சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.036   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கலை ஆர் மதியோடு உர
பண் - தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=P9yjQbTeGAI
1.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=zDHSBZvbt6M
1.130   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புலன் ஐந்தும் பொறி கலங்கி,
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=rZnYYLAHzqE
2.006   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
பண் - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=t9JFCSZSqkU
2.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
பண் - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
பண் - காந்தாரம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=kGyJHnSZZ48
4.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
பண் - பழந்தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LtFr6FRYsgI
4.038   திருநாவுக்கரசர்   தேவாரம்   கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
பண் - திருநேரிசை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dul25CK8BMw
4.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vYtWwNzg12A
4.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   தான் அலாது உலகம் இல்லை;
பண் - திருநேரிசை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ew9877ql9vY
4.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   குறுவித்தவா, குற்றம் நோய் வினை
பண் - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=EcomQKQFDbc
4.092   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
பண் - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=S11_PW4-fX0
4.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
பண் - திருவிருத்தம்   (திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=zKE8RxiX5Ao
5.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்தை வாய்தல் உளான், வந்து;
பண் - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Q38qbY1GFEk
5.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
பண் - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fykKEeVwUzI
6.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
பண் - திருத்தாண்டகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UniZhDqA0sk
6.038   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓசை ஒலி எலாம் ஆனாய்,
பண் - திருத்தாண்டகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qIn-C_vMWG0
7.077   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பரவும் பரிசு ஒன்று அறியேன்
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=gWWhHaXLOuA

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.036   கலை ஆர் மதியோடு உர  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.

[1]
மதி ஒன்றிய கொன்றை வடத்தன்,
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடி மாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே.

[2]
கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு இடம் ஆகும்
திக்கின் இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையாரது ஐயாறே.

[3]
சிறை கொண்ட புரம் அவை சிந்தக்
கறை கொண்டவர் காதல் செய் கோயில்
மறை கொண்ட நல் வானவர் தம்மில்
அறையும் ஒலி சேரும் ஐயாறே.

[4]
உமையாள் ஒரு பாகம் அது ஆகச்
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்
அமையார் உடல் சோர்தரு முத்தம்
அமையா வரும் அம் தண் ஐயாறே.

[5]
தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

[6]
வரம் ஒன்றிய மா மலரோன் தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்
வரை நின்று இழி வார் தரு பொன்னி
அரவம் கொடு சேரும் ஐயாறே.

[7]
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே.

[8]
சங்கக் கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.

[9]
துவர் ஆடையர், தோல் உடையார்கள்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதே,
தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே.

[10]
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்-
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்-
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச்
சொலும் மாலை வல்லார் துயர் வீடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.120   பணிந்தவர் அருவினை பற்று அறுத்து  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

[1]
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அடப்
பார்த்தவன்; பனிமதி படர் சடை வைத்து,
போர்த்தவன் கரி உரி; புலி அதள், அரவு, அரை
ஆர்த்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.

[2]
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர்
எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள,
அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.

[3]
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை
மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல்
தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம்
ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

[4]
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு
தேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன்,
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்
ஆனவன், வள நகர் அம் தண் ஐயாறே.

[5]
முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ்
என் பொனை, ஏதம் இல் வேதியர் தாம் தொழும்
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே.

[6]
வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடை
வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில்
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன்
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே.

[7]
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்,
அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனது
முடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறை
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே.

[8]
விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல்,
எண் இலி தேவர்கள், இந்திரன், வழிபட,
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே.

[9]
மருள் உடை மனத்து வன் சமணர்கள், மாசு அறா
இருள் உடை இணைத்துவர்ப் போர்வையினார்களும்,
தெருள் உடை மனத்தவர்; தேறுமின், திண்ணமா
அருள் உடை அடிகள் தம் அம் தண் ஐயாறே!

[10]
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ்
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக்
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.130   புலன் ஐந்தும் பொறி கலங்கி,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

[1]
விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன் பாவையோடும்
அடல் ஏறு ஒன்று அது ஏறி, அம் சொலீர், பலி! என்னும் அடிகள் கோயில்
கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி,
திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே.

[2]
கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை-
பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில்
கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு
    உலர்த்தி, கூதல் நீங்கி,
செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.

[3]
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரின் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர்,
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில்
மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும்
தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.

[4]
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த கொன்றைத்
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்
தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.

[5]
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி,
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,
தேம்தாம் என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

[6]
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில்
குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம் மல்கு
தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.

[7]
அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும்,
மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி,
செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே.

[8]
மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று
சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

[9]
குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்!
எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில்
செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.

[10]
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்
இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.006   கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.

[1]
தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,
பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்;
துன்னஆடை உடுப்பர்; சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே.

