சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
512   சிதம்பரம் திருப்புகழ் ( - வாரியார் # 615 )  

மருவு கடல்முகில்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தனதான.

மருவு கடல்முகி லனைய குழல்மதி
   வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி
      மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி
         ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி
குமுத மலரித ழமுத மொழிநிரை
   தரள மெனுநகை மிடறு கமுகென
      வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ
         டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநக
   மெனவு மிகலிய குவடு மிணையென
      வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம்
         வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் ...... முலைமேவும்
வடமு நிரைநிரை தரள பவளமொ
   டசைய பழுமர இலைவ யிறுமயி
      ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும்
         அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி
மதன னுருதுடி யிடையு மினலென
   அரிய கடிதட மமிர்த கழைரச
      மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி
         துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை
மருவு தொடையிணை கதலி பரடுகொள்
   கணையு முழவென கமட மெழுதிய
      வட்டப் புத்தக மொத்துப் பொற்சர
         ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே
தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்
   மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு
      தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள்
         பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர்
திலத மழிபட விழிகள் சுழலிட
   மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட
      தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு
         கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட
திரையி லமுதென கழையில் ரசமென
   பலவில் சுளையென வுருக வுயர்மயல்
      சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும்
         வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென ...... நரைமேவிச்
செவியொ டொளிர்விழி மறைய மலசல
   மொழுக பலவுரை குழற தடிகொடு
      தெத்திப் பித்தமு முற்றித் தற்செய
         லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட
சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி
   லுவரி நிறமுடை நமனு முயிர்கொள
      செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய
         ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனன மிதுவென அழுது முகமிசை
   அறைய அணைபவ ரெடென சுடலையில்
      சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி
         நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட ...... முழல்வேனோ
குருவி னுருவென அருள்செய் துறையினில்
   குதிரை கொளவரு நிறைத வசிதலை
      கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத
         மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு
முதல்வ ரிளகலை மதிய மடைசடை
   அருண வுழைமழு மருவு திருபுயர்
      கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ
         விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத
குமர னெனவிரு தொலியு முரசொடு
   வளையு மெழுகட லதிர முழவொடு
      கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட
         லொப்பத் திக்கும டுத்துத் தத்திட ...... அமர்மேவிக்
குருகு கொடிசிலை குடைகள் மிடைபட
   மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட
      கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி
         எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்
குமர குருபர குமர குருபர
   குமர குருபர எனவொ தமரர்கள்
      கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர
         ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட
குலவு நரிசிறை கழுகு கொடிபல
   கருட னடமிட குருதி பருகிட
      கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக
         னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு ...... மயில்வீரா
சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு
   பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு
      சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர
         வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன்
அரிய விழிகெட இருப தமுமுல
   கடைய நெடியவர் திருவு மழகியர்
      தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின
         முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர
செயமு மனவலி சிலைகை கொடுகர
   மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ
      திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு
         பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர ...... மருகோனே
திலத மதிமுக அழகி மரகத
   வடிவி பரிபுர நடனி மலர்பத
      சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன
         முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர
சிவைகொள் திருசர சுவதி வெகுவித
   சொருபி முதுவிய கிழவி யியல்கொடு
      செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ
         சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையி லமுதென மொழிசெய் கவுரியி
   னரிய மகனென புகழ்பு லிநகரில்
      செப்புப் பொற்றன முற்றப் பொற்குற
         தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய ...... பெருமாளே.
Easy Version:
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன(ம்) நுதல் சிலை
பிறை அது எ(ண்)ணும் விழி மச்ச(ம்) பொன் கணை
முக்குப் பொன் குமிழ் ஒப்பக் கத்தரி ஒத்திட்டச் செவி குமுத
மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு
கமுகு என வைத்துப் பொன் புய(ம்)
பச்சைத் தட்டையொடு ஒப்பிட்டுக் கமலக் கைப் பொன் துகிர்
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும்
இகலிய குவடும் இணை என வட்டத் துத்தி முகிழ்ப்பச்
சக்கிரம் வைத்துப் பொன் குடம் ஒத்திட்டுத் திகழ் முலை
மேவும் வடமு(ம்) நிரை நிரை தரளம் பவளம் ஒடு அசைய
பழு மர இலை வயிறு மயிர் அற்பத்திக்கு இணை பொற்புத்
தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்துப் பொன் கொடி மதனன்
உரு துடி இடையும் மி(ன்)னல் என
அரிய கடி தடம் அமிர்த கழை ரசம் மட்டுப் பொன் கமலத்தில்
சக்கிரி துத்திப் பைக்கு ஒருமித்து
பட்டு உடை மருவு தொடை இணை கதலி பரடு கொள்
கணையும் முழவு என கமடம் எழுதிய வட்டப் புத்தகம் ஒத்துப்
பொன் சரணத்தில் பின் புறம் மெத்துத் தத்தைகள் மயில்
போலே
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர் மயல்
கொண்டு அணைவர மருள் செய்தொழில் கொ(ண்)டு
தெட்டிப் பற்பல சொக்கு இட்டுப் பொருள் பற்றிக் கட்டில்
அணைக்க ஒப்பிப் புணர்
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல்
இடை கொள் துகில் பட தித்தித் துப்பு இதழ் வைத்துக் கை
கொ(ண்)டு கட்டிக் குத்து முலைக்குள் கைப் பட
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என
உருக உயர் மயல் சிக்குப் பட்டு உடல் கெட்டுச் சித்தமும்
வெட்கித் துக்கமும் உற்று
கொக்கு என நரை மேவிச் செவியொடு ஒளிர் விழி மறைய
மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொ(ண்)டு தெத்திப்
பித்தமும் முற்றித் தன் செயல் அற்றுச் சிச்சிஎனத் துக்கப்பட
சிலர்கள் முது உடல் வினவு பொழுதினில் உவரி நிறம் உடை
நமனும் உயிர் கொள செப்பு அற்றுப் பிணம் ஒப்பித்துப் பெயர்
இட்டு
பொன் பறை கொட்டச் செப்பிடு செனனம் இது என அழுது
முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் சில்
திக்குக்கு இரை இட்டிட்டு இப்படி நித்தத் துக்கம்
எடுத்திட்டுச் சடம் உழல்வேனோ
குருவின் உரு என அருள் செய் துறையினில் குதிரை கொள
வரு நிறை தவசி தலை கொற்றப் பொன் பதம் வைத்திட்டு
அற்புதம் எற்றிப் பொன் பொருள் இட்டுக் கைகொ(ள்)ளும்
முதல்வர்
இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு
புயர் கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டு எழ விட்டத் திக்கு
அணை நக்கர்க்கு அற்புத குமரன் என
விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர
முழவொடு கொட்டத் துட்டரை வெட்டித் தண் கடல் ஒப்பத்
திக்கும் மடுத்துத் தத்திட அமர் மேவி
குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட
உடுகள் உதிரிட கொத்திச் சக்கிரி பற்றப் பொன் பரி எட்டுத்
திக்கும் எடுத்திட்டுக் குரல்
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள்
கொட்பப் புட்பம் இறைத்துப் பொன் சரணத்தில் கைச் சிரம்
வைத்துக் குப்பிட
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி
பருகிட கொற்றப் பத்திரம் இட்டுப் பொன் ககனத்தைச்
சித்தம் இரக்ஷித்துக் கொ(ள்)ளும் மயில் வீரா
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர்
கொ(ண்)டு அரி என நடமிடு சிற்பர்
திண் பதம் வைத்துச் சக்கிரவர்த்திக்குச் சிறை இட்டுச்
சுக்கிரன் அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய
நெடியவர் திருவும் அழகியர்
தெற்குத் திக்கில் அரக்கர்க்குச் சினம் உற்றுப் பொன்
தசர்தற்குப் புத்திர செயமும் மன வலி சிலை கை கொ(ண்)டு
கரம் இரு பது உடை கிரி சிரம் ஒர் ப(த்)தும் விழ திக்கு
எட்டைக் ககனத்தர்க்குக் கொடு பச்சைப் பொன் புயலுக்குச்
சித்திர மருகோனே
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத
சித்தர்க்குக் குறி வைத்திட்டத் தனம் முத்துப் பொன் கிரி
ஒத்தச் சித்திர சிவை
கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி
இயல் கொடு செட்டிக்குச் சுகம் உற்றத் தத்துவ சித்தில் சில்
பதம் வைத்தக் கற்புறு திரையில் அமுது என மொழி செய்
கவுரியின்
அரிய மகன் என புகழ் புலி நகரில் செப்புப் பொன் தனம்
உற்றுப் பொன் குற தத்தைக்குப் புளகித்திட்டு ஒப்பிய
பெருமாளே.
Add (additional) Audio/Video Link

மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன(ம்) நுதல் சிலை
பிறை அது எ(ண்)ணும் விழி மச்ச(ம்) பொன் கணை
...
உவமைக்கேற்ற கடல், மேகம் இவைகளுக்கு ஒத்து (கரு நிறம் கொண்ட)
கூந்தல். சந்திரனைப் போன்ற முகம். வில், பிறை இவைகளுக்கு ஒப்பான
நெற்றி. மதிக்கத் தக்க கண்ணானது மீன், அழகிய அம்பு போன்றது.
முக்குப் பொன் குமிழ் ஒப்பக் கத்தரி ஒத்திட்டச் செவி குமுத
மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு
கமுகு என வைத்துப் பொன் புய(ம்)
... மூக்கு அழகிய குமிழம்
பூவை ஒத்து நிற்கும். கத்திரிக் கோலின் கைப்பிடிகளை ஒத்துள்ள
காதுகள். குமுத மலர் போன்ற வாயிதழ். அமுதம் போன்ற சொற்கள்.
வரிசையாய் அமைந்த முத்துப் போன்ற பற்கள். கழுத்து கமுக மரத்தை
நிகர்க்கும் என வைக்கப்படும் அழகிய புயங்கள்.
பச்சைத் தட்டையொடு ஒப்பிட்டுக் கமலக் கைப் பொன் துகிர்
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும்
... பச்சை
மூங்கிலுக்கு ஒப்பிடப்படும் தாமரை போன்ற கை. அழகிய நகங்களைக்
கொண்ட விரல்களின் நகம் கிளிகளின் மூக்குக்கு ஒப்பாகும்.
இகலிய குவடும் இணை என வட்டத் துத்தி முகிழ்ப்பச்
சக்கிரம் வைத்துப் பொன் குடம் ஒத்திட்டுத் திகழ் முலை
மேவும் வடமு(ம்) நிரை நிரை தரளம் பவளம் ஒடு அசைய
...
ஒத்து நிற்கும் மலை இரண்டு போல் வட்டமாய், வரித் தேமல் கொண்டு
குவிந்து விளங்குவதாய், சக்கிரவாகப் புள் போன்றதாய், பொன் குடம்
போன்று விளங்கும் மார்பகங்கள் தம்மேல் உள்ள மாலைகள் வரிசை
வரிசையாக முத்துடனும் பவளத்துடனும் அசைய,
பழு மர இலை வயிறு மயிர் அற்பத்திக்கு இணை பொற்புத்
தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்துப் பொன் கொடி மதனன்
உரு துடி இடையும் மி(ன்)னல் என
... ஆலிலை போன்ற வயிற்று
முடிகள் இருளின் வரிசைக்கு ஒப்பாகும். அழகிய கொப்பூழ் நீரில் உள்ள
சுழிக்கு ஒப்பாகும். அழகிய கொடி போன்றதும், மன்மதனின் உருவம்
போலக் கண்ணுக்குப் புலப்படாத, உடுக்கை ஒத்த இடுப்பு மின்னலைப்
போன்றது.
அரிய கடி தடம் அமிர்த கழை ரசம் மட்டுப் பொன் கமலத்தில்
சக்கிரி துத்திப் பைக்கு ஒருமித்து
... அருமை வாய்ந்த பெண்குறி
கரும்பின் ரசம், தேன் கொண்ட கூடு, அழகிய கமலத்தில் பாம்பின்
பொறி கொண்ட படம் இவைகளுக்கு நிகராகும்.
பட்டு உடை மருவு தொடை இணை கதலி பரடு கொள்
கணையும் முழவு என கமடம் எழுதிய வட்டப் புத்தகம் ஒத்துப்
பொன் சரணத்தில் பின் புறம் மெத்துத் தத்தைகள் மயில்
போலே
... பட்டாடை பூண்டுள்ள இரண்டு தொடைகளும் வாழைக்கு
ஒப்பாகும். பரடு கொண்டுள்ள கணைக்கால் முழவு வாத்தியம் ஒக்கும்.
ஆமையையும், எழுதி நிறைந்த வட்டமாயுள்ள (ஓலைப்) புத்தகம் போன்று
அழகிய புறங்கால் இருக்கும். (இத்தகைய அங்க லக்ஷணங்கள்) நிரம்பிய
பொது மகளிர் கிளிகள் போலவும், மயில்கள் போலவும இருந்தனர்.
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர் மயல்
கொண்டு அணைவர மருள் செய்தொழில் கொ(ண்)டு
