|  Back to Top  Audio: https://www.youtube.com/watch?v=Eogq2gNyTwQதிருஞானசம்பந்த சுவாமிகள்    திருக்கடைக்காப்பு
 1 -ஆம் திருமுறை   பதிகம்  1.041  
 சீர் அணி திகழ் திருமார்பில்
 பண் - தக்கராகம்   (திருப்பாம்புரம்  பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி)
 
 
 
   
| சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர், வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
 கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்
 பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.
 
 
 | [1] |    
| கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர், அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள்,
 மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவ,
 பக்கம் பல் பூதம் பாடிட, வருவார் பாம்புர நன் நகராரே.
 
 
 | [2] |    
| துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி, பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி, பித்தர் ஆய்த் திரியும் எம்பெருமான்,
 மன்னு மா மலர்கள் விட, நாளும் மாமலையாட்டியும் தாமும்,
 பன்னும் நால்மறைகள் பாடிட, வருவார் பாம்புர நன்நகராரே.
 
 
 | [3] |    
| துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான், நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர், நள் இருள் நடம் செயும் நம்பர்
 மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட, மாடமாளிகை தன்மேல் ஏறி,
 பஞ்சு சேர் மெல் அடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்நகராரே.
 
 
 | [4] |    
| நதி அதன் அயலே நகுதலை மாலை, நாள்மதி, சடைமிசை அணிந்து, கதி அது ஆக, காளி முன் காண, கான் இடை நடம் செய்த கருத்தர்;
 விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவாப்
 பதி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.
 
 
 | [5] |    
| ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்; ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்; மாதினை இடமா வைத்த எம் வள்ளல்; மான்மறி ஏந்திய மைந்தர்;
 ஆதி, நீ அருள்! என்று அமரர்கள் பணிய, அலைகடல் கடைய, அன்று எழுந்த
 பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்நகராரே.
 
 
 | [6] |    
| மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு ஒரு முகம் ஒழித்து, ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி, அனல் அது ஆடும் எம் அடிகள்;
 காலனைக் காய்ந்து தம் கழல் அடியால், காமனைப் பொடிபட நோக்கி,
 பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன்நகராரே.
 | [7] |    
| விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க, மெல்லிய திருவிரல் ஊன்றி, அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள்; அனல் அது ஆடும் எம் அண்ணல்
 மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட, வந்து இழி அரிசிலின் கரைமேல்
 படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன்நகராரே.
 
 
 | [8] |    
| கடி படு கமலத்து அயனொடு மாலும், காதலோடு அடிமுடி தேட, செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீவணர்; எம்முடைச் செல்வர்;
 முடி உடை அமரர் முனிகணத்தவர்கள் முறை முறை அடி பணிந்து ஏத்த,
 படி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.
 
 
 | [9] |    
| குண்டர், சாக்கியரும், குணம் இலாதாரும், குற்றுவிட்டு உடுக்கையர் தாமும், கண்ட ஆறு உரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்;
 வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்;
 பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்நகராரே.
 
 
 | [10] |    
| பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக் கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி
 நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார்
 சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே.
 
 
 | [11] |   Back to Top  Audio: https://www.youtube.com/watch?v=oF4wlCt8je0திருஞானசம்பந்த சுவாமிகள்    திருக்கடைக்காப்பு
 2 -ஆம் திருமுறை   பதிகம்  2.085  
 வேய் உறு தோளி பங்கன்,
 பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்)   )
 அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது.   சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து  மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள்.  ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப்  பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி  நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க  வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார்.
 சனி, இராகு, கேது பெயர்ச்சி,  கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம்.
 
   
| வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், 
மிகநல்ல வீணை தடவி, மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
 ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, 
சனி, பாம்பு இரண்டும், உடனே
 ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, 
அடியார் அவர்க்கு மிகவே.
 
 
 | [1] |    
| என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, 
எருது ஏறி, ஏழை உடனே, பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் 
உளமே புகுந்த அதனால்
 ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், 
உடன் ஆய நாள்கள் அவைதாம்,
 அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, 
அடியார் அவர்க்கு மிகவே.
 
 
 | [2] |    
| உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து, 
உமையோடும், வெள்ளை விடை மேல், முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் 
உளமே புகுந்த அதனால்
 திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, 
திசை தெய்வம் ஆன பலவும்,
 அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, 
அடியார் அவர்க்கு மிகவே.
 
