சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.002   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண்டு எலாம் மலர விரை
பண் - இந்தளம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Sc0T0tKfZKo
2.106   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
பண் - நட்டராகம்   (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=cMWzX_dVUv0
Audio: https://sivaya.org/audio/2.106 Enna Punniyam.mp3
3.106   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பள்ளம் அது ஆய படர்
பண் - பழம்பஞ்சுரம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BpD1Nqb02xo
5.066   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதம் ஆர் கடலின் விடம்
பண் - திருக்குறுந்தொகை   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FpoSOnE4LJw
6.072   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை ஆர் புனல் கங்கை
பண் - திருத்தாண்டகம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
6.073   திருநாவுக்கரசர்   தேவாரம்   கருமணி போல் கண்டத்து அழகன்
பண் - திருத்தாண்டகம்   (திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் கபர்த்தீசுவரர், சுந்தரகோடீசுவரர் பெரியநாயகியம்மை, பந்தாடுநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LrztdYztjPU
11.011   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
பண் -   (திருவலஞ்சுழி )

Back to Top
நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  
11.011   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  
பண் -   (திருத்தலம் திருவலஞ்சுழி ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற்
படஅர வொடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்
உடுத்த மணிநீர் வலஞ்சுழி
அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.

[1]
அடிப்போது தம் தலைவைத் தவ்வடிகள் உன்னிக்
கடிப்போது கைக்கொண்டார் கண்டார் முடிப்போதா
வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும்
காணாத செம்பொற் கழல்.

[2]
கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லாத்
தழல்வண்ணங் கண்டே தளர்ந்தார் இருவர் அந் தாமரையின்
நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம்
அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.

[3]
அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற்
கடவுள் மன்னிய தடம்மல்கு வலஞ்சுழிப்
பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்
திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த்
திருந்திருங் குழலியைக் கண்டு
வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே.

[4]
போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்
தாதெலாம் தன்மேனி தைவருமால் தீதில்
மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்
பிறைக்கண்டங் கண்டணைந்த பெண்.

[5]
பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம் பெரு மான்திருமால்
வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான் மதி சூடிநெற்றிக்
கண்கொண்ட கோபங் கலந்தன போல்மின்னிக் கார்ப்புனத்துப்
பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன

[6]
முகிற்கணம் முழங்க முனிந்த வேழம்
எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற
அணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும்
சாரல் தண்பொழில் அணைந்து சேரும்
தடம்மாசு தழீஇய தகலிடம் துடைத்த
தேனுகு தண்தழை தெய்வம் நாறும்
சருவரி வாரல்எம் பெருமநீர் மல்கு
சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி
அணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்த
மணிநீர்க் குவளை அன்ன
அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.

[7]
பொருள்தக்கீர் சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும்
அருள்தக்கீர் யாதுநும்ஊர் என்றேன் மருள்தக்க
மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார்
தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு.

[8]
சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே
வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா
றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண்நக்கன்
பங்கன் றிருவர்க் கொருவடி வாகிய

[9]
பாவை ஆடிய துறையும் பாவை
மருவொடு வளர்ந்த வன்னமும் மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உளங்கொண்ட சூழலுங் கள்ளக்
கருங்கண் போன்ற காவியும் நெருங்கி
அவளே போன்ற தன்றே தவளச்
சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி
வண்டினம் பாடுஞ் சோலைக்
கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.

[10]
தானேறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல்
தேனேறு கொன்றைத் திறம்பேசேன் வானேறு
மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
கையார் வளைகவர்ந்த வாறு.

[11]
ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக்
கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்கு
நாறுதண் கொம்பரன் னீர்கள்இன் னேநடந் தேகடந்தார்
சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே.

[12]
நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ்நூற் சீறியாழ்ப் பாண
பொய்கை யூரன் புதுமணம் புணர்தர
மூவோம் மூன்று பயன்பெற் றனமே
நீ அவன்
புனைதார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமற் பேச வன்மையில்
வான்அர மகளிர் வான்பொருள் பெற்றனை
அவரேல்
எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ
விழையா இன்பம் பெற்றனர் யானேல்
அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச்
சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பின்
தீநீர் அன்ன வாய்நீர் சோரும்
சிலம்புகுரற் சிறுபறை பூண்ட
அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே.

