சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துன்னம் பெய் கோவணமும் தோலும்
பண் - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=WRhi23nltl0
2.050   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குன்ற வார்சிலை, நாண் அரா,
பண் - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=h2o01V9o3ZU
7.045   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருஆமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Vbsn6ICya_0

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.044   துன்னம் பெய் கோவணமும் தோலும்  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருஆமாத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?

[1]
கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில்
மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி,
அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்
பெம்மான்! என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.

[2]
பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்,
ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.

[3]
கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை மாதராள
பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண் எல்லாம் காணாத கண்களே

[4]
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே
சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே?

[5]
சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால்
காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான்,
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான்,அத்
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.

[6]
மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

[7]
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால்,
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே

[8]
புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே?
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான், எம்
வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே?

[9]
பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ சார,
கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான்
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே?

[10]
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,
கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.050   குன்ற வார்சிலை, நாண் அரா,  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருஆமாத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி, கூர் எரி, காற்றின், மும்மதில்
வென்ற ஆறு எங்ஙனே? விடை ஏறும் வேதியனே!
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!

[1]
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்,
வெருவ, உண்டு உகந்த அருள் என்கொல்? விண்ணவனே!
கரவு இல் மா மணி பொன் கொழித்து, இழி சந்து கார்
அகில் தந்து, பம்பை நீர்
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே!

[2]
நீண்ட வார்சடை தாழ, நேரிழை பாட, நீறு மெய் பூசி, மால் அயன்
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என்?
பூண்ட கேழல் மருப்பு, அரா, விரிகொன்றை, வாள் வரி ஆமை, பூண் என
ஆண்ட நாயகனே! ஆமாத்தூர் அம்மானே!

[3]
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான்விழித் திருமாதைப் பாகம் வைத்து
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்?
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி, இன் இசை
பாட, நீள் பதி
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே!

[4]
தொண்டர் வந்து வணங்கி, மா மலர் தூவி. நின் கழல் ஏத்துவார் அவர்
உண்டியால் வருந்த, இரங்காதது என்னை கொல் ஆம்?
வண்டல் ஆர் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே!

[5]
ஓதி, ஆரணம் ஆய நுண்பொருள், அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி
நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்?
சோதியே! சுடரே! சுரும்பு அமர் கொன்றையாய்! திரு நின்றியூர் உறை
ஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே!

[6]
மங்கை வாள் நுதல் மான் மனத்து இடை வாடி ஊட, மணம் கமழ் சடைக்
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொல்
ஆம்?
பங்கயமது உண்டு வண்டு இசை பாட, மா மயில் ஆட, விண் முழவு
அம் கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே!

[7]
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்து இடை
வென்று அடர்த்து, ஒருபால் மடமாதை விரும்புதல் என்?
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபது தான் நெரிதர
அன்று அடர்த்து உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

[8]
செய்யா தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி, தேட, நீள் முடி
வெய்ய ஆர் அழல் ஆய் நிமிர்கின்ற வெற்றிமை என்?
தையலாளொடு பிச்சைக்கு இச்சை, தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு,
ஐயம் ஏற்று உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

[9]
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற, நின் அடி
பத்தர் பேண, நின்ற பரம் ஆய பான்மை அது என்?
முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன்! என்று இமையோர் பரவிடும்
அத்தனே! அரியாய்! ஆமாத்தூர் அம்மானே!

[10]
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து, மயங்கு இருள்(ள்), எரி ஏந்தி, மாநடம்
ஆடல் மேயது என்? என்று ஆமாத்தூர் அம்மானை,
கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.045   காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருஆமாத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதர் திருவடிகள் போற்றி )
காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன்; ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆட்-
பூண்டனன் பூண்டனன்; பொய் அன்று; சொல்லுவன்; கேண்மின்கள்:
மீண்டனன் மீண்டனன், வேதவித்து அல்லாதவர்கட்கே.

[1]
பாடுவன் பாடுவன், பார்ப் பதிதன் அடி பற்றி, நான்
தேடுவன் தேடுவன்; திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளை,
கூடுவன் கூடுவன், குற்றம் அது அற்று என் குறிப்பொடே.

[2]
காய்ந்தவன் காய்ந்தவன், கண் அழலால் அன்று காமனை;
பாய்ந்தவன் பாய்ந்தவன், பாதத்தினால் அன்று கூற்றத்தை;
ஆய்ந்தவன் ஆய்ந்தவன், ஆமாத்தூர் எம் அடிகளார்,
ஏய்ந்தவன் ஏய்ந்தவன், எம்பிராட்டியைப் பாகமே.

[3]
ஓர்ந்தனன் ஓர்ந்தனன், உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள்,
சேர்ந்தனன் சேர்ந்தனன், சென்று திரு ஒற்றியூர் புக்கு;
சார்ந்தனன் சார்ந்தனன், சங்கிலி மென்தோள் தடமுலை;
ஆர்ந்தனன் ஆர்ந்தனன், ஆமாத்தூர் ஐயன் அருள் அதே.

[4]
வென்றவன் வென்றவன், வேள்வியில் விண்ணவர் தங்களை;
சென்றவன் சென்றவன், சில்பலிக்கு என்று தெரு இடை;
நின்றவன் நின்றவன், நீதி நிறைந்தவர் தங்கள் பால்;
அன்று அவன் அன்று அவன், செய் அருள்; ஆமாத்தூர் ஐயனே.

[5]
காண்டவன் காண்டவன், காண்டற்கு அரிய கடவுளாய்;
நீண்டவன் நீண்டவன், நாரணன் நான்முகன் நேடவே;
ஆண்டவன் ஆண்டவன், ஆமாத்தூரையும் எனையும் ஆள்;
பூண்டவன் பூண்டவன், மார்பில் புரிநூல் புரளவே.

[6]
எண்ணவன் எண்ணவன், ஏழ் உலகத்து உயிர் தங்கட்கு;
கண் அவன் கண் அவன், காண்டும் என்பார் அவர் தங்கட்கு;
பெண் அவன் பெண் அவன், மேனி ஓர்பாகம்; ஆம், பிஞ்ஞகன்;
அண்ணவன் அண்ணவன்-ஆமாத்தூர் எம் அடிகளே.

[7]
பொன்னவன் பொன்னவன்; பொன்னைத் தந்து என்னைப் போக விடா
மின்னவன் மின்னவன்; வேதத்தின் உள் பொருள் ஆகிய
அன்னவன் அன்னவன்; ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன்! என் மனத்து இன்புற்று இருப்பனே.

[8]
தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்;
நாடுவன் நாடுவன், நாபிக்கு மேலே ஓர் நால்விரல்;
மா(ட்)டுவன் மா(ட்)டுவன், வன் கை பிடித்து; மகிழ்ந்து உளே
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளே.

[9]
உற்றனன், உற்றவர் தம்மை ஒழிந்து, உள்ளத்து உள்பொருள்
பற்றினன், பற்றினன், பங்கயச் சேவடிக்கே செல்ல;
அற்றனன் அற்றனன்; ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆட்-
பெற்றனன் பெற்றனன், பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே.

[10]
ஐயனை, அத்தனை, ஆள் உடை ஆமாத்தூர் அண்ணலை,
மெய்யனை, மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை,
மையனை, மை அணி கண்டனை, வன் தொண்டன்-ஊரன்-சொல்
பொய் ஒன்றும் இன்றிப் புலம்புவார் பொன் கழல் சேர்வரே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list