 
 | [3] |    
| மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து  
மறை ஓதும் எங்கள் பரமன், நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என் 
உளமே புகுந்த அதனால்
 கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், 
கொடு நோய்கள் ஆனபலவும்,
 அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, 
அடியார் அவர்க்கு மிகவே.
 
 
 | [4] |    
| நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும் 
விடை ஏறும் நங்கள் பரமன், துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
 வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும், 
மிகை ஆன பூதம் அவையும்,
 அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, 
அடியார் அவர்க்கு மிகவே.
 
 
 | [5] |    
| வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடன் ஆய்,
 நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
 உளமே புகுந்த அதனால்
 கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
 கொடு நாகமோடு, கரடி,
 ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
 அடியார் அவர்க்கு மிகவே.
 
 
 | [6] |    
| செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
 ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
 உளமே புகுந்த அதனால்
 வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும்,
 வினை ஆன, வந்து நலியா;
 அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
 அடியார் அவர்க்கு மிகவே.
 
 
 | [7] |    
| வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து, மடவாள் தனோடும் உடன் ஆய்,
 வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
 உளமே புகுந்த அதனால்
 ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
 இடர் ஆன வந்து நலியா;
 ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
 அடியார் அவர்க்கு மிகவே.
 
 
 | [8] |    
| பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும் எங்கள் பரமன்,
 சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
 உளமே புகுந்த அதனால்
 மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
 வரு காலம் ஆன பலவும்,
 அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
 அடியார் அவர்க்கு மிகவே.
 
 
 | [9] |    
| கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன்,
 மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
 உளமே புகுந்த அதனால்
 புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
 திருநீறு செம்மை திடமே;
 அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, அடியார் அவர்க்கு
 மிகவே.
 
 
 | [10] |    
| தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி, வளர் செம்பொன் எங்கும் நிகழ,
 நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
 மறைஞான ஞானமுனிவன்,
 தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
 நலியாத வண்ணம் உரை செய்
 ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
 அரசு ஆள்வர்; ஆணை நமதே.
 
 
 | [11] |   Back to Top  Audio: https://www.youtube.com/watch?v=yEKUo3iRd8cதிருஞானசம்பந்த சுவாமிகள்    திருக்கடைக்காப்பு
 3 -ஆம் திருமுறை   பதிகம்  3.010  
 அலை, வளர் தண்மதியோடு அயலே
 பண் - காந்தாரபஞ்சமம்   (திருஇராமேச்சுரம்  இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
 
 
 
   
| அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமை முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;
 இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்,
 தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே.
 
 
 | [1] |    
| தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன் பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற,
 ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
 மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.
 
 
 | [2] |    
| மான் அன நோக்கி வைதேவி தன்னை ஒரு மாயையால் கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்,
 ஈனம் இலாப் புகழ் அண்ணல், செய்த இராமேச்சுரம்
 ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே.
 
 
 | [3] |    
| உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு வேட்கையான், வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
 விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
 அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான் அல்லனே!
 
 
 | [4] |    
| ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி, பல ஊர்தொறும், வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய, விறல் ஆர்ந்தது ஓர்
 ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
 பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே.
 
 
 | [5] |    
| அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன், பணை இலங்கும் முடிபத்து இறுத்த, பழி போக்கிய
 இணை இலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்,
 துணை இலி தூ மலர்ப்பாதம் ஏத்த, துயர் நீங்குமே.
 
 
 | [6] |    
| சனி, புதன், ஞாயிறு, வெள்ளி, திங்கள், பலதீயன, முனிவது செய்து உகந்தானை வென்று, அவ் வினை மூடிட,
 இனி அருள் நல்கிடு! என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்,
 பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே!
 
 
 | [7] |    
| பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான் தன் பெயர் சாய் கெட, அரு வரையால் அடர்த்து, அன்று நல்கி, அயன் மால் எனும்
 இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து
 ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே!
 
 
 | [8] |    
| சாக்கியர், வன் சமண்கையர், மெய்யில்-தடுமாற்றத்தார் வாக்கு இயலும்(ம்) உரை பற்று விட்டு, மதி ஒண்மையால்,
 ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
 ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்மின்(ன்), அருள் ஆகவே!
 
 
 | [10] |    
Back to Top| பகலவன் மீது இயங்காமைக் காத்த பதியோன்தனை இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்,
 புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ், புந்தியால்,
 அகலிடம் எங்கும் நின்று, ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.
 
 
 | [11] |  நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
 தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
 காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
 Back to Top
 
 
 This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:56 +0000
 
 |  |