சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vYtWwNzg12A
4.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய் விராம் மேனி தன்னைப்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=Aa6ZjiSja28
4.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=k69FBvKLoqk
4.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறை அது பாடிப் பிச்சைக்கு
பண் - திருநேரிசை:கொல்லி   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc
4.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=zy7SU8mdaHI

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.039   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற
அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே!
தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே.

[1]
பீலி கை இடுக்கி, நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி,
வாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னே!
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே!

[2]
தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி,
ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே!
மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே.

[3]
பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்;
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே.

[4]
கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி,
வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே!
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே!

[5]
துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்)
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி;
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை
மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே!

[6]
பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது;
மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை!
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே!

[7]
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,-
எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!-
தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக்
கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே!

[8]
குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும்,
திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார்
அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப்
பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே.

[9]
அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று,
முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ,
அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.041   பொய் விராம் மேனி தன்னைப்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி
மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா!
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன்
செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே!

[1]
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா;
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை-
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார், திருச் சோற்றுத் துறையனாரே.

[2]
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்!
பல் இல் வெண்தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர்
சொல்லும் நன்பொருளும் ஆவார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[3]
கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண் ஓர் பாகம்
இறையராய், இனியர் ஆகி, தனியராய், பனி வெண் திங்கள்-
பிறையராய், செய்த எல்லாம் பீடராய், கேடு இல் சோற்றுத்-
துறையராய், புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே.

[4]
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்;
எந்தையே! ஏகமூர்த்தி! என்று நின்று ஏத்தமாட்டேன்;
பந்தம் ஆய், வீடும் ஆகி, பரம்பரம் ஆகி, நின்று
சிந்தையுள்-தேறல் போலும்-திருச் சோற்றுத் துறையனாரே.

[5]
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று மின், பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திற(ம்)மே!
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தம் ஆய்ப் போத விட்டார், திருச் சோற்றுத் துறையனாரே.

[6]
கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போன,
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது; அந்தோ!
முந்து அரா அல் குலாளை உடன் வைத்த ஆதிமூர்த்தி,
செந் தாது புடைகள் சூழ்ந்த திருச் சோற்றுத் துறையனாரே.

[7]
அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத வேண்டா;
வெங் கதிரோன் வழீயே போவதற்கு அமைந்து கொண் மின்!
அம் கதிரோன் அவ(ன்)னை உடன் வைத்த ஆதிமூர்த்தி-
செங் கதிரோன் வணங்கும் திருச் சோற்றுத் துறையனாரே.

[8]
ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[9]
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்!
கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க,
செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.042   பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருத்துருத்தி ; (திருத்தலம் அருள்தரு முகிழாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதேசுவரர் திருவடிகள் போற்றி )
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா;
இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்!
ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே!

[1]
சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற
இவை ஒரு பொருளும் அல்ல; இறைவனை ஏத்து மி(ன்)னோ!
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்த
சுவையினை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

[2]
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மி(ன்)னோ!
கன்னியை ஒரு பால் வைத்து, கங்கையைச் சடையுள் வைத்து,
பொன்னியின் நடுவு தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்ட ஆறே.!

[3]
ஊன் தலை வலியன் ஆகி, உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப்பட்டு நின்று, சார் கனல் அகத்து வீழ,
வான் தலைத் தேவர் கூடி,வானவர்க்கு இறைவா! என்னும்
தோன்றலை, துருத்தியானை தொண்டனேன் கண்டஆறே!

[4]
உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ!
கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற
சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

[5]
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை மின், நீர்கள்
பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த
வள்ளலை, வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற
துள் அலைத் துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

[6]
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்;
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

[7]
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டா;
தூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமி(ந்)னோ!
சோமனைச் சடையுள் வைத்துத் தொல்-நெறி பலவும் காட்டும்
தூ மணல்-துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!

[8]
குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின், நீர்கள்!
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த
தொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டஆறே!

[9]
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை
கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த
துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.043   மறை அது பாடிப் பிச்சைக்கு  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) ; (திருத்தலம் அருள்தரு திருமேற்றளிநாயகி உடனுறை அருள்மிகு திருமேற்றளிநாதர் திருவடிகள் போற்றி )
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.

[1]
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும்
பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக்
காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.

[2]
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த,
பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.

[3]
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும்
வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

[4]
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி,
தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே.

[5]
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய்,
தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற
காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.

[6]
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.

[7]
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி
கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே.

[8]
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக்
கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

[9]
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.045   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

[1]
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று,
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்,
அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

[2]
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்!
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.

[3]
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே,
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

[4]
சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி,
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்;
கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு
உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே.

[5]
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி;
ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.

[6]
பிணம் உடை உடலுக்கு ஆகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வு எனும் போகம் வேண்டா; போக்கல் ஆம், பொய்யை நீங்க;
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.

[7]
பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின்,
மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி,
உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

[8]
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால்
எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

[9]
வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே!
மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய!
பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list