே,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே, செழுஞ்சுடர் நல் சோதி மிக்க
உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற
கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே, மணி ஆடு பாவாய், காவாய்,
அருஆய வல்வினைநோய் அடையா வண்ணம்! ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[1]
மாற்றேன், எழுத்து அஞ்சும் என்தன் நாவில்; மறவேன், திருவருள்கள்; வஞ்சம் நெஞ்சின்
ஏற்றேன்; பிற தெய்வம் எண்ணா நாயேன், எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்;
மேல்-தான் நீ செய்வனகள் செய்யக் கண்டு, வேதனைக்கே இடம் கொடுத்து, நாளும் நாளும்
ஆற்றேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[2]
வரை ஆர் மடமங்கை பங்கா! கங்கை-மணவாளா! வார்சடையாய்! நின்தன் நாமம்
உரையா, உயிர் போகப் பெறுவேன் ஆகில், உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே?
கரையா, நினைந்து, உருகி, கண்ணீர் மல்கி, காதலித்து, நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு
அரையா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[3]
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கிக்
கலித்து ஆங்கு இரும்பிடிமேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா! எங்கள் கோவே!
நிலத்தார் அவர் தமக்கே பொறை ஆய், நாளும், நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான்
அலுத்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[4]
நறுமாமலர் கொய்து, நீரில் மூழ்கி, நாள்தோறும் நின் கழலே ஏத்தி, வாழ்த்தி,
துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே?
உறவு ஆகி, வானவர்கள் முற்றும் வேண்ட, ஒலிதிரை நீர்க்கடல் நஞ்சு உண்டு, உய்யக்கொண்ட
அறவா! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[5]
கோன் நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு, கொழு மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்தி,
கான் ஆர் களிற்று உரிவைப் போர்வை மூடி, கங்காளவேடராய் எங்கும் செல்வீர்;
நான் ஆர், உமக்கு, ஓர் வினைக்கேட(ன்)னேன்?   நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே
ஆனாய்! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[6]
உழை உரித்த மான் உரி-தோல் ஆடையானே! உமையவள் தம் பெருமானே! இமையோர் ஏறே!
கழை இறுத்த, கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா! கயிலாயமலையானே! உன்பால் அன்பர்
பிழை பொறுத்தி! என்பதுவும், பெரியோய்! நின்தன் கடன் அன்றே? பேர் அருள் உன்பாலது அன்றே?
அழை உறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[7]
உலந்தார் தலைகலன் ஒன்று ஏத்தி, வானோர் உலகம் பலி திரிவாய்! உன்பால் அன்பு
கலந்தார் மனம் கவரும் காதலானே! கனல் ஆடும்   கையவனே! ஐயா! மெய்யே
மலம் தாங்கு உயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்து, அழுந்தி, நாளும் நாளும்
அலந்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[8]
பல் ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்தி, பசு ஏறி, ஊர் ஊரன் பலி கொள்வானே!
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர்; கருதீர் ஆகில்,
எல்லாரும் என் தன்னை இகழ்வர் போலும்; ஏழை அமண்குண்டர், சாக்கியர்கள், ஒன்றுக்கு
அல்லாதார் திறத்து ஒழிந்தேன்; அஞ்சேல்! என்னாய்   ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[9]
துறந்தார் தம் தூ நெறிக்கண் சென்றேன் அல்லேன்; துணைமாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்;
பிறந்தேன் நின் திரு அருளே பேசின் அல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே;
செறிந்து ஆர் மதில் இலங்கைக் கோமான்தன்னைச்
 செறு வரைக்கீழ் அடர்த்து, அருளிச் செய்கை எல்லாம்
அறிந்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.066   மறையவன்(ன்) ஒரு மாணி வந்து  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய, வாரம் ஆய், அவன் ஆர் உயிர் நிறுத்தக்
கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டு கண்டு, அடியேன்,
இறைவன், எம்பெருமான் என்று எப்போதும் ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன்
அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

[1]
தெருண்ட வாய் இடை நூல் கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென இயற்ற,
சுருண்ட செஞ்சடையாய்! அது தன்னைச் சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு, அடியேன்,
புரண்டு வீழ்ந்து நின் பொன்மலர்ப் பாதம், போற்றி போற்றி! என்று அன்பொடு புலம்பி,
அருண்டு, என் மேல்வினைக்கு அஞ்சி, வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

[2]
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய,
புகழினால் அவன் கண் இடந்து இடலும், புரிந்து, சக்கரம் கொடுத்தல் கண்டு, அடியேன்,
திகழும் நின் திருப்பாதங்கள் பரவி, தேவதேவ! நின் திறம்பல் பிதற்றி,
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே!.

[3]
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி, விசைத்து, ஒர் கேழலைத் துரந்து, சென்று, அணைந்து,
போரைத் தான் விசயன் தனக்கு அன்பு ஆய்ப் புரிந்து, வான் படை கொடுத்தல் கண்டு, அடியேன்,
வாரத்தால் உன நாமங்கள் பரவி, வழிபட்டு, உன் திறமே நினைந்து, உருகி,
ஆர்வத்தோடும் வந்து, அடி இணை அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

[4]
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ, உன்னை உன்னிய மூவர் நின் சரணம்
புக்கு, மற்றவர் பொன்னுலகு ஆளப் புகழினால் அருள் ஈந்தமை அறிந்து,
மிக்க நின் கழலே தொழுது, அரற்றி, வேதியா! ஆதி மூர்த்தி! நின் அரையில்
அக்கு அணிந்த எம்மான்! உனை அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே!.

[5]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.070   கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே!
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா!
செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள்
அங்கணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[1]
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே!
கண் இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் கருத்து அழிந்து, உனக்கே பொறை ஆனேன்;
தெண் நிலா எறிக்கும் சடையானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
அண்ணலே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[2]
ஒப்பு இலாமுலையாள் ஒருபாகா! உத்தமா! மத்தம் ஆர் தரு சடையாய்!
முப்புரங்களைத் தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே!
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே! திரு ஆவடுதுறையுள்
அப்பனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[3]
கொதியினால் வரு காளி தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே!
மதி இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் மயங்கினேன்; மணியே! மணவாளா!
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே! திரு ஆவடுதுறையுள்
அதிபனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[4]
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய்! வழி முதலே!
வெந்த வெண் பொடிப் பூச வல்லானே! வேடனாய் விசயற்கு அருள் புரிந்த
இந்துசேகரனே! இமையோர் சீர் ஈசனே! திரு ஆவடுதுறையுள்
அந்தணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[5]
குறைவு இலா நிறைவே! குணக்குன்றே! கூத்தனே! குழைக் காது உடையானே!
உறவு இலேன், உனை அன்றி; மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே?
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர்ச் செம்பொனே! திரு ஆவடுதுறையுள்
அறவனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[6]
வெய்ய மா கரி ஈர் உரியானே! வேங்கை ஆடையினாய்! விதி முதலே!
மெய்யனே! அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட, நீ கொடுத்து அருள்புரி விகிர்தா!
செய்ய மேனியனே! திகழ் ஒளியே! செங்கணா! திரு ஆவடுதுறையுள்
ஐயனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[7]
கோது இலா அமுதே! அருள் பெருகு கோலமே! இமையோர் தொழு கோவே!
பாதி மாது ஒருகூறு உடையானே! பசுபதீ! பரமா! பரமேட்டீ!
தீது இலா மலையே! திரு அருள் சேர் சேவகா! திரு ஆவடுதுறையுள்
ஆதியே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[8]
வான நாடனே! வழித் துணை மருந்தே! மாசு இலா மணியே! மறைப்பொருளே!
ஏன மா எயிறு, ஆமையும், எலும்பும், ஈடு தாங்கிய மார்பு உடையானே!
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
ஆனையே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

[9]
வெண்தலை, பிறை, கொன்றையும், அரவும், வேரி மத்தமும், விரவி முன் முடித்த
இண்டை மா மலர்ச் செஞ்சடையானை; ஈசனை; திரு ஆவடுதுறையுள்
அண்டவாணனை; சிங்கடி அப்பன்-அணுக்க வன் தொண்டன்-ஆர்வத்தால் உரைத்த
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும்(ம்) அறுப்பாரே.

[10]

Back to Top
சேந்தனார்   திருவிசைப்பா  
9.006   சேந்தனார் - திருவாவடுதுறை  
பண் -   (திருத்தலம் திருவாவடுதுறை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
   புகழாள ராயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
   மிகுகா விரிக்கரை மேய
ஐயா திருவா வடுதுறை
   யமுதேயென் றுன்னை யழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கொன்
   றருளா தொழிவது மாதிமையே.

[1]
மாதி மணங்கம ழும்பொழில்
   மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
   சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
   அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள் பொன்னெடுந்
   திண்டோள் புணர நினைக்குமே. 

[2]
நினைக்கும் நிரந்தர னேயென்னும்
   நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
   நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
   மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
   தருணேந்து சேகரன் என்னுமே. 

[3]
தருணேந்து சேகர னேயெனுந்
   தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப்
   புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள்
அருணேர்ந் தமர்திரு வாவடு
   துறையாண்ட ஆண்டகை யம்மானே
தெருணேர்ந்த சித்தம் வலியவா
   திலக நுதலி திறத்திலே.

[4]
திலக நுதல்உமை நங்கைக்கும்
   திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க் கென்னையாட்
   கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன் றறிகின்றி லேமெனும்
   அணியும்வெண் ணீறஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற் கென்செய்கேன்
   வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே. 

[5]
வேந்தன் வளைத்தது மேருவில்
   அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
   பொடியாட வேதப்புர வித்தேர்ச்
சாந்தை முதல்அயன் சாரதி
   கதிஅருள் என்னுமித் தையலை
ஆந்தண் திருவா வடுதுறை
   யான்செய்கை யார்அறி கிற்பரே.

[6]
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்
   கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்
   என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி
கற்போல் மனங்கனி வித்தஎம்
   கருணால யாவந்தி டாய்என்றாற்
பெற்போ பெருந்திரு வாவடு
   துறையாளி பேசா தொழிவதே. 

[7]
ஒழிவொன்றி லாஉண்மை வண்ணமும்
   உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
   முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
   அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை யெய்திநின்
   றிறுமாக்கும் என்னிள மானனே. 

[8]
மானேர் கலைவளை யுங்கவர்ந்
   துளங்கொள்ளை கொள்ள வழக்குண்டே
தேனே அமுதேஎன் சித்தமே
   சிவலோக நாயகச் செல்வமே
ஆனேஅ லம்பு புனற்பொன்னி
   அணிஆ வடுதுறை அன்பர்தம்
கோனேநின் மெய்யடி யார்மனக்
   கருத்தை முடித்திடுங் குன்றமே. 

[9]
குன்றேந்தி கோகன கத்தயன்
   அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கிஅ ழைக்கின்றாள்
   இளவல்லி எல்லைக டந்தனள்
அன்றேஅ லம்பு புனற்பொன்னி
   அணிஆ வடுதுறை யாடினாள்
நன்றே யிவள்நம் பரமல்லள்
   நவலோக நாயகன் பாலளே. 

[10]
பாலும் அமுதமும் தேனுமாய்
   ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
   புரகால காம புராந்தகன்
சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த்
   திருவா வடுதுறை வேந்தனோ
டாலு மதற்கே முதலுமாம்
   அறிந்தோம் அரிவைபொய் யாததே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list