[13]
தனமேறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய்
மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ இனமேறிப்
பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்
கோடாலம் கண்டணைந்த கொம்பு.

[14]
கொம்பார் குளிர்மறைக் காடனை வானவர் கூடிநின்று
நம்பா என வணங் கப்பெறு வானை நகர்எரிய
அம்பாய்ந் தவனை வலஞ்சுழி யானையண் ணாமலைமேல்
வம்பார் நறுங்கொன்றைத் தாருடை யானை வணங்குதுமே.

[15]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.002   விண்டு எலாம் மலர விரை  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவலஞ்சுழி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு காப்பகத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?

[1]
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி,
மூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே?

[2]
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாது அளாய்
வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி,
சுண்ணவெண்பொடிக்கொண்டு மெய் பூச வலீர்! சொலீர்
விண்ணவர் தொழ, வெண்தலையில் பலி கொண்டதே?

[3]
கோடுஎலாம் நிறையக் குவளை மலரும் குழி
மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி,
சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர்
நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?

[4]
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு
போய்,
வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி,
முல்லைவெண்முறுவல் நகையாள் ஒளியீர்! சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே?

[5]
பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில் பல்மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
தேசம் நீர்; திரு நீர்; சிறுமான்மறியீர்! சொலீர்
ஏச, வெண்தலையில் பலி கொள்வது இலாமையே?

[6]
கந்தமாமலர்ச் சந்தொடு கார் அகிலும் தழீஇ,
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
அந்தம் நீர், முதல் நீர், நடு ஆம் அடிகேள்! சொலீர்
பந்தம் நீர் கருதாது, உலகில் பலி கொள்வதே?

[7]
தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?

[8]
தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பல்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?

[9]
உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது இன் அருள
வரம் மனும் பெறல் ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர்! சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே?

[10]
வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி
நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.106   என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருவலஞ்சுழி ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சித்தீசநாதர் திருவடிகள் போற்றி )
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல்
வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,
முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.

[1]
விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு
நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை,
உலகத்தில்
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம்
ஆகக்
கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது
இருந்தமையாலே.

[2]
திருந்தலார் புரம் தீ எழச் செறுவன; இறலின் கண்
அடியாரைப்
பரிந்து காப்பன; பத்தியில் வருவன; மத்தம் ஆம்
பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன; மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக
இருந்த நாயகன், இமையவர் ஏத்திய, இணை அடித்தலம்
தானே.

[3]
கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்; அறத்திறம்
முனிவர்க்கு அன்று
இறைவர் ஆல் இடை நீழலில் இருந்து உகந்து இனிது
அருள் பெருமானார்;
மறைகள் ஓதுவர்; வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து,
அருங்கானத்து,
அறை கழல் சிலம்பு ஆர்க்க, நின்று ஆடிய அற்புதம்
அறியோமே!

[4]
மண்ணர்; நீரர்; விண்; காற்றினர்; ஆற்றல் ஆம் எரி உரு;
ஒருபாகம்
பெண்ணர்; ஆண் எனத் தெரிவு அரு வடிவினர்;
பெருங்கடல் பவளம் போல்
வண்ணர்; ஆகிலும், வலஞ்சுழி பிரிகிலார்; பரிபவர் மனம்
புக்க
எண்ணர்; ஆகிலும், எனைப் பல இயம்புவர், இணை அடி
தொழுவாரே.

[5]
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்; மடமாதர்
இருவர் ஆதரிப்பார்; பலபூதமும் பேய்களும் அடையாளம்;
அருவராதது ஒர் வெண்தலை கைப் பிடித்து, அகம்தொறும்
பலிக்கு என்று
வருவரேல், அவர் வலஞ்சுழி அடிகளே; வரி வளை
கவர்ந்தாரே!

[6]
குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், குலவிய
நெய்த்தானம்,
என்று இவ் ஊர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர்;
இமையவர் பணி கேட்பார்;
அன்றி, ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம்; வலஞ்சுழி
அரனார்பால்
சென்று, அ(வ்) ஊர்தனில் தலைப்படல் ஆம் என்று
சேயிழை தளர்வு ஆமே.

[7]
குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெரு உற, குல
வரைப் பரப்பு ஆய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள்
இருபதும் ஊன்றி,
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி
எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்; அல்லவர் காணாரே.