[2]
கூறு பெண்; உடை கோவணம்; உண்பது வெண்தலை;
மாறில், ஆரும் கொள்வார் இலை, மார்பில் அணிகலம்;
ஏறும் ஏறித் திரிவர்; இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

[3]
பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர்வாயினார்,
எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற
கண்ணினார்,
வண்ணம் பாடி, வலி பாடி, தம் வாய்மொழி பாடவே,
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

[4]
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே,
வானை ஊடுஅறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன், நெய், பால், தயிர், தெங்குஇளநீர், கரும்பின் தெளி,
ஆன் அஞ்சு, ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே.

[5]
எங்கும் ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதி சூடு மைந்தனும்,
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும் ஆய்
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

[6]
ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம்
சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;
வேதிஆகி, விண் ஆகி, மண்ணோடு எரி காற்றும் ஆய்,
ஆதிஆகி, நின்றானும் ஐயாறு உடை ஐயனே.

[7]
குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய்,
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே.
பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால்,
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

[8]
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்;
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்;
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே.

[9]
மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;
கோலம் ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.

[10]
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல்
வாழ்த்தவே.
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.

[11]
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை,
கலி கடிந்த கையான் கடல்காழியர்காவலன்,
ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள்,
போய்
மலி கொள் விண் இடை மன்னிய சீர் பெறுவார்களே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.032   திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் ஏர் ஆர்
மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.

[1]
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர்
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும்
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார,
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே.

[2]
கட்டு வடம் எட்டும் உறு வட்டமுழவத்தில்
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு
இட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் சீர்
வட்டமதிலுள் திகழும் வண் திரு ஐயாறே.

[3]
நண்ணி ஒர் வடத்தின்நிழல் நால்வர்முனிவர்க்கு, அன்று,
எண் இலிமறைப்பொருள் விரித்தவர் இடம் சீர்த்
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே.

[4]
வென்றி மிகு தாருகனது ஆர் உயிர் மடங்க,
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ,
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர்மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே.

[5]
பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி,
பாத முதல் பைஅரவு கொண்டு அணி பெறுத்தி,
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே.

[6]
துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த,
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே,
என்ன சதி? என்று உரைசெய் அங்கணன் இடம் சீர்
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே.

[7]
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம்போர்
அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத்
துரக்க, விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர்
வரக் கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே.

[8]
பருத்துஉருஅது ஆகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப்
பெருத்த உருஅது ஆய் உலகு இடந்தவனும், என்றும்
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார்
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே.

[9]
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர், புத்தர்
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம்,
நோக்கரிய தத்துவன் இடம் படியின்மேலால்
மாகம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே.

[10]
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள்
ஈசனை, எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப்
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்,
நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.003   மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
வடதிசைப் பெருந்தலங்களாக வழியில் உள்ள திருப்பருப்பதம் முதலான தலங்களைத் தரிசித்துக்கொண்டு அடியார்களை விடுத்துத் தனியே இரவுபகலாய், காடுமேடு, மலை, மணல் பரப்புக்களில் நடந்துசென்றார். கால்களால் நடக்கலற்றாது கைகளால் தாவிச் சென்றார். கைகளும் மணிக்கட்டு வரை தேய்ந்தன. மார்பினால் உந்திச் சென்றார். என்புகளும் தேய்ந்து முறிந்தன. எப்படியும் கயிலைநாதனைக் கண்டு இன்புற வேண்டும் என்ற வேட்கையால் புரண்டு புரண்டு சென்று உடலுறுப்புக்கள் முழுதும் தேய்ந்து ஓரிடத்தில் செயலற்றுத் தங்கிக் கிடந்தார். பெருமான் ஒரு முனிவர் வேடம் பூண்டு எதிரே நின்று, திருக்கயிலை மானிடர் சென்றடைதற்கு எளிதோ? திரும்பிச் செல்லும், இதுவே தக்கது என்று கூற அப்பரும், என்னை ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்று உறுதி மொழிந்தார். முனிவராய் வந்த பெருமான் மறைந்து அசரீரியாய் நாவினுக்கரசனே! எழுந்திரு என்று கூறினன். அப்பொழுதே உடல் நலம் பெற்று நாவுக்கரசர் எழுந்து பணிந்து அண்ணலே, கயிலையில் நின்திருக்கோலம் நண்ணி நான்தொழ நயந்தருள்புரி எனப் பணிந்தார். பெருமான் மீண்டும் அசரீரியாய் இத் தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் காட்சியைக் காண்க என்று கூறினன். அவ்வாறே அப்பரும் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தனர். திருவையாற்றில் உள்ள தடாகத்தில் திருநாவுக்கரசர் எழுந்தார். ஐயாற்றிறைவரை வணங்கப் புகுமளவில் அங்குள்ள உயிர்கள் அனைத்தும் சத்தியும் சிவமுமாம் காட்சிகளைக் காட்டின. அப்பெருங் கோயில் கயிலைங்கிரியாய்க் காட்சி அளித்தது. திருமால், பிரமன், இந்திரன் முதலானோர் போற்ற வேதம் முழங்க, விண்ணவர், சித்தர் வித்யாதரர்களுடன் மாதவர் முனிவர் போன்ற இறைவன் அம்பிகையோடு எழுந்தருளியிருக்கும் அருட்காட்சி கண்டு ஆனந்தக் கூத்தாடினார்; பாடினார்; பல்வகைப் பாமாலைகளாலும் போற்றிப் பரவிப் புகழ்ந்து மகிழ்ந்தார். பெருமான் கயிலைக் காட்சியை மறைத்தருளினான். திரு நாவுக்கரசர் திகைத்து இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணித் தெளிந்து மாதர்ப் பிறைக்கண்ணியானை என்ற திருப்பதிகம் பாடித் தொழுதார்.
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.