தெட்டிப் பற்பல சொக்கு இட்டுப் பொருள் பற்றிக் கட்டில்
அணைக்க ஒப்பிப் புணர்
... தெருவில் நின்று (தமது) மார்பகங்களை
விலை பேசி, யாவரும் காம மயக்கம் கொண்டு அணையும்படி மயக்கும்
தொழிலைச் செய்து வஞ்சித்து, பலவிதமான சொக்கு மருந்துகளை
உணவில் ஊட்டி, பொருளைக் கவர்ந்து, கட்டிலில் அணைப்பதற்கு
சம்மதித்து, பின்பு கலவிக்கு உட்பட,
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல்
இடை கொள் துகில் பட தித்தித் துப்பு இதழ் வைத்துக் கை
கொ(ண்)டு கட்டிக் குத்து முலைக்குள் கைப் பட
... நெற்றிப்
பொட்டு அழிந்து போக, கண்கள் சுழல, மலர்கள் பொருந்தியுள்ள
கூந்தலும் இடுப்பிலுள்ள புடைவையும் குலைந்துபோக அனுபவித்து,
பவளம் போன்ற வாயிதழ் தந்து, கையால் அணைத்து, திரண்ட
மார்பகங்களைக் கையில் பற்றி,
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என
உருக உயர் மயல் சிக்குப் பட்டு உடல் கெட்டுச் சித்தமும்
வெட்கித் துக்கமும் உற்று
... கடலினின்றும் அமுதம்
கடைந்தெடுத்தது போலவும், கரும்பினின்றும் சாறு எடுப்பது போலவும்,
பலாப் பழத்தினின்று சுளை எடுப்பது போலவும் மனம் உருக, மெத்த
காம மயக்கில் அகப்பட்டு உடல் கெட்டு, உள்ளமும் நாணம் உற்று,
துயரம் அடைந்து,
கொக்கு என நரை மேவிச் செவியொடு ஒளிர் விழி மறைய
மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொ(ண்)டு தெத்திப்
பித்தமும் முற்றித் தன் செயல் அற்றுச் சிச்சிஎனத் துக்கப்பட
...
கொக்கைப் போல மயிர் வெளுத்து, காதும் விளக்கமுற்ற கண்களும்
(தத்தம் தொழில்) மறைவு பட (செவிடும், குருடுமாகி), மலமும்
சலமும் ஒழுக, பல பேச்சுகளும் குழற, கைத்தடி கொண்டு தடுமாறி,
பித்தமும் அதிகரித்து, தன்னுடைய செயல்கள் எல்லாம் ஒழிந்து,
(கண்டவர்கள்) சீ சீ என்று இகழ்ந்து வருந்த,
சிலர்கள் முது உடல் வினவு பொழுதினில் உவரி நிறம் உடை
நமனும் உயிர் கொள செப்பு அற்றுப் பிணம் ஒப்பித்துப் பெயர்
இட்டு
... (காண வந்தவர்களில்) சிலர் முதுமை அடைந்த உடல்
நிலையைப் பற்றி விசாரிக்கும் போது, (கடல் போன்ற) கரிய நிறம்
உடைய யமனும் உயிரைக் கொண்டு போக, பேச்சு அடங்க பிணம்
என்று தீர்மானித்து, பிணம் என்று பெயர் வைத்து,
பொன் பறை கொட்டச் செப்பிடு செனனம் இது என அழுது
முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் சில்
திக்குக்கு இரை இட்டிட்டு இப்படி நித்தத் துக்கம்
எடுத்திட்டுச் சடம் உழல்வேனோ
... பொலிவுள்ள கணப் பறைகள்
கொட்ட, சொல்லப் படும் பிறப்பின் அழகு இது தான் என்று கூறி அழுது,
முகத்தில் அறைந்து கொண்டு, அங்கு கூடியவர்கள் பிணத்தை எடுங்கள்
என்று கூற, சுடு காட்டில் சில பந்தங்களுள்ள நெருப்புக்கு இரையாக
உடலைப் போட்டு, இவ்வண்ணம் அழியாத துக்க நிலையைப் பூண்டு,
உடல் எடுத்துச் சுழற்சி உறுவேனோ?
குருவின் உரு என அருள் செய் துறையினில் குதிரை கொள
வரு நிறை தவசி தலை கொற்றப் பொன் பதம் வைத்திட்டு