[8]
அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும், அரவு
அணைத் துயின்றானும்,
கழலும் சென்னியும் காண்பு அரிது ஆயவர்; மாண்பு அமர்
தடக்கையில்
மழலை வீணையர்; மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு
பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள்
களைவாரே.

[9]
அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம் புரிந்து
அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர்; மற்று அவை தேறன் மின்! மாறா
நீர்
மறி உலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய
பெருமானைப்
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில், அளவு அறுப்பு
ஒண்ணாதே.

[10]
மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல்
காழி
நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய
தமிழ்மாலை
ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர்
தம்மை
வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து
அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.106   பள்ளம் அது ஆய படர்  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருவலஞ்சுழி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு காப்பகத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரைக் கங்கை
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன், விடை ஏறும்
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி,
உள்ளம் உருக, உணருமின்கள்! உறு நோய் அடையாவே.

[1]
கார் அணி வெள்ளை மதியம் சூடி, கமழ் புன்சடை தன்மேல்
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து,
வார் அணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே!

[2]
பொன் இயலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்து
மின் இயலும் சடை தாழ, வேழ உரி போர்த்து, அரவு ஆட,
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம்; பிணி போமே.

[3]
விடை, ஒரு பால்; ஒரு பால் விரும்பு மெல்லியல்; புல்கியது ஓர்
சடை, ஒரு பால்; ஒருபால் இடம் கொள் தாழ்குழல் போற்று இசைப்ப,
நடை, ஒரு பால்; ஒருபால் சிலம்பு; நாளும் வலஞ்சுழி சேர்
அடை, ஒரு பால்; அடையாத செய்யும் செய்கை
அறியோமே!

[4]
கை அமரும் மழு, நாகம், வீணை, கலைமான் மறி, ஏந்தி;
மெய் அமரும் பொடிப் பூசி; வீசும் குழை ஆர்தரு தோடும்
பை அமரும்(ம்) அரவு ஆட, ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம்
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே.

[5]
தண்டொடு சூலம் தழைய ஏந்தி, தையல் ஒருபாகம்
கண்டு, இடு பெய் பலி பேணி நாணார், கரியின் உரி-தோலர்,
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத்
தொடர்வோமே.

[6]
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து, வளையாதார்
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான், இடர் நீங்க
மல் இயலும் திரள்தோள் எம் ஆதி, வலஞ்சுழி மா நகரே
புல்கிய வேந்தனைப் புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே.

[7]
வெஞ்சின வாள் அரக்கன், வரையை விறலால் எடுத்தான், தோள
அஞ்சும் ஒரு ஆறு இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார்; அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர்; என்றும் நணுகும் இடம்போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே.

[8]
ஏடு இயல் நான்முகன், சீர் நெடுமால், என நின்றவர் காணார்
கூடிய கூர் எரி ஆய் நிமிர்ந்த குழகர்; உலகு ஏத்த
வாடிய வெண்தலை கையில் ஏந்தி; வலஞ்சுழி மேய எம்மான்-
பாடிய நால்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே!

[9]
குண்டரும் புத்தரும், கூறை இன்றிக் குழுவார், உரை நீத்து
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான்; அழல் ஆடி
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன்; எம்மான்
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே.

[10]
வாழி எம்மான், எனக்கு எந்தை, மேய வலஞ்சுழி மா நகர்மேல்,
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை,
ஆழி இவ் வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும்; உருவும் உயர்வு ஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.066   ஓதம் ஆர் கடலின் விடம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவலஞ்சுழி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு காப்பகத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,
பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை,
மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை,
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[1]
கயிலை நாதன், கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன்,
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப்
பயில்கிலார்சிலர் - பாவித்தொழும்பரே.

[2]
இளைய காலம் எம்மானை அடைகிலாத்
துளை இலாச் செவித் தொண்டர்காள்! நும் உடல்
வளையும் காலம், வலஞ்சுழி ஈசனைக்
களைக்கண் ஆகக் கருதி, நீர் உய்ம்மினே!

[3]
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்கு ஆய்க்
குறைவு இலாக் கொடுங் கூற்று உதைத்திட்டவன்,
மறை கொள் நாவன், வலஞ்சுழி மேவிய
இறைவனை, இனி என்றுகொல் காண்பதே?