[1]
போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!



[2]
எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது,
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

[3]
பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி,
துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன்,
அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது,
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்!



[4]
ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி,
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

[5]
தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி,
உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன்,
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!



[6]
கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!



[7]
விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி,
பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன்.
அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது,
கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!



[8]
முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி,
பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!



[9]
திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன்,
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!



[10]
வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.013   விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்  
பண் - பழந்தக்கராகம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும்
இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்;
தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான்,
அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[1]
செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி, குழைக் காதர்
கொம்பு அமரும் கொடிமருங்குல் கோல் வளையாள் ஒருபாகர்,
வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த
அம் பவள ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[2]
நணியானே! சேயானே! நம்பானே! செம் பொன்னின்
துணியானே! தோலானே! சுண்ண வெண் நீற்றானே!
மணியானே! வானவர்க்கு மருந்து ஆகிப் பிணி தீர்க்கும்
அணியானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[3]
ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்!
வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே!
பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம்
ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[4]
சடையானே! சடை இடையே தவழும் தண் மதியானே!
விடையானே! விடை ஏறிப் புரம் எரித்த வித்தகனே!
உடையானே! உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[5]
நீரானே! தீயானே! நெதியானே! கதியானே!
ஊரானே! உலகானே! உடலானே! உயிரானே!
பேரானே! பிறை சூடீ! பிணி தீர்க்கும் பெருமான்! என்று
ஆராத ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[6]
கண் ஆனாய்! மணி ஆனாய்! கருத்து ஆனாய்! அருத்து ஆனாய்!
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்!
விண் ஆனாய்! விண் இடையே புரம் எரித்த வேதியனே!
அண் ஆன ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[7]
மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின் பொருள் ஆனாய்!
பொன் ஆனாய்! மணி ஆனாய்! பொரு கடல் வாய் முத்து ஆனாய்!
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி
அன்னானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[8]
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்தப்
பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்த,
எத்திசையும் வானவர்கள், எம்பெருமான் என இறைஞ்சும்
அத் திசை ஆம் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[9]
கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத்
திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி,
பெருவரை சூழ் வையகத்தார், பேர் நந்தி என்று ஏத்தும்
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.038   கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.

[1]
பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு வெண் நூலும் வைத்தார்
கடியது ஓர் நாகம் வைத்தார்; காலனைக் கால் அவைத்தார்
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார்
அடி இணை தொழவும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

[2]
உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார்
விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார்
அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

[3]
தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்; எமக்கு என்றும் இன்பம் வைத்தார்
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.

[4]
வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய வைத்தார்
கான் இடை நடமும் வைத்தார்; காமனைக் கனலா வைத்தார்
ஆன் இடை ஐந்தும் வைத்தார்; ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

[5]
சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார்
அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

[6]
பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய் விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்; சிவம் அதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்; முறை முறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்; -ஐயன் ஐயாறனாரே.

[7]
ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார்
நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

[8]
பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

[9]
இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.039   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற
அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே!
தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே.

[1]
பீலி கை இடுக்கி, நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி,
வாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னே!
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே!

[2]
தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி,
ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே!
மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே.

[3]
பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்;
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே.

[4]
கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி,
வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே!
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே!

[5]
துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்)
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி;
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை
மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே!

[6]
பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது;
மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை!
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே!

[7]
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,-
எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!-
தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக்
கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே!

[8]
குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும்,
திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார்
அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப்
பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே.

[9]
அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று,
முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ,
அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.040   தான் அலாது உலகம் இல்லை;  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
தான் அலாது உலகம் இல்லை; சகம் அலாது அடிமை இல்லை;
கான் அலாது ஆடல் இல்லை; கருதுவார் தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை; வார் குழல் மங்கையோடும்
ஆன் அலாது ஊர்வது இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

[1]
ஆல் அலால் இருக்கை இல்லை; அருந்தவ முனிவர்க்கு அன்று
நூல் அலால் நொடிவது இல்லை; நுண் பொருள் ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க, வேலை
ஆல் அலால் அமுதம் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

[2]
நரி புரி சுடலை தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை;
சுரி புரி குழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை;
தெரி புரி சிந்தையார்க்குத் தெளிவு அலால் அருளும் இல்லை-
அரி புரி மலர்கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.

[3]
தொண்டு அலால்-துணையும் இல்லை; தோல் அலாது உடையும் இல்லை;
கண்டு அலாது அருளும் இல்லை; கலந்த பின் பிரிவது இல்லை-
பண்டை நால்மறைகள் காணாப் பரிசினன் என்று என்று எண்ணி,
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.

[4]
எரி அலால் உருவம் இல்லை; ஏறு அலால் ஏறல் இல்லை;
கரி அலால் போர்வை இல்லை; காண் தகு சோதியார்க்கு,
பிரி இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்-
அரி அலால்-தேவி இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே.

[5]
என்பு அலால் கலனும் இல்லை; எருது அலால் ஊர்வது இல்லை;
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை;
துன்பு இலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும்
அன்பு அலால் பொருளும் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

[6]
கீள் அலால் உடையும் இல்லை; கிளர் பொறி அரவம் பைம் பூண்
தோள் அலால்-துணையும் இல்லை; தொத்து அலர்கின்ற வேனில்
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை; மீள
ஆள் அலால் கைம்மாறு இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

[7]
சகம் அலாது அடிமை இல்லை; தான் அலால்-துணையும் இல்லை;
நகம் எலாம் தேயக் கையால் நாள் மலர் தொழுது தூவி,
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து, ஏத்தும் தொண்டர்
அகம் அலால் கோயில் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

[8]
உமை அலாது உருவம்- இல்லை; உலகு அலாது உடையது இல்லை-
நமை எலாம் உடையர் ஆவர்; நன்மையே; தீமை இல்லை;
கமை எலாம் உடையர் ஆகிக் கழல் அடி பரவும் தொண்டர்க்கு
அமைவு இலா அருள் கொடுப்பார் -ஐயன் ஐயாறனார்க்கே.

[9]
மலை அலால் இருக்கை இல்லை; மதித்திடா அரக்கன் தன்னைத்
தலை அலால் நெரித்தது இல்லை; தடவரைக் கீழ் அடர்த்து;
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை-
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.091   குறுவித்தவா, குற்றம் நோய் வினை  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி! குறுவித்த நோய்
உறுவித்தவா! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அறிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
செறிவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[1]
கூர்வித்தவா, குற்றம் நோய்வினை காட்டியும்! கூர் வித்த நோய்
ஊர்வித்தவா! உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
ஆர்வித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சேர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[2]
தாக்கினவா, சலம் மேல் வினை காட்டியும்! தண்டித்த நோய்
நீக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
ஆக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
நோக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[3]
தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச் சலம் அதனால்
நெருக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
உருக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
பெருக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[4]
இழிவித்த ஆறு, இட்ட நோய் வினைக் காட்டி! இடர்ப்படுத்துக்
கழிவித்தவா! கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி
அழிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொழுவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[5]
இடைவித்த ஆறு, இட்ட நோய்வினை காட்டி! இடர்ப்படுத்து(வ்)
உடைவித்த ஆறு! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அடைவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[6]
படக்கினவா, பட நின்று பல்-நாளும்! படக்கின நோய்
அடக்கின ஆறு! அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம்
அடக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[7]
மறப்பித்தவா, வல்லை நோய்வினை காட்டி! மறப்பித்த நோய்
துறப்பித்தவா! துக்க நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
இறப்பித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சிறப்பித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[8]
துயக்கினவா, துக்க நோய்வினை காட்டி! துயக்கின நோய்
இயக்கின ஆறு! இட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்து அருளி
அயக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
மயக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[9]
கறுத்து மிட்டார், கண்டம்; கங்கை சடை மேல் கரந்து அருள
இறுத்து மிட்டார், இலங்கைக்கு இறை தன்னை இருபது தோள்
அறுத்து மிட்டார், அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே;
பொறுத்தும் இட்டார்-தொண்டனேனைத் தன் பொன் அடிக் கீழ் எனையே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.092   சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன-பாம்பு சுற்றி
அந்திப்பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.

[1]
இழித்தன ஏழ் ஏழ்பிறப்பும் அறுத்தன; என் மனத்தே
பொழித்தன; போர் எழில் கூற்றை உதைத்தன; போற்றவர்க்கு ஆய்க்
கிழித்தன, தக்கன் கிளர் ஒளி வேள்வியைக் கீழ முன் சென்று
அழித்தன-ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே.

[2]
மணி நிறம் ஒப்பன; பொன் நிறம் மன்னின; மின் இயல் வாய்
கணி நிறம் அன்ன; கயிலைப் பொருப்பன; காதல் செய்யத்
துணிவன; சீலத்தர் ஆகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன; சேயன, தேவர்க்கு;-ஐயாறன் அடித்தலமே.

[3]
இருள் தரு துன்பப்படலம் மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள் தரு கண் இழந்து, உண் பொருள் நாடி, புகல் இழந்த
குருடரும் தம்மைப் பரவ, கொடு நரகக் குழி நின்று
அருள் தரு கை கொடுத்து ஏற்றும்-ஐயாறன் அடித்தலமே.

[4]
எழுவாய் இறுவாய் இலாதன; எங்கள் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன; மா நரகக் குழிவாய்
விழுவார் அவர் தம்மை வீழ்ப்பன; மீட்பன; மிக்க அன்போடு
அழுவார்க்கு அமுதங்கள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[5]
துன்பக்கடல் இடைத் தோணித்தொழில் பூண்டு, தொண்டர் தம்மை
இன்பக்கரை முகந்து ஏற்றும் திறத்தன; மாற்று அயலே
பொன் பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும் அப் பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[6]
களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோது இல் செந்தேன்
தெளித்து, சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து, பெருஞ்செல்வம் ஆக்கும்-ஐயாறன் அடித்தலமே.

[7]
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்து உடலை
வருத்திக் கடி மலர்வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்-
அருத்தித்து அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.

[8]
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப, பரந்து பல்பேய்
கூடி முழவக் குவி கவிழ் கொட்ட, குறு நரிகள்
நீடும் குழல் செய்ய, வையம் நெளிய நிணப் பிணக்காட்டு
ஆடும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[9]
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன-பாங்கு அறியா
என் போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.

[10]
மலையான் மடந்தை மனத்தன; வானோர் மகுடம் மன்னி
நிலை ஆய் இருப்பன; நின்றோர் மதிப்பன; நீள் நிலத்துப்
புலை ஆடு புன்மை தவிர்ப்பன-பொன்னுலகம்(ம்) அளிக்கும்,
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த, ஐயாறன் அடித்தலமே.

[11]
பொலம் புண்டரிகப் புது மலர் போல்வன; போற்றி! என்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன; பொன் அனையாள்
சிலம்பும், செறி பாடகமும், செழுங் கிண்கிணித்திரளும்,
அலம்பும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[12]
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன; ஓதி நன் நூல்
கற்றார் பரவப் பெருமை உடையன; காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்;
அற்றார்க்கு அரும்பொருள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[13]
வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன; மந்திரிப்பார்
ஊனைக் கழித்து உய்யக் கொண்டு அருள் செய்வன; உத்தமர்க்கு
ஞானச் சுடர் ஆய் நடுவே உதிப்பன; நங்கை அஞ்ச
ஆனை உரித்தன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[14]
மாதிரம், மா நிலம், ஆவன; வானவர் மா முகட்டின்
மீதன; மென் கழல் வெங் கச்சு வீக்கின; வெந் நமனார்
தூதரை ஓடத் துரப்பன; துன்பு அறத் தொண்டு பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[15]
பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு அருளால்
ஏணிப்படி நெறி இட்டுக் கொடுத்து, இமையோர் முடி மேல்
மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று, வயிரம் மன்னி,
ஆணிக் கனகமும் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.

[16]
ஓதிய ஞானமும், ஞானப்பொருளும், ஒலி சிறந்த
வேதியர் வேதமும், வேள்வியும், ஆவன; விண்ணும் மண்ணும்
சோதி அம் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன, தீ, மதியோடு;
ஆதியும் அந்தமும் ஆன-ஐயாறன் அடித்தலமே.

[17]
சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை-சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி-அணி ஆர் வளைக்கரம் கூப்பி நின்று,
வணங்கும் பொழுதும், வருடும் பொழுதும், வண் காந்தள் ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.

[18]
சுழல் ஆர் துயர்வெயில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும்
நிழல் ஆவன; என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ; காலவனம் கடந்த
அழல் ஆர் ஒளியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

[19]
வலியான் தலைபத்தும் வாய் விட்டு அலற வரை அடர்த்து
மெலியா வலி உடைக் கூற்றை உதைத்து, விண்ணோர்கள் முன்னே
பலி சேர் படு கடைப் பார்த்து, பல்-நாளும் பலர் இகழ
அலி ஆம் நிலை நிற்கும்-ஐயன் ஐயாறன் அடித்தலமே.

[20]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.098   அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும், பொய் என்பனோ?-
சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

[1]
பாடகக் கால்; கழல்கால்; பரிதிக் கதிர் உக்க அந்தி
நாடகக் கால்; நங்கைமுன் செங்கண் ஏனத்தின் பின் நடந்த
காடு அகக் கால்; கணம் கைதொழும் கால்; எம் கணாய் நின்ற கால்;
ஆடகக்கால்-அரிமால் தேர அல்லன் ஐயாற்றனவே.

[2]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.027   சிந்தை வாய்தல் உளான், வந்து;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;
பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்;
முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.

[1]
பாகம் மாலை,- மகிழ்ந்தனர்,- பால்மதி;
போக, ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
கோகம்மாலை, குலாயது ஓர் கொன்றையும்,
ஆக, ஆன்நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே.

[2]
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்தன்னுளே
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு, நான்,
துஞ்சும் போழ்து, நின் நாமத் திரு எழுத்து-
அஞ்சும் தோன்ற, அருளும் ஐயாறரே.

[3]
நினைக்கும் நெஞ்சின் உள்ளார்; நெடு மா மதில்-
அனைத்தும் ஒள் அழல்வாய் எரியூட்டினார்;
பனைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்
அனைத்துவாய்தலுள் ஆரும் ஐயாறரே.

[4]
பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்;
அரிய பாடலர்; ஆடலர்; அன்றியும்
கரிய கண்டத்தர்; காட்சி பிறர்க்கு எலாம்
அரியர்; தொண்டர்க்கு எளியர்-ஐயாறரே.

[5]
புலரும் போதும், இலாப் பட்ட பொன்சுடர்,
மலரும் போதுகளால் பணிய, சிலர்;
இலரும், போதும் இலாததும் அன்றியும்;
அலரும் போதும் அணியும் ஐயாறரே.

[6]
பங்கு அ(ம்)ம்மாலைக் குழலி, ஓர் பால்நிறக்
கங்கை, மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை, மாலை மதியமும், கண்ணியும்,
அங்கமாலையும், சூடும் ஐயாறரே.

[7]
முன்னை ஆறு முயன்று எழுவீர்; எலாம்
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள்!
மன் ஐ ஆறு மருவிய மாதவன்
தன் ஐயாறு தொழ, தவம் ஆகுமே.

[8]
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி
வானை ஆறு வளாயது காண்மினோ!
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன் அருள்
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே.

[9]
அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்;
அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சல்! என்று,
அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே,
அரக்கினான், அடியாலும்-ஐயாறனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.028   சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி
சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர்
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[1]
மூல வண்ணத்தராய், முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகி, கொழுஞ் சுடர்
நீலவண்ணத்தர் ஆகி, நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர்-ஐயாறரே.

[2]
சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும்,
அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும்,
பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும்,
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[3]
இருளின் வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும்,
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்,
அருளும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[4]
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்,
மழைக்கண் மா முகில் ஆகிய வண்ணமும்,
அழைக்கும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[5]
இண்டை வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும்,
கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மா மணி
அண்ட வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[6]
விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும்,
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்,
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்,
அரும்பின் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[7]
ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும்,
வேழ் ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும்,
வாழித் தீ உரு ஆகிய வண்ணமும்,
ஆழி வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[8]
செய் தவன் திருநீறு அணி வண்ணமும்,
எய்த நோக்க(அ)அரிது ஆகிய வண்ணமும்,
கைது காட்சி அரியது ஓர் வண்ணமும்,
ஐது வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[9]
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்,
இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்,
கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும்,
அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.037   ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி! ஆரமுதே! என்றேன், நானே;
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள்   பூதப்பல் படையாய்! என்றேன், நானே;
பேர் ஆயிரம் உடையாய்! என்றேன், நானே; பிறை சூடும் பிஞ்ஞகனே! என்றேன், நானே;
ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[1]
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா! புராணனே! என்றேன், நானே;
மூவா மதிசூடி! என்றேன், நானே; முதல்வா! முக்கண்ணனே! என்றேன், நானே;
ஏ ஆர் சிலையானே! என்றேன், நானே; இடும்பைக்கடல் நின்றும் ஏற வாங்கி,
ஆவா! என்று அருள்புரியும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[2]
அம் சுண்ண வண்ணனே! என்றேன், நானே;
அடியார்கட்கு ஆர் அமுதே! என்றேன், நானே;
நஞ்சு அணி கண்டனே! என்றேன், நானே; நாவலர்கள் நால்மறையே! என்றேன், நானே;
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே! என்றேன், நானே;
அஞ்சாதே ஆள்வானே! ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[3]
தொல்லைத் தொடு கடலே! என்றேன், நானே; துலங்கும் இளம்பிறையாய்! என்றேன், நானே;
எல்லை நிறைந்தானே! என்றேன், நானே; ஏழ்நரம்பின் இன் இசையாய்! என்றேன், நானே;
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய்! என்றேன், நானே;
எல்லை ஆம் ஐயாறா! என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[4]
இண்டைச் சடைமுடியாய்! என்றேன், நானே; இருசுடர் வானத்தாய்! என்றேன், நானே;
தொண்டர் தொழப்படுவாய்! என்றேன், நானே; துருத்தி நெய்த்தானத்தாய்! என்றேன், நானே;
கண்டம் கறுத்தானே! என்றேன், நானே; கனல் ஆகும் கண்ணானே! என்றேன், நானே;
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[5]
பற்றார் புரம் எரித்தாய்! என்றேன், நானே; பசுபதீ! பண்டரங்கா! என்றேன், நானே;
கற்றார்கள் நாவினாய்! என்றேன், நானே; கடு விடை ஒன்று ஊர்தியாய்! என்றேன், நானே;
பற்று ஆனார் நெஞ்சு உளாய்! என்றேன், நானே; பார்த்தற்கு அருள்செய்தாய்! என்றேன், நானே;
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[6]
விண்ணோர் தலைவனே! என்றேன், நானே; விளங்கும் இளம்பிறையாய்! என்றேன், நானே;
எண்ணார் எயில் எரித்தாய்! என்றேன், நானே; ஏகம்பம் மேயானே! என்றேன், நானே;
பண் ஆர் மறை பாடி! என்றேன், நானே; பசுபதீ! பால்நீற்றாய்! என்றேன், நானே;
அண்ணா! ஐயாறனே! என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[7]
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே! என்றேன், நானே;
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல, செல்வம் தருவானே! என்றேன், நானே;
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய்! என்றேன், நானே;
அவன் என்றே, ஆதியே! ஐயாற(ன்)னே!என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!

[8]
கச்சி ஏகம்பனே! என்றேன், நானே; கயிலாயா! காரோணா! என்றேன், நானே;
நிச்சல் மணாளனே! என்றேன், நானே; நினைப்பார் மனத்து உளாய்! என்றேன், நானே;
உச்சம் போது ஏறு ஏறீ! என்றேன், நானே; உள்குவார் உள்ளத்தாய்! என்றேன், நானே;
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[9]
வில் ஆடி வேடனே! என்றேன், நானே; வெண்நீறு மெய்க்கு அணிந்தாய்! என்றேன், நானே;
சொல் ஆய சூழலாய்! என்றேன், நானே; சுலா ஆய தொன்னெறியே! என்றேன், நானே;
எல்லாம் ஆய் என் உயிரே! என்றேன், நானே; இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்! என்றேன், நானே;
அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே! என்றுஎன்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.038   ஓசை ஒலி எலாம் ஆனாய்,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான் மருகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[1]
நோக்க(அ)ரிய திருமேனி உடையாய், நீயே; நோவாமே நோக்கு அருள வல்லாய், நீயே;
காப்ப(அ)ரிய ஐம்புலனும் காத்தாய், நீயே; காமனையும்   கண் அழலால் காய்ந்தாய், நீயே;
ஆர்ப்ப(அ)ரிய மா நாகம் ஆர்த்தாய், நீயே; அடியான்   என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;
தீர்ப்ப (அ)ரிய வல்வினை நோய் தீர்ப்பாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ!.

[2]
கனத்து அகத்துக் கடுஞ் சுடர் ஆய் நின்றாய், நீயே; கடல், வரை, வான், ஆகாயம், ஆனாய், நீயே;
தனத்து அகத்துத் தலை கலனாக் கொண்டாய், நீயே; சார்ந்தாரைத் தகைந்து ஆள வல்லாய், நீயே;
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய், நீயே; மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
சினத்து இருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[3]
வான் உற்ற மா மலைகள் ஆனாய், நீயே; வடகயிலை   மன்னி இருந்தாய், நீயே;
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய், நீயே; ஒளி மதியோடு, அரவு, புனல், வைத்தாய், நீயே;
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அடியான் என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேன் உற்ற சொல் மடவாள் பங்கன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[4]
பெண் ஆண் பிறப்பு இலியாய் நின்றாய், நீயே; பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே;
உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி முதல்வனாய் நின்றாய், நீயே;
கண் ஆய் உலகு எலாம் காத்தாய், நீயே; கழல்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் ஆர் மழுவாள் படையாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[5]
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய், நீயே; உற்றவர்க்கு ஓர் சுற்றம் ஆய் நின்றாய், நீயே;
கற்றிருந்த கலைஞானம் ஆனாய், நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகம் ஆய் நின்றாய், நீயே;
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;
செற்றிருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[6]
எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி இருந்தாய், நீயே;
நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர் விளக்கு ஆய் நின்றாய், நீயே;
பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[7]
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல் பெருமை உடையாய், நீயே;
பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க் கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே;
நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[8]
எண் திசைக்கும் ஒண்சுடர் ஆய் நின்றாய், நீயே;   ஏகம்பம் மேய இறைவன், நீயே;
வண்டு இசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே; வாரா உலகு அருள வல்லாய், நீயே;
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[9]
விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே; விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய், நீயே;
கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய், நீயே; காலங்கள் ஊழி ஆய் நின்றாய், நீயே;
தொண்டு ஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய், நீயே   திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[10]
ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர் ஊர வல்லாய், நீயே;
பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து
இறுத்தாய், நீயே;
ஊரும் புரம் மூன்றும் அட்டாய், நீயே; ஒண்
தாமரையானும் மாலும் கூடித்
தேரும் அடி என்மேல் வைத்தாய், நீயே திரு
ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.077   பரவும் பரிசு ஒன்று அறியேன்  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம் வளர்த்த நாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொற்சோதியீசுவரர் திருவடிகள் போற்றி )
பலநாட்களுக்குப் பின் சேரமான் பெருமாள் தம் தோழராகிய சுந்தரரைத் தன்னுடைய நாட்டிற்கு எழுந்தருளவேண்டுமென வேண்டிக்கொண்டார். அதற்கிசைந்த சுந்தரர் ஆரூர்ப் பெருமானைப் பணிந்து சேரர்கோனுடன் காவிரியின் தென்கரை வழியே திருக்கண்டி யூரை அடைந்தார். ஐயாறு எதிரே தோன்றிற்று. காவிரியாற்றிலோ வெள்ளம் கரை புரண்டோடிற்று. ஆற்றைக் கடந்து ஐயாறு சென்று தொழ நினைந்த சுந்தரர் பரவும் பரி சொன்றறியேன் என்று தொடங்கிப் பதிகம்பாடி ஐயாற்றிறைவனை அழைத்து நின்றார். வெள்ளம் இரு புறமும் ஒதுங்கி நின்று நடுவே வழிகாட்டிற்று. சுந்தரர் சேரர்கோனு டனும் அடியார்களுடனும் ஆற்றைக் கடந்து சென்று வழிபட்டனர். பின்னர் இருபெருமக்களும் பல தலங்களை வணங்கிக் கொண்டு கொங்குநாட்டைக் கடந்து சேர நாடடைந்தனர்.
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்;
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன், நான்-
கரவு இல் அருவி கமுகு உண்ண, தெங்கு அம் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[1]
எங்கே போவேன் ஆயிடினும், அங்கே வந்து என் மனத்தீராய்,
சங்கை ஒன்றும் இன்றியே தலை நாள் கடை நாள் ஒக்கவே;
கங்கை சடை மேல் கரந்தானே! கலை மான் மறியும் கனல் மழுவும்
தங்கும், திரைக் காவிரிக் கோட்டத்து, ஐயாறு உடைய அடிகளோ!

[2]
மருவிப் பிரிய மாட்டேன், நான்; வழி நின்றொழிந்தேன்; ஒழிகிலேன்-
பருவி விச்சி(ய) மலைச்சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி,
குருவி ஓப்பி, கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டந்
தர, அம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[3]
பழகா நின்று பணி செய்வார், பெற்ற பயன் ஒன்று அறிகிலேன்,
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு; ஏகபடம் ஒன்று அரைச் சாத்தி!
குழகா! வாழை, குலை, தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே,
அழகு ஆர் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[4]
பிழைத்த பிழை ஒன்று அறியேன், நான்; பிழையைத் தீரப் பணியாயே!
மழைக் கண் நல்லார் குடைந்து ஆட, மலையும் நிலனும் கொள்ளாமை
கழைக் கொள் பிரசம் கலந்து, எங்கும் கழனி மண்டி, கை ஏறி,
அழைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[5]
கார்க் கொள் கொன்றை சடைமேல் ஒன்று உடையாய்! விடையாய்! நகையினால்
மூர்க்கர் புரம் மூன்று எரி செய்தாய்! முன் நீ; பின் நீ; முதல்வன் நீ
வார்க் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு,
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[6]
மலைக்கண் மடவாள் ஒரு பால் ஆய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்!
சிலைக் கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய்! தீர்த்தன் நீ
மலைக் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு,
அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[7]
போழும் மதியும், புனக் கொன்றை, புனல், சேர் சென்னிப் புண்ணியா!
சூழும் அரவச் சுடர்ச் சோதீ! உன்னைத் தொழுவார் துயர் போக,
வாழுமவர்கள், அங்கு அங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட!
ஆழும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[8]
கதிர்க்(க்) கொள் பசியே ஒத்தே நான் கண்டேன், உம்மைக் காணாதேன்;
எதிர்த்து நீந்த மாட்டேன், நான்-எம்மான் தம்மான் தம்மானே!
விதிர்த்து மேகம் மழை பொழிய, வெள்ளம் பரந்து, நுரை சிதறி,
அதிர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[9]
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்;
தேச வேந்தன் திருமாலும், மலர் மேல் அயனும், காண்கிலார்
தேசம் எங்கும் தெளித்து ஆடத் தெண்நீர் அருவி கொணர்ந்து எங்கும்
வாசம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[10]
கூடி அடியார் இருந்தாலும், குணம் ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்;
ஊடி இருந்தும் உணர்கிலேன், உம்மை, தொண்டன், ஊரனேன்,
தேடி எங்கும் காண்கிலேன்; திரு ஆரூரே சிந்திப்பன்-
ஆடும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list