அற்புதம் எற்றிப் பொன் பொருள் இட்டுக் கைகொ(ள்)ளும்
முதல்வர்
... குருவாய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறையில்
(அரசனுக்காக) குதிரை வாங்க வந்த நிறை செல்வத் தவத்தினரான
மாணிக்கவாசகரின் தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச்
சூட்டி, அற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, ஞானப் பொருளை
அவருக்கு உபதேசித்து தடுத்தாட்கொண்டருளிய முதன்மையரான
சிவ பெருமான்.
இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு
புயர் கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டு எழ விட்டத் திக்கு
அணை நக்கர்க்கு அற்புத குமரன் என
... இளம் பிறை நிலவை
அடைந்துள்ள சடையினர். சிவந்த மான், மழு இவைகளைத் தரித்த
அழகிய புயத்தினர். இறுமாப்பும் சேட்டையும் கொண்ட திரிபுராதிகள்
கேடுற்று அழியும்படிச் செய்து, திக்குக்களை எல்லாம் ஆடையாகப்
புனைந்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதமான குமாரன்
என்று வந்தவனே,
விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர
முழவொடு கொட்டத் துட்டரை வெட்டித் தண் கடல் ஒப்பத்
திக்கும் மடுத்துத் தத்திட அமர் மேவி
... பெருமையை எடுத்து
ஒலிக்கும் முரசு வாத்தியத்துடன், சூழ்ந்துள்ள எழு கடல் பேரொலி செய்ய,
முழவும் சேர்ந்து முழக்கம் செய்ய, துஷ்டர்களாகிய அசுரர்களை வெட்டி
அழித்து, குளிர்ந்த கடல் போல பல திக்குகளிலும் நிறைந்து பரக்கும்படி
போருக்கு எழுந்து,
குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட
உடுகள் உதிரிட கொத்திச் சக்கிரி பற்றப் பொன் பரி எட்டுத்
திக்கும் எடுத்திட்டுக் குரல்
... கோழிக் கொடிகளும், ஒளி பொருந்திய
குடைகளும் போர்க்களத்தில் நெருங்கிடவும், மலைகள் பொடியாகி
விழவும், நட்சத்திரங்கள் உதிர்ந்து விழவும், (உனது) மயிலாகிய குதிரை
(அஷ்ட) பாம்புகளையும் அலகால் கொத்திப் பிடிக்க, எட்டுத் திக்குகளில்
உள்ளவர்களும் குரல் எடுத்திட்டு ஓலமிட,
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள்
கொட்பப் புட்பம் இறைத்துப் பொன் சரணத்தில் கைச் சிரம்
வைத்துக் குப்பிட
... குமர குருபர குமர குருபர குமர குருபர என பல
முறை துதித்து நிற்கும் தேவர்கள் (உன்னைச்) சூழ்ந்து மலர்களைத் தூவி
அழகிய திருவடிகளில் இறைத்து, தலை மேல் கைகளை வைத்துக் கும்பிட,
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி
பருகிட கொற்றப் பத்திரம் இட்டுப் பொன் ககனத்தைச்
சித்தம் இரக்ஷித்துக் கொ(ள்)ளும் மயில் வீரா
... மகிழ்ந்து
ஓடிவரும் நரிகளும், சிறகுள்ள கழுகுகளும், காக்கை பலவும்,
கருடன்களும் கூத்தாடி இரத்தத்தைக் குடிக்க, உன் வீர வாளைச்
செலுத்தி அழகிய தேவலோகத்தை மனத்தில் கருணையுடன்
காப்பாற்றித் தந்த மயில் வீரனே,
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர்
கொ(ண்)டு அரி என நடமிடு சிற்பர்
... இரணியனுடைய தலையும்
உடலும் கிழிய ஒப்பற்ற அந்தப் பொழுதில் (தமது) நகத்தைக் கொண்டு
அறுத்து, அந்தி வேளையில் (நரசிம்மத்) தாண்டவத்தைப் புரிந்த தொழில்
திறம் வாய்ந்தவர்.
திண் பதம் வைத்துச் சக்கிரவர்த்திக்குச் சிறை இட்டுச்
சுக்கிரன் அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய
நெடியவர் திருவும் அழகியர்
... வலிய தமது திருவடியை வைத்து
(மகாபலிச்) சக்கிரவர்த்தியை சிறையில் வைத்து, சுக்கிரனுடைய
அருமையான கண் கெட்டுப் போக இரு திருவடிகளால் உலகம்
முழுமையும் (அளக்கும்படி) உயர்ந்தவர். அழகிய லக்ஷ்மியை
(திருமார்பில்) உடையவர்.
தெற்குத் திக்கில் அரக்கர்க்குச் சினம் உற்றுப் பொன்
தசர்தற்குப் புத்திர செயமும் மன வலி சிலை கை கொ(ண்)டு
...
தெற்குத் திசையில் (இராவணன் முதலிய) அரக்கர்கள் மீது கோபம்
கொண்டு, சிறந்த தசரதச் சக்கிரவர்த்திக்கு புத்திரராய், வெற்றியும்
மனோ திடத்தையும், (கோதண்டம் என்னும்) வில்லையும் கையில் ஏந்தி,
கரம் இரு பது உடை கிரி சிரம் ஒர் ப(த்)தும் விழ திக்கு
எட்டைக் ககனத்தர்க்குக் கொடு பச்சைப் பொன் புயலுக்குச்
சித்திர மருகோனே
... இருபது கைகளைக் கொண்ட
(ராவணனுடைய) பத்து தலைகளும் அறுந்து விழ, எட்டுத் திக்குகளையும்
தேவர்களுக்குக் கொடுத்த பச்சை நிறம் கொண்ட அழகிய மேக
வண்ணனாகிய திருமாலுக்கு அமைந்த அழகிய மருகனே,
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத
சித்தர்க்குக் குறி வைத்திட்டத் தனம் முத்துப் பொன் கிரி
ஒத்தச் சித்திர சிவை
... பொட்டு அணிந்து, சந்திரனுக்கு ஒப்பான
முகத்தை உடைய அழகி, பச்சை நிறத்தினள், சிலம்பணிந்து நடனம்
புரிபவள், அடியார்கள் உள்ளத்தில் மலர்கின்ற திருவடியை உடைய
சித்தராகிய சிவபெருமானுக்கு சுவட்டுக் குறி வைத்தவையும், முத்து
மாலை அணிந்த பொன் மலை போன்றவையுமான மார்பகங்கள்
இணைந்துள்ள அழகிய சிவாம்பிகை,
கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி
இயல் கொடு செட்டிக்குச் சுகம் உற்றத் தத்துவ சித்தில் சில்
பதம் வைத்தக் கற்புறு திரையில் அமுது என மொழி செய்
கவுரியின்
... லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் (தனது) இரு கண்களாகக்
கொண்டவளும், பல விதமான உருவத்தைக் கொண்டவளும், மிகப்
பழையவளும், முறைமையாக வளையல் விற்ற செட்டியாகிய சொக்க
நாதருக்கு சுகம் நிரம்ப தத்துவ அறிவு முறையில் தனது ஞான
பாதத்தைத் வைத்துச் சூட்டியவளும், கற்பு உள்ளவளும், கடலில் எழுந்த
அமுதம் போன்ற இனிய சொற்களைப் பேசுபவளுமான உமா தேவியின்
அரிய மகன் என புகழ் புலி நகரில் செப்புப் பொன் தனம்
உற்றுப் பொன் குற தத்தைக்குப் புளகித்திட்டு ஒப்பிய
பெருமாளே.
... அருமையான புதல்வன் என்று விளங்கப் புகழ் நிறைந்த
புலியூரில் (சிதம்பரத்தில்) சிமிழ் போன்ற பொலிவுள்ள மார்பகம்
திரண்டுள்ள அழகிய குறக் கிளி ஆகிய வள்ளியின் பொருட்டு
புளகாங்கிதம் கொண்டு அவளுக்கு ஒப்புக் கொடுத்து வீற்றிருக்கும்
பெருமாளே.

Similar songs:

512 - மருவு கடல்முகில் (சிதம்பரம்)

தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தனதான.

Songs from this thalam சிதம்பரம்

449 - கனகசபை மேவும்

450 - கைத்தருண சோதி

451 - இருவினையின் மதி

452 - குகனே குருபரனே

453 - வண்டையொத்து

454 - கங்குலின் குழல்

455 - கொந்தளம் புழு

456 - மந்தரமென் குவடார்

457 - வந்து வந்துவித்தூறி

458 - கதித்துப் பொங்கலு

459 - சிரித்துச் சங்கொளி

460 - தத்தையென்று

461 - தனத்தில் குங்குமத்தை

462 - திருடிகள் இணக்கி

463 - கொந்தரம் குழல்

464 - தியங்கும் சஞ்சலம்

465 - பருவம் பணை

466 - மதவெம் கரி

467 - முகசந்திர புருவம்

468 - சந்திர வோலை

469 - காய மாய வீடு

470 - அவகுண விரகனை

471 - கட்டி முண்டக

472 - நஞ்சினைப் போலுமன

473 - செம் கலச

474 - கரிய மேகமெனும்

475 - கூந்தலாழ விரிந்து

476 - அத்தன் அன்னை

477 - இருள் காட்டு

478 - முல்லைமலர் போலும்

479 - அடப்பக்கம் பிடித்து

480 - அக்குப் பீளை

481 - ஆரத்தோடு அணி

482 - காதைக் காதி

483 - கொள்ளை ஆசை

484 - தாது மாமலர்

485 - எலுப்புத் தோல்

486 - நீல மாமுகில்

487 - வாத பித்தமொடு

488 - சுரும்பு உற்ற

489 - இணங்கித் தட்பொடு

490 - விடுங்கைக்கு ஒத்த

491 - கொந்தள வோலைகள் ஆட

492 - நகையா லெத்திகள்

493 - எழுகடல் மணலை

494 - தறுகணன் மறலி

495 - இரசபா கொத்தமொழி

496 - இருளும் ஓர்கதிரணு

497 - காவி உடுத்தும்

498 - கோதிக் கோதி

499 - சகசம்பக் குடைசூழ்

500 - சகுட முந்தும்

501 - சாந்துடனே புழுகு

502 - சுடரனைய திருமேனி

503 - தத்தை மயில்

504 - துத்தி பொற்றன

505 - நாடா பிறப்பு

506 - நாலு சதுரத்த பஞ்ச

507 - நீலக் குழலார்

508 - பனி போலத் துளி

509 - மகரமொடுறு குழை

510 - மச்ச மெச்சு

511 - மதிய மண்குண

512 - மருவு கடல்முகில்

513 - மனமே உனக்குறுதி

514 - முத்த மோகன

515 - பரமகுரு நாத

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song