[4]
விண்டவர் புரம் மூன்றும் எரி கொளத்
திண் திறல் சிலையால் எரி செய்தவன்,
வண்டு பண் முரலும் தண் வலஞ்சுழி
அண்டனுக்கு, அடிமைத் திறத்து ஆவனே.

[5]
படம் கொள் பாம்பொடு பால்மதியம் சடை
அடங்க ஆள வல்லான், உம்பர் தம்பிரான்,
மடந்தை பாகன், வலஞ்சுழியான், அடி
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே.

[6]
நாக்கொண்டு(ப்) பரவும்(ம்) அடியார் வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்,
மாக் கொள் சோலை வலஞ்சுழி ஈசன் தன்
ஏக் கொளப் புரம் மூன்று எரி ஆனவே.

[7]
தேடுவார், பிரமன் திருமால் அவர்;
ஆடு பாதம் அவரும் அறிகிலார்;
மாட வீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடுவான் உறுகின்றது, என் சிந்தையே.

[8]
கண் பனிக்கும்; கை கூப்பும்; கண் மூன்று உடை
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்;
வண் பொன்(ன்)னித் தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இப் பொனைச் செய்த பரிசு இதே!

[9]
இலங்கை வேந்தன் இருபது தோள் இற
நலம் கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான்,
மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழி
வலம் கொள்வார் அடி என் தலைமேலவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.072   அலை ஆர் புனல் கங்கை  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவலஞ்சுழி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு காப்பகத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்டம் ஆடி, வேடம்
தொலையாத வென்றியார், நின்றியூரும் நெடுங்களமும் மேவி, விடையை மேற்கொண்டு,
இலை ஆர் படை கையில் ஏந்தி, எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த,
மலை ஆர் திரள் அருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு, இடமா மன்னினாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.073   கருமணி போல் கண்டத்து அழகன்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை, பந்தாடுநாயகியம்மை உடனுறை அருள்மிகு கபர்த்தீசுவரர், சுந்தரகோடீசுவரர் திருவடிகள் போற்றி )
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்; கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்;
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்; பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்;
வரு மணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய்; வரதன் கண்டாய்
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[1]
கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்; கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்;
அலைக் கங்கை செஞ்சடை மேல் ஏற்றான கண்டாய்; அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்;
மலைப் பண்டம் கொண்டு வரும் நீர்ப் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத் தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில் கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே.

[2]
செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய்; சிவன் கண்டாய்; தேவர் பெருமான் கண்டாய்;
பந்து ஆடு மெல் விரலாள் பாகன் கண்டாய்; பாலோடு, நெய், தயிர், தேன், ஆடி கண்டாய்;
மந்தாரம் உந்தி வரும் நீர்ப்பொன்னி   வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய்
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[3]
பொடி ஆடும் மேனிப் புனிதன் கண்டாய்; புள் பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்;
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்; எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்;
மடல் ஆர் திரை புரளும் காவிரீ வாய்   வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
கொடி ஆடு நெடு மாடக் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[4]
அக்கு, அரவம், அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய்; அருமறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய்; சதாசிவன் காண்; சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்;
மைக் கொள் மயில்-தழை கொண்டு வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மழுவன் கண்டாய்
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[5]
சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்; சதாசிவன் கண்டாய்; சங்கரன் தான் கண்டாய்;
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய்; சுடர் ஒளி ஆய்த் தொடர்வு அரிது ஆய் நின்றான் கண்டாய்;
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா முனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடி மாடக் கொட்டையூரில்   கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[6]
அணவு அரியான் கண்டாய்; அமலன் கண்டாய்; அவி நாசி கண்டாய்; அண்டத்தான் கண்டாய்;
பண மணி மா நாகம் உடையான் கண்டாய்; பண்டரங்கன் கண்டாய்; பகவன் கண்டாய்;
மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான்
கண்டாய்; மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[7]
விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான் கண்டாய்; வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்;
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய்; அழல் ஆடி கண்டாய்; அழகன் கண்டாய்;
வரு திரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய்
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[8]
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்; தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்;
இளம்பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய்; எட்டு-எட்டு இருங் கலையும் ஆனான் கண்டாய்;
வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[9]
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய்; விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்;
தண் தாமரையானும், மாலும், தேடத் தழல் பிழம்பு ஆய் நீண்ட கழலான் கண்டாய்;
வண்டு ஆர் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்